செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 25 மே 2021 (15:02 IST)

அரசு, தனியார் பள்ளிகளில் போக்சோ கண்காணிப்பு குழு: அரசுக்கு ரவிக்குமார் எம்.பி யோசனை

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் போக்சோ விதிகளின் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
இது தொடர்பாக அவர் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சில யோசனைகளை வழங்கியுள்ளார். தனியார் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்கள் செய்யப்படும்போது போக்சோ சட்ட வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

மாவட்ட கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளிகளுக்கு ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே தனிப்பட்ட முறையில் ஆசிரியரைப் பற்றிய கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். சிறார்கள் பாதுகாப்புக்கான குழுவை அமைப்பது தொடர்பாக எட்டு அம்சங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை NIPCCD அளித்திருக்கிறது. ஒவ்வொரு பள்ளியிலும் சிறார் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்;

அவர்களின் முதன்மையான பணி மாணவர்கள் பாலியல் ரீதியாக சீரழிக்கப்படக்கூடாது என்பதை கண்காணிப்பதாக இருக்க வேண்டும். அந்தக் குழுவில் ஒரு உறுப்பினர் சிறார் உரிமைகள் தொடர்பான அனுபவம் கொண்ட ஒரு நபராக இருக்க வேண்டும். அவர் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களிலிருந்து ஒருவராக்க கூட இருக்கலாம். மாணவர் பிரதிநிதிகள் இருவர் அந்தக் குழுவில் இடம்பெற வேண்டும். அது ஆண் பெண் இருபாலரும் படிக்கிற பள்ளியாக இருந்தால் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் அதில் பிரதிநிதியாக இடம்பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், ’ஆன்லைன்’ பாதுகாப்பு குறித்தும் அதில் 5 வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இன்டர்நெட் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பள்ளி தொடர்பான பணிகள் தவிர ஆசிரியர் வேறு எந்த விதத்திலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் எவ்விதமான தொடர்பும் அனுப்பக்கூடாது.

மாணவர்களுக்கு ஆசிரியர் அனுப்பும் மின்னஞ்சல் உள்ளிட்ட தகவல் பரிமாற்றங்களின் படி ஒன்று அவர்களது பெற்றோர்களுக்கும் அனுப்பப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் மாணவர்களோடு எவ்வித உறவையும் ஆசிரியர்கள் பேணக்கூடாது. மாணவர்களின் சம்மதமின்றி அவர்களை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ கூடாது. அவர்களுக்கு சங்கடம் நேரும் விதத்தில் எந்தவிதமான ’ரெக்கார்டிங்கும்’ செய்யப்படக்கூடாது’ என்று அவ்விதிகளில் சொல்லப்பட்டுள்ளது.
 
சென்னை பள்ளியில் நடந்தது போன்ற பாலியல் முறைகேடுகள் தமிழ்நாட்டின் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறக் கூடும். எனவே ஒரு கால நிர்ணயம் செய்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் போக்சோ சட்ட விதிகள் சரியாக கடைபிடிக்க படுகின்றனவா என்பது பற்றிய அறிக்கையை அமைச்சர் கேட்டுப் பெற வேண்டும் என்று ரவிக்குமார் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.