ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Updated : சனி, 25 செப்டம்பர் 2021 (23:37 IST)

நரேந்திர மோதியின் ஐ.நா உரை: டிஎன்ஏ தடுப்பூசி முதல் பயங்கரவாதம் வரை - 10 முக்கிய அம்சங்கள்

நரேந்திர மோதியின் ஐ.நா உரை: டிஎன்ஏ தடுப்பூசி முதல் பயங்கரவாதம் வரை - 10 முக்கிய அம்சங்கள்
 
நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆம் அமர்வில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, இந்தியா டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியிருப்பதைப்பற்றி குறிப்பிட்டார்.
 
கொரோனா காலத்தில் இந்தியா எதிர்கொண்ட சவால்கள், தடுப்பூசி தயாரிப்பில் உலக நாடுகள் செலுத்த வேண்டிய அக்கறை, ஆப்கானிஸ்தான் விவகாரம், சர்வதேச பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து மோதி பேசினார்.
 
இந்தி மொழியில் அவர் ஆற்றிய உரையில் இருந்து 10 முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
 
1 இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி, இந்தியா அதன் சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. எங்களுடைய பன்முகத்தன்மைதான் எங்களுடைய வலுவான ஜனநாயகத்தின் அடையாளம். 'ஜனநாயகத்தின் தாய்' என்று கருதப்படும் ஒரு நாட்டை நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் ஆம், வளர்ச்சி என்பது அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், அனைத்து இடங்களிலும், உலகளாவியதாகவும் இருக்க வேண்டும்.
 
 
2) துடிப்பான ஜனநாயகத்திற்கு இந்தியா ஒரு சிறந்த உதாரணம். எங்களுடைய ஜனநாயகம் அதன் பன்முகத்தன்மையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 'ஒருங்கிணைந்த மனிதாபிமானம்' என்ற கோட்பாட்டை வலியுறுத்திய பண்டிட் தீன் தயாள் உபாத்யாவின் பிறந்தநாள் இன்று. அவர் வகுத்துக் கொடுத்த ஒருங்கிணைந்த சமத்துவ வளர்ச்சியின் பாதையில் இந்தியா முன்னேறிச் செல்கிறது.
 
3) இந்தியாவை உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் மையமாக மாற்றுவதற்கான பணிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம். எங்கள் எதிர்கால சந்ததியினருக்கு பதில் கூட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
 
2019 ஐ.நா கூட்டத்தில் நரேந்திர மோதி என்ன பேசினார்?
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’- ஐ.நா. சபையில் கணியன் பூங்குன்றனாரை மேற்கோள் காட்டிய மோதி
 
4) இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும், இந்தியா சீர்திருத்தம் பெறும்போது, உலகமும் மாறும். கொரோனா காலத்தில் பல சவால்களை இந்தியா சந்தித்துள்ளது. உலக நாடுகளும் பல பிரச்னைகளை சந்தித்துள்ளன. அவற்றுக்கெல்லாம் தீர்வு தேவை.
 
5) இன்று, இந்தியாவில் தடுப்பூசிகளை தயாரிக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். உங்களுக்கு தேவையான வளங்கள், வசதிகள் எங்களிடம் உள்ளன.
 
6) நமது பெருங்கடல்கள் சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாகும். விரிவாக்கத்திற்கான பந்தயத்திலிருந்து நாம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். சர்வதேச சமூகம் ஒரே குரலில் ஒரு விதி அடிப்படையிலான உலக ஒழுங்கை வலுப்படுத்திப் பேச வேண்டும்.
 
7) உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் அவையில் தெரிவிக்க விரும்புகிறேன். இதை 12. வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் செலுத்தலாம். ஒரு எம்ஆர்என்ஏ தடுப்பூசி வளர்ச்சியின் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்திய விஞ்ஞானிகள் கோவிட் -19 க்கு எதிராக நாசி வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்கி வருகின்றனர்.
 
8) மாசுபட்ட நீர் இந்தியா மட்டுமின்றி, முழு உலகிற்கும் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ள, இந்தியா முழுவதும் 17 கோடி வீடுகளுக்கு சுத்தமான, குடிநீரை வழங்குவதற்கான ஒரு பெரிய இயக்கத்தை நாங்கள் நடத்துகிறோம்.
 
9) இன்று, பிற்போக்கு சிந்தனை மற்றும் தீவிரவாத ஆபத்து உலகின் முன் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் பிற்போக்கு சிந்தனை கொண்ட நாடுகள், பயங்கரவாதம் தங்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தை பரப்பவோ அல்லது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவோ பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 
10) ஆப்கானிஸ்தானில் உள்ள நுட்பமான சூழ்நிலையை, எந்தவொரு நாடும் அதன் சுயநலத்திற்காகப் பயன்படுத்த முயற்சிக்கவில்லை என்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.