வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (00:29 IST)

நீரஜ் சோப்ரா: ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தவர், தங்க நாயகனாவாரா?

டோக்யோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கான தனது இடத்தை உறுதி செய்து விட்டார் ஈட்டி வீசும் தடகள வீரர் நீரஜ் சோப்ரா.
 
ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே தகுதித் தொலைவையும் தாண்டி பல மீட்டருக்கு அப்பால் ஈட்டியை எறிந்து வியக்கவைத்தார்.
 
இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற 83.05 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை வீச வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நீரஜ் சோப்ரா வீசிய தொலைவு 86.65 மீட்டர்
 
இந்த அபாரமான எறிதல் மூலம் ஏ பிரிவில் அவருக்கு முதலிடம் கிடைத்தது. ஜெர்மனி மற்ரும் ஃபின்லாந்து வீரர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
 
இந்தியாவின் நட்சத்திரங்களில் ஒருவர்
இந்தியாவின் நட்சத்திரத் தடகள வீரர்களில் ஒருவரான இவர், அண்மையில் போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் நடந்த மீட்டிங் சிடாடே டி லிஸ்போவா (Meeting Cidade de Lisboa) போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
 
ஐந்து போர்த்துகீசியப் போட்டியாளர்களுக்கிடையில், 83.18 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.
 
நீரஜ் சோப்ரா தனது ஆறாவது மற்றும் இறுதி முயற்சியில் இந்த உச்சத்தை எட்டினார். போர்ச்சுகல்லின் லியாண்ட்ரோ ராமோஸ் 72.46 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தையும், போர்ச்சுகலின் ஃப்ரான்செஸ்கோ ஃபெர்னாண்டஸ் 57.25 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
 
இறுதி முயற்சியில் வெற்றி
நீரஜ் சோப்ராவுக்கும் மற்ற போர்ச்சுகல் வீரர்களுக்கும் இடையில் உள்ள ஈட்டி எறியும் தூரத்தின் வித்தியாசம், போட்டியின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
 
நீரஜ் சோப்ரா கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு ஒரு சர்வதேசப் போட்டியில் பங்கேற்றார், எனவே இந்த வெற்றி அவரது மன உறுதியை அதிகரிக்கும். நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில், 80.71 மீட்டர் தூரம் எறிந்தார். அதன் பிறகு அவரது தொடர்ச்சியான இரண்டு முயற்சிகள் தவறாகிப் போயின.
 
நான்காவது முயற்சியில் 78.50 மீட்டர், ஐந்தாவது முயற்சியும் தவறானது, ஆறாவது மற்றும் கடைசி முயற்சியில் ஆச்சரியப்படும் விதமாக, 83.18 மீட்டர் தூரம் எறிந்து வெற்றிக்கனியைப் பறித்தார்.
 
இந்த ஆண்டு மார்ச் மாதம் பாட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட் ப்ரீ போட்டியில் நீரஜ் சோப்ரா 88.07 மீட்டர் தூரம் எறிந்துள்ளார். இது அவருக்கு ஒரு சாதனை அளவு.
 
போர்ச்சுகலில், இதை விடக் குறைவான தூரமே அவர் எறிந்திருந்தார். அதற்கு ஒரு வகையில், மற்ற போட்டியாளர்களின் சுமாரான செயல்பாடும் ஒரு காரணம். குறைந்த முயற்சியுடன் தங்கப் பதக்கத்தை வெல்ல முடியும் எனும் போது, ஏன் கடினமாக முயற்சிக்க வேண்டும்?
 
தங்கப்பதக்கத்தின் சிறப்பு
 
நீரஜ் சோப்ரா
 
இந்தச் செயல்பாட்டின் ஆதாரத்தில், டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்வார் என்று கருத முடியுமா என்ற கேள்வி இப்போது எழுகிறது. இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, நாம் சற்றுப் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
 
சில மாதங்களுக்கு முன்பு, பிப்ரவரி கடைசி வாரத்தில் பாட்டியாலாவில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் ப்ரீ -2 இல், இந்திய தடகள சம்மேளனத்தின் சார்பாக வர்ணனை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது, நீரஜ் சோப்ராவைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
 
அப்போது நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் கொரோனா காரணமாக நீண்ட காலமாகப் பயிற்சிக்கு வாய்ப்பின்றி இருந்த வீரர்களுக்கு ஏதோ ஒரு போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருந்தார்.
 
ஈட்டி எறிதல் நிகழ்வில் கலந்துகொண்ட ஒவ்வொரு வீரர் மீதும் நீரஜ் சோப்ரா மிகுந்த கவனம் செலுத்தினார். அந்தப் போட்டி தனது திட்டமிடப்பட்ட அட்டவணையில் இல்லை என்றும் ஆனால் வரவிருக்கும் போட்டிகளில் பங்கேற்கப்போவதாகவும் கூறியிருந்தார்.
 
'வெள்ளிப் பதக்கம் போதாது; தங்கம் வெல்வதே நாட்டுப்பற்று' - சீன ஒலிம்பிக் வீரர்களுக்கு அழுத்தம்
 
ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆணுறை இலவசமாக வழங்கப்படுவது ஏன்?
 
