1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (22:54 IST)

நியூயார்க்கில் இறந்து போன மனிதர்களின் உடல்களை உரமாக்க அனுமதி

மனித உடல்களை உரமாக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் சமீபத்திய மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.
 
இதன் மூலம் ஒரு நபர் இறந்த பின்பு தனது உடலை மண்ணாக மாற்றிக்கொள்ளலாம். உடலை சிதைமூட்டுவது அல்லது அடக்கம் செய்வது ஆகியவற்றுக்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
 
இந்த முறையில் மனித சடலம் ஒரு கண்டெய்னரில் அடைக்கப்படும். பல வாரங்கள் கழித்து அந்த உடல் மக்கிப்போகும்.
 
கடந்த 2019ம் ஆண்டு இந்த முறையை முதல்முதலாக சட்டப்பூர்வமாக்கிய அமெரிக்க மாநிலமாக வாஷிங்டன் உள்ளது. அதை தொடர்ந்து, கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா ஆகியவை இதைப் பின்பற்றின. கடந்த சனிக்கிழமை மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்த பட்டியலில் 6வது அமெரிக்க மாகாணமாக நியூயார்க் இணைந்துள்ளது.
 
மனித உடலை உரமாக்கும் நடவடிக்கை சிறப்பு முறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்படுகிறது.
 
மரக்கட்டைகள், குதிரை மசால், வைக்கோல் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுடன் ஒரு மூடிய பாத்திரத்தில் மனித உடல் வைக்கப்பட்டு, பின்னர் நுண்ணுயிர் செயல்பாடுகள் நிகழ்கின்றன. ஒரு மாத காலம் மற்றும் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான வெப்பமூட்டல் செயல்முறை ஆகியவற்றுக்கு பின்னர், நமது அன்புக்குரியவர்களின் உடல் மண்ணாக மாறியிருக்கும். மலர்கள், காய்கறிகள், மரங்கள் போன்றவற்றை பயிரிட இவை பயன்படுத்தப்படுகின்றன.
 
தகனம் செய்வது அல்லது பாரம்பரிய முறையில் அடக்கம் செய்வது ஆகியவை மூலம் ஏற்படும் டன் கணக்கிலான கார்பன் வெளியேற்றத்தை இது கட்டுப்படுத்தும் என 'ரிகம்போஸ்' என்ற அமெரிக்க நிறுவனம் கூறுகிறது. கார்பன் டை ஆக்ஸைட் உமிழ்வுகள் காலநிலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் அவை பசுமைக் குடில் விளைவு எனப்படும் ஒரு நிகழ்வில் பூமியின் வெப்பத்தை சிக்க வைக்கின்றன.
 
பாரம்பரிய முறையில் அடக்கம் செய்யவதற்கு கூட மர கட்டைகளால் செய்யப்பட்ட சவப்பெட்டி, நிலம் மற்றும் பிற இயற்கை வளங்கள் தேவைப்படுகின்றன.
 
மனித உடலை உரமாக்குவதை ஆதரிப்பவர்கள் இது குறித்து கூறுகையில், இந்த முறை சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்ல, கல்லறைகளுக்கான நிலம் குறைவாக உள்ள நகரங்களில் பழக்கத்தில் உள்ள ஒரு நடவடிக்கையும் ஆகும் என்கின்றனர்.
 
ஆனால், உரமாக்குவது மூலம் கிடைக்கும் மண்ணுக்கு என்ன ஆகிறது என்ற நெறிமுறை சார்ந்த கேள்விகளை சிலர் எழுப்புகின்றனர்.
 
இதேபோல், மனித உடல்களை வீட்டு குப்பைகளை போல் கையாளக்கூடாது என்று இந்த சட்டத்திற்கு நியூயார்க்கில் உள்ள கத்தோலிக்க பாதரியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், மனித உடலை உரமாக்கும் செயல்முறைக்கு வசூலிக்கப்படும் கட்டணமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தாங்கள் வசூலிக்கும் 7000 டாலர்(ரூ.5,77,962) கட்டணம் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடத்தக்கதுதான் என்று ரிகம்போஸ் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவின் தேசிய இறுதிசடங்கு இயக்குநர்கள் சங்கத்தின் (என்.எஃப்.டி.ஏ.) கூற்றுப்படி அமெரிக்காவில் கடந்த 2021ம் ஆண்டில் புதைப்பதற்கான சராசரி கட்டணம் என்பது 7,848 டாலராகவும் (ரூ.6,47,977) சிதையூட்டுவதற்கான கட்டணம் என்பது 6,971 டாலராகவும் (ரூ.5,75,567) உள்ளது.
 
மனித உடலை உரமாக்கும் முறை ஏற்கனவே ஸ்வீடன் முழுவதும் சட்டப்பூர்வமாக உள்ளது. சவப்பெட்டி இல்லாமல் அல்லது மக்கும் சவப்பெட்டியுடன் உடல் அடக்கம் செய்யப்படும் இயற்கையான புதைகுழிகள் - இங்கிலாந்தில் அனுமதிக்கப்படுகிறது