செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified திங்கள், 18 ஏப்ரல் 2022 (14:26 IST)

இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டக் களத்தில் தமிழிலும் ஒலித்த தேசிய கீதம்

(இன்றைய (ஏப்ரல் 18) இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)

தமிழ் மொழியில் தேசிய கீதம்

இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டக் களத்தில் சிங்கள மொழியுடன் சேர்த்து தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது என்கிறது வீரகேசரி செய்தி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பொது மக்களால் சுயமாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்றுடன் பாத்தாவது நாளாக தொடர்கிறது. 'கோட்டா கோ ஹோம்' என்ற கருப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டாம் தற்போது 'கோட்டா கோ கம' என்றவாறு திரிபடைந்து நாடாளாவிய ரீதியிலும் வியாபித்துள்ளது. அத்தோடு நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு விசேட செயற்பாடுகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று முந்தினம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. இது தொடர்பில் சிலர் விமர்சனங்களை முன் வைத்திருந்த நிலையில், நேற்றைய தினம் மாலை தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது நாட்டில் நல்லிணக்க செயன்முறையை நோக்கிய ஒரு சிறந்த முன்னெடுப்பாக அமையும் என்று பலராலும் வரவேற்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு நேற்று வாஷிங்டன் சென்றடைந்துள்ளது என்கிறது தமிழன் நாளிதழ் செய்தி.

அந்த குழுவில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் உள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட பேச்சு வார்த்தைகள் நாளை முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

'அமைதியான போராட்டத்தின் மீது ராணுவத்தை பயன்படுத்தப்போவதில்லை'

அமைதியான போராட்டத்தின் மீது ராணுவ அதிகாரத்தை பயன்படுத்தப்போவதில்லை என இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்தின தெரிவித்துள்ளார் என சிலோன் டுடே நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியில் அமைதியாக நடைபெறும் போராட்டத்தை ஒடுக்க ராணுவப் படைகளை பயன்படுத்தப் போவதில்லை.

அதே நேரம் நாட்டை பாதுகாக்க ராணுவத்தின் துணையை காவல்துறை நாடினால் நிச்சயம் காவல்துறையினருக்கு துணை நிற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.