அக்பர் சாலை பெயர் பலகையில் கருப்பு மை பூசி அழிப்பு.. தமிழகத்தை பின்பற்றும் டெல்லி..!
தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் பெயர் பலகையை கருப்பு மை பூசியதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள காஷ்மீர் கேட் பகுதியில் மகாராணா பிரதாப் சிலையை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், இந்து அமைப்பினர் பதிலடியாக பாபர், ஹுமாயூன், அக்பர் சாலைகளில் உள்ள பெயர் பலகைகளில் கருப்பு மை பூசுவோம் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று அக்பர் சாலையின் பெயர் பலகைக்கு ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கருப்பு மை பூசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராணா பிரதாப் சிலையை சேதப்படுத்தியதை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது" என்றும் "காஷ்மீர் கேட்டில் நடந்த சம்பவத்தை டெல்லி அரசாங்கமும் காவல்துறையும் மூடி மறைக்க முயல்கின்றன" என்றும் குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
நடவடிக்கை எடுக்கும் வரை, அக்பர், பாபர், ஹீமாயூன் போன்ற படையெடுப்பாளர்களின் பெயர் பலகைகளை தொடர்ந்து அகற்றுவோம் அல்லது கருப்பு மை பூசி எதிர்ப்பு தெரிவிப்போம் என்று அவர்கள் கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva