திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (22:58 IST)

வரலாறை சமகாலத்துடன் இணைக்கும் புழுக்கள் ஓர் மருத்துவ அதிசயம் - ஏன்? புழுக்கள் மருத்துவ அதிசயம் ஏன்?

Super Worms
உலகின் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆண்ட மங்கோலிய பேரரசர் கெங்கிஸ் கானுக்கும், அமெரிக்க உள்நாட்டுப் போருக்கும், பிரிட்டிஷ் மருத்துவ சேவைக்கும் தொடர்பு இருக்கிறதா?

இது என்ன மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருக்கிறதே என்று எண்ணத் தொன்றுகிறதா? மேலே கூறிய மூன்றுமே ஒரே புள்ளியில் இணையவே செய்கின்றன. அவை தான் புழுக்கள். ஆம்... இறந்த விலங்குகளின் உடல்கள் மீதும், நாள்பட்ட புண்கள் மீதும் நெளியக் கூடிய, நீங்கள் அருவெருப்புடன் நோக்கும் அதே புழுக்கள் தான்.
 
12-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகையே ஒரு கொடியின் கீழ் கட்டி ஆளும் வேட்கையுடன் சீற்றத்துடன் புறப்பட்ட கெங்கிஸ் கான் தன்னுடன் பெரும்படையை மட்டுமல்ல, இந்த புழுக்களையும் எடுத்துச் சென்றுள்ளார். மங்கோலியர்கள் பிறந்தது முதலே அவர்களது வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்ட குதிரைகள் மட்டுமல்ல, இந்த புழுக்களும்தான் கெங்கிஸ் கானின் வியக்கத்தக்க வெற்றிக்கு அடிகோலின என்றால் மிகையல்ல.

 
பதின் பருவத்திலேயே போர்க்களம் கண்டு விட்ட கெங்கிஸ் கானின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் படை வீரர்களின் நலனில் அவர் காட்டிய அக்கறையும் ஒன்று. அந்த வகையில், போர்க்களத்தில் எதிரிகளால் காயமடையும் வீரர்களை குணப்படுத்த புழுக்களையே பெரிதும் பயன்படுத்தினார் கெங்கிஸ் கான். காயத்தின் மீது இந்த புழுக்களை அடைத்து கட்டினால் காயம் விரைந்து குணமடையும் என்பதை மங்கோலியர்கள் அப்போதே அறிந்திருந்தார்கள்.
 
 
வரலாறு நெடுகிலும் உற்று நோக்கினால், கெங்கிஸ் கான் மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நகியம்பா பழங்குடியினரும், வடக்கு மியான்மரில் மலைவாழ் மக்களும், மத்திய அமெரிக்காவில் மாயன் பழங்குடிகளும் காயங்களை குணப்படுத்த புழுக்களை பயன்படுத்தியிருப்பதை காண முடிகிறது. உலகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்க புழுக்கள் பயன்படுத்தப்பட்டாலும் கூட, மருத்துவத் துறையின் ஒட்டுமொத்த கவனத்தையும் அது ஈர்க்கவில்லை. 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வெடித்த உள்நாட்டுப் போரின் விளைவாக, இந்தப் புழுக்கள் மீண்டும் பரவலாக கவனம் பெற்றன. அப்போது, டென்வில் நகர மருத்துவமனையில் பணிபுரிந்த ஜான் ஃபார்னெ ஜாக்கரியாஸ் என்ற மருத்துவர், முதன் முறையாக உடலில் சிதைந்து போன திசுக்களை அகற்ற இந்த புழுக்களை பயன்படுத்தினார். அதன் முடிவு அவருக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக அமைந்தது. இந்த புழுக்கள் சிதைந்த திசுக்களை மட்டுமல்ல, காயங்களில் இருந்த பாக்டீரியாக்களையும் அகற்றியதை அவர் கண்டுபிடித்தார். நவீன பாக்டீரியாவியலை தோற்றுவித்த ராபர்ட் கோச், நுண்ணியிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், இன்றைய தடுப்பூசிகளுக்கு முதலில் விதை போட்டவருமான லூயி பாஸ்டர் ஆகியோரின் வருகைக்குப் பின்னர், மருத்துவத் துறையில் இந்த புழுக்களின் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.
 