அப்போதே அவர், 88.06 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை புரிந்திருந்தார். இந்த அற்புதமான வெற்றியின் ரகசியம், 2018 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுக்கான பயிற்சி தான் என்று அவர் கூறுகிறார். இதன் பின்னர் அவர் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலகி இருந்தார்.
 
போர்த்துக்கலில் தங்கப்பதக்கம் வெல்வதற்குச் சில நாட்களுக்கு முன்பு, நீரஜ் சோப்ரா வேதனை மற்றும் நம்பிக்கையின்மையை வெளியிட்டிருந்தார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல், டோக்கியோவில் பதக்கத்தை வெல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம் என்று அவரே கூறினார். போட்டி இல்லாமல் வெறுமனே வீட்டில் பயிற்சி செய்வதால் மட்டுமே, வீரரின் செயல்திறன் மேம்படாது என்று அவர் கூறியிருந்தார்.
 
"இந்தியாவில், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார்கள் என எல்லா வீரர்களிடமும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது கடினம். காரணம் வெளிநாட்டு வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் பயிற்சி முகாமுக்கு மட்டுமே போகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் இவர்கள், 80 - 82 மீட்டர் வரை மட்டுமே ஈட்டி எறிய முடிகிறது" என்று நீரஜ் கூறுகிறார்.
 
மூன்று மாதங்கள் முன் தனது சாதனையைத் தானே முறியடித்தார்
நீரஜ் சோப்ரா
 
நீராஜ் சோப்ராவுக்கு 2019 ஆம் ஆண்டு மிகவும் சோதனையான ஆண்டாக இருந்தது. அவர் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டார். அவருக்கு உடல்நிலை சரியான சமயத்தில், கொரொனாவால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்யப்பட்டன. இறுதியாக, இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில், பாட்டியாலாவில் நடைபெற்ற இந்திய கிராண்ட் ப்ரீ-3 இல் புதிய தேசிய சாதனை படைத்தார்.
 
ஓராண்டுக்குப் பிறகு, மீண்டும் போட்டிகளில் பெங்கெடுத்த அவர், 88.07 மீ ஈட்டி எறிந்து, தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார். முன்னதாக, 2018 இல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 88.07 மீட்டர் வரை ஈட்டி எறிந்து தேசிய சாதனை படைத்துத் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
 
முன்னதாக, கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும் 86.47 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
 
நீராஜ் சோப்ரா 2017 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மத்திய வடகிழக்கு சந்திப்பு தடகள சாம்பியன்ஷிப்பில் 85 மீட்டர் என்ற நிர்ணயிக்கப்பட்ட அளவைக் கடந்து 87.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். இதற்கு முன்னர், முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நம்பிக்கை ஏன்?
நீரஜ் சோப்ரா
 
தனது முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருக்கும் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரியோவில் நடந்த முந்தைய ஒலிம்பிக்கில் ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர் 90.30 மீட்டர் தூரம் எறிந்து தங்கமும், கென்யாவின் ஜூலியஸ் யெகோ 88.24 மீ. தூரம் எறிந்து வெள்ளியும் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் கெஷோரன் வால்காட் 85.38 மீ., எறிந்து வெண்கலமும் வென்றனர்.
 
இந்தப் பின்னணியில், நீரஜ் சோப்ரா தனது தற்போதைய சாதனை வீச்சான 88.07 மீட்டர் எறிந்தாலும் அவர் டோக்கியோவில் பதக்கம் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
 
ஜூனியர் மட்டத்திலிருந்தே தொடர்ந்து சிறப்பான உடல் தகுதி
ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் பிறந்த 23 வயதான நீரஜ் சோப்ரா, அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு உலகத் தரம் வாய்ந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய விளையாட்டு வீரர் ஆவார். 2016 ஆம் ஆண்டில் போலந்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் யு - 20 உலக சாம்பியன்ஷிப்பில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
 
2016 ஆம் ஆண்டிலேயே, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 82.23 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் பின்னர், 2017 ஆம் ஆண்டில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பிலும் 85.23 மீட்டர் வரை ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
 
நீரஜ் சோப்ரா
 
சமீபத்தில், இரண்டு கைவினை பயிற்சி காரட் (கே.டி.ஜி) அதாவது ஜாவெலின் வீசுவோருக்கான வலிமை பயிற்சி இயந்திரமும் பாட்டியாலாவை வந்தடைந்தது. ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரத்தின் விலை 50 லட்சம் ரூபாய், இது கடந்த ஆண்டே வந்திருக்கும், ஆனால் கோவிட் காரணமாக வந்து சேரவில்லை.
 
இது ஈட்டி வீசும் வீரர்களின் வீசும் சக்தியை அதிகரிக்கிறது. நீரஜ் சோப்ரா மற்றும் பிற ஈட்டி எறிபவர்களும் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
 
ஒலிம்பிக் போன்ற ஒரு பெரிய விளையாட்டுப் போட்டியில், மில்கா சிங் மற்றும் பி.டி. உஷா ஆகியோர் சிறிய வித்தியாசத்தில் பதக்கங்களைத் தவற விட்டனர். நீரஜ் சோப்ரா அந்த ஏக்கத்தைத் தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.