காலக்கெடுவுக்குள் வெளிநாட்டுப் படைகள் முழுதாக வெளியேறவேண்டும் - தாலிபன்

Afghanistan
Sasikala| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (11:22 IST)
சுமார் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள், தாங்களே அளித்த செப்டம்பர் மாத கெடுவுக்குள் முழுதாக வெளியேறிவிடவேண்டும். அதற்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டுப் படையினர் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவர் என்று தாலிபன் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

தூதரகங்களையும், காபூல் சர்வதேச விமான நிலையத்தையும் பாதுகாக்க முக்கியமாக அமெரிக்கத் துருப்புகளைக் கொண்ட 1000 படையினர் மட்டும் கெடுவுக்குப் பிறகும் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்படும் பின்னணியில் தாலிபனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
 
20 ஆண்டுகளாக அந்நாட்டில் உள்ள நேட்டோ படையினர் கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில் வன்முறை அதிகரித்துள்ளது. தாலிபன்கள் அதிக பிரதேசங்களைப்  பிடித்துக்கொண்டனர். ஆப்கன் படைகள் தனியாக நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில், காபூல் நகரின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரிக்கிறது.
 
காபூல் நகரை ராணுவ ரீதியாகப் பிடிப்பது தாலிபன் கொள்கை அல்ல என்று தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் தெரிவித்துள்ளார். கத்தாரில் உள்ல  தாலிபன் அலுவலகத்தில் இருந்து பிபிசியிடம் பேசிய அவர், படைகள் வெளியேறிய பிறகு ராணுவ ஒப்பந்ததாரர்கள் உட்பட வெளிநாட்டு சக்திகள் எதுவும்  ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
 
“தோஹா உடன்படிக்கைக்கு மாறாக அவர்கள் சில படையினரை விட்டுச் சென்றால் அதன் பிறகு எப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்து எங்கள்  தலைமை முடிவு செய்யும். தூதர்கள், தொண்டு நிறுவனங்களை தாலிபன் தாக்காது. எனவே அவர்களுக்கென்று பாதுகாப்புப் படையினர் தேவையில்லை. நாங்கள்  வெளிநாட்டுப் படையினருக்கு எதிரானவர்கள் மட்டுமே. வெளிநாட்டுத் தூதர்களுக்கோ, தொண்டு நிறுவனங்களுக்கோ எதிரி அல்ல” என்றும் அவர் தெரிவித்தார்.
 
அரசு சார்பாகப் பேசிய எம்.பி. ரஸ்வான் முராத், நேட்டோ படை விலக்கல் பொறுப்பற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டினார். தாலிபனோடு அரசு  பேச்சுவார்த்தைக்கும், சண்டை நிறுத்தத்துக்கும் தயாராக உள்ளது. அமைதிக்கான தங்கள் பற்றினை தாலிபன் தற்போது நிரூபிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்  அவர்.


இதில் மேலும் படிக்கவும் :