 
நோய்க்குக் காரணமான பாக்டீரியாக்களும், நுண் கிருமிகளும் தாமாக தோன்றுவதில்லை, அவை தொற்றாக நம்மை பற்றிக் கொள்கின்றன என்பதை கண்டுபிடித்து உலகிற்கு அவர்கள் அறிவித்தனர். சுத்தமும் சுகாதாரமுமே காயங்களையும், நோய்களையும் ஆற்ற அருமருந்து என்பதை அவர்கள் நிரூபித்தனர். நோய்த் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீயாக்களை கொன்று நோயை குணப்படுத்தும் பென்சிலினை கண்டுபிடித்ததன் மூலம், அலெக்சாண்டர் பிளமிங், மருத்துவத் துறையில் புழுக்களின் பயன்பாட்டிற்கு முடிவுரை எழுதினார். ஏனெனில், நோய்க் கிருமிகளை விரட்டியடித்து நோயில் இருந்து நம்மை காக்க ஒரு சிறிய மாத்திரையே போதும் என்றால், உடல் திசுக்களில் நெளியும் புழுக்களை விட யார் தான் விரும்புவார்? ஆனால், இந்த மாயவித்தை செய்யும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் முறியடிக்க 1980-களில் புதிய வில்லன் தோன்றியது. மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் (Methicillin Resistant Staphylococcus Aureus) என்ற பாக்டீரியா ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தோற்கடித்தது. ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்த்து தாக்குப்பிடித்தது மட்டுமின்றி, மருத்துவமனைகள், வாழிடம், பணிபுரியும் இடம், பள்ளிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் எளிதாக மற்றவர்களுக்கு பரவியது. இதனைக் கட்டுப்படுத்த புதிய ஆயுதத்தைத் தேடிய மருத்துவ உலகத்தின் கவனம் மீண்டும் புழுக்களின் மேல் பதிந்தது.
 
 
ஈக்களின் வாழ்க்கை சுழற்சியை விளக்கும் படம்
 
கெலிபேரைடெ என்ற ஈக்களின் லார்வாப் பருவம்தான் இந்தப் புழுக்கள். வயிறும் மத்திய பாகமும் பிரகாசமான நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த ஈக்கள் இறந்த உடல்கள் மீது மொய்த்திருப்பதை நாம் காண முடியும். இந்த ஈக்களின் முட்டைகளில் இருந்து வெளிவரும் லார்வாப் பருவ புழுக்கள் குறுகிய காலகட்டத்திலேயே 100 மடங்கு வளர்ச்சியை எட்டுகின்றன. அதற்கான உணவு முழுமையுமே இறந்த திசுக்கள் தான். காயங்களில் உள்ள இறந்த திசுக்களை மட்டுமின்றி, அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் பாக்டீரியாக்களையும் இந்த புழுக்கள் தின்றுவி டும். இதன் மூலம் முழு சுத்தம் பெறுவதால் காயங்கள் விரைந்து ஆறிவிடும். பிரிட்டிஷ் மருத்துவ சேவையில் இன்றும் இந்த புழுக்களின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவைக்கு உட்பட்ட எல்லா மருத்துவமனைகளிலும் காயங்களை ஆற்ற இந்த புழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
காயத்தின் மீது புழுக்கள் நிரம்பிய சிறு பைகளை கொண்டு கட்டுப் போடும் சிகிச்சை முறை
 
எனினும், நெளியும் புழுக்கள் மீதான ஒவ்வாமையைத் தவிர்க்க, சிறிய தேநீர்ப் பை அளவே கொண்ட பைகளில் இந்த புழுக்களை அடைத்து காயத்தின் மீது கட்டுகிறார்கள். அடுத்த சில நாட்களில் காயம் ஆறிய பிறகு இந்த கட்டு அவிழ்க்கப்படுகிறது. மருத்துவ உலகம் எவ்வளவோ உச்சங்களை தொட்டுவிட்ட பிறகும் கூட, காயங்களை ஆற்றுவதில் இந்த புழுக்களின் பயன்பாடு தவிர்க்க இயலாதாக தொடரவே செய்கிறது. ஆகவே, நாமும் சொல்வோம், வல்லமை மிக்க இந்த புழுக்கள் நீடூடி வாழ்க.