செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2019 (21:42 IST)

நரேந்திர மோதி - டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: இந்திய பத்திரிகையாளர்களை பாராட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகிய இருவர் உடனான பத்திரிகையாளர் சந்திப்புகளின்போதும், தம்மைக் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களுக்கு பதில் அளிக்காமல், அவர்களை எதிர் கேள்வி கேட்டுள்ளார். வெவ்வேறு நாட்களில் நடந்த இரு சந்திப்புகளிலும் டிரம்ப் கேட்ட கேள்விகள் ஒன்று போலவே உள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் அமெரிக்காவில் தற்போது அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஐ.நா பொதுச்சபை கூட்டத்துடன் பிற நிகழ்வுகளிலும் அவர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
 
அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளில் பத்திரிகையாளர்களின் கடினமான கேள்விகளுக்கு பதிலாளிக்காமல், கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை பாராட்டுவதுபோல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது கலவையான எதிர்வினைகளை பெற்றுள்ளது.
 
சிலர் இந்திய ஊடகங்களை டிரம்ப் பாராட்டினார் என்று சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
 
"ஹௌடி மோடி" நிகழ்ச்சிக்கு பின்னர், மோதியும், டிரம்பும் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினர். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர், டிரம்பும், மோதியும் கூட்டாக ஊடகங்களை சந்தித்தனர்.
 
அப்போது, நரேந்திர மோதியின் முன்னிலையில் இந்திய பத்திரிகையாளர் ஒருவர் அதிபர் டிரம்பிடம் சில கேள்விகளை கேட்டார். இதற்கு டிரம்ப் அளித்த பதில் இப்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாத பொருளாகியுள்ளது.
 
ஒரு நாளுக்கு முன்னர்தான், இம்ரான் கானோடு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்த கருத்துகளால், பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் இந்தியாவில் கேலி பொருளாகினர்.
 
இப்போது அத்தகைய கூற்றுகள் இந்திய பத்திரிகையாளர்கள் பற்றி டிரம்பிடம் இருந்து வந்துள்ளது.
 
இஸ்லாமியவாத பயங்கரவாதத்தை ஒழிக்க ஏதாவது திட்டம் உள்ளதா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "காஷ்மீர் பிரச்சனைக்கு நாங்கள் தீர்வு காண முயல்வோம். இதுதான் நாங்கள் விரும்புவது," என்று மோதியை அருகில் வைத்துக்கொண்டு டிரம்ப் தெரிவித்தார்.
 
பயங்கரவாதம் என்பது மிக பெரிய பிரச்சனையல்லவா? பாகிஸ்தான் அரசின் ஆதரவோடு நடத்தப்படும் தீவிரவாதத்தை ஒழிக்க ஏதாவது திட்டம் உள்ளதா? என்று இந்திய பத்திரிகையாளர் மீண்டும் கேள்வி எழுப்பினார்
 
அப்போது மோதியை பார்த்த டிரம்ப், "நீங்கள் நல்ல செய்தியாளர்களை பெற்றிருக்கிறீர்கள். எனக்கும் அத்தகைய செய்தியாளர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பிற செய்தியாளர்களைவிட நன்றாகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். இதுபோன்ற செய்தியாளர்களை எங்கே கண்டுபிடிக்கிறீர்கள்?" என்று மோதியிடம் கேட்டுவிட்டு, பத்திரிகையாளர்களை நோக்கி ,"பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சிறந்த பிரதமரை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இதில் எனக்கு சந்தேகம் இல்லை," என்று கூறினார்.
 
இந்த செய்தியாளர் சந்திப்பின்போதுதான், "முன்பு இந்தியாவில் ஏராளமான அதிருப்தி கருத்துகள் இருந்தன, சண்டைகள் இருந்தன. அவற்றை எல்லாம் ஒரு தந்தையைப் போல பிரதமர் நரேந்திர மோதி ஒன்றுபடுத்தியுள்ளார். அவரை இந்தியாவின் தந்தை என்று கூறலாம்," என்று டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.
 
பாகிஸ்தான் செய்தியாளரிடம் டிரம்ப் சொன்னதென்ன?
 
செப்டம்பர் 23ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த்தனர்.
 
காஷ்மீர் பற்றிய ஐநா தீர்மானம் தொடர்பாக பாகிஸ்தானிய செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வி கேட்டார்.
 
அப்போது இம்ரான் கானை பார்த்த அதிபர் டிரம்ப், "எனக்கு இந்த செய்தியாளரை பிடித்து விட்டது. நீங்கள் (பத்திரிகையாளர்) இம்ரான் கான் அணியை சோந்தவரா? என்று கேட்டார்.
 
"நான் இம்ரான் அணியை சோந்தவரல்ல. நானொரு சுயாதீன பத்திரிகையாளர்" என்று அந்த பத்திரிகையாளர் பதிலளித்தார்.
 
மேலும், காஷ்மீர் 50 நாட்களாக முடக்கப்பட்டு கிடக்கிறது. இணைய மற்றும் தொலைபேசி வசதிகள் இல்லை. அங்கு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. காஷ்மீர் மக்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று இன்னொரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேட்டார்.
 
உடனே டிரம்ப் இம்ரான் கானிடம், "இப்படிப்பட்ட பத்திரிகையாளர்களை எங்கே கண்டுபிடிக்கிறீர்கள்? இவர்களை பார்த்தால் வியப்பாக உள்ளது" என்று கூறினார்.
 
அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இடையே பெரும் மோதல் உள்ளது. செய்தி நிறுவனங்களும், பத்திரிகையார்களும் போலிச் செய்திகளை பரப்புகிறார்கள் என்று டிரம்ப் பல வேளைகளில் கேலி செய்துள்ளார்.
 
இதே போன்றதொரு சம்பவம் பிபிசியின் ஜான் சோப்லெ அதிபர் டிரம்ப்பை சந்தித்தபோதும் நிகழ்ந்தது. சோப்லெ இது பற்றி புகார் தெரிவித்தபோது, டிரம்ப் அவரைப் பேசவிடாமல் பாதியிலேயே அமரச் செய்துவிட்டார்.
 
வெள்ளை மாளிகையின் சிஎன்என் தலைமை செய்தியாளர் ஜிம் அகோஸ்டாவுக்கும் டிரம்புக்கு இடையேயும் இதுபோன்றதொரு மோதல் நிகழ்ந்தது.
 
2018ம் ஆண்டு ஊடகங்கள் மக்களின் எதிரிகள் என்று டிரம்ப் பேசியது குறிப்பிடத்தக்கது.