1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

சீனாவில் 100 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து

சீனாவில் 100 கோடிக்கும் அதிகாமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவில் அனைத்து  நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு.

சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய பிறகு தடுப்பு மருந்து செலுத்தும் பணி மெதுவாக தொடங்கியது.
 
இருப்பினும் இலவசமாக முட்டைகளை வழங்குவது, டெல்டா திரிபு பரவும் ஆபத்து ஆகியவற்றால் தடுப்பு மருந்து செலுத்தி கொள்வது வேகம் அடைந்தது.
 
சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாகும் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளை வழங்குவதை இலக்காக வைத்துள்ளனர் சீன அதிகாரிகள்.
 
சீனா தனது மக்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சினோஃபாம் மற்றும் சினோவேக் தடுப்பூசிகளை செலுத்துகிறது. இரண்டுமே இரண்டு டோஸ்கள் செலுத்தி கொள்ள வேண்டும்.
 
பொதுமுடக்கம் மற்றும் அதிகளவிலான பரிசோதனை தொற்று பரவலை கட்டுப்படுத்தியது.
 
தொடக்கத்தில் பலர் தடுப்பு மருந்து அவசியம் இல்லை என நினைத்தாலும், நாட்கள் செல்ல செல்ல தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ளும் வேகம் அதிகரித்தது  என்றும், ஐந்து நாட்களில் 100 மில்லியன் டோஸ்களை செலுத்தியதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவிக்கிறது.
 
சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் டெல்டா திரிபு பரவியதும் மக்கள் அதிகளவில் தடுப்பு மருந்து எடுத்து கொள்வதற்கான காரணம்.
 
குவாண்டாங் மாகாணத்தில் உள்ள குவாங்க்சூவில் அங்கு பரவிய வைரஸால் ஏற்படக்கூடிய அறிகுறி, 2019ஆம் ஆண்டு இறுதியில் ஹூவானில் பரவிய வைரஸால்  ஏற்பட்ட அறிகுறிகளை காட்டிலும் அதிக ஆபத்தானது என்றும், வித்தியாசமானது என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருந்தது.
 
குவாங்க்சூ நகருக்கு அருகில் உள்ள ஷென்சென் நகரில் வசிக்கும் ஒருவர், முதலில் தடுப்பு மருந்து எடுத்து கொண்டால் பக்க விளைவுகள் வரும் என்ற அச்சத்தில் எடுத்து கொள்ளவில்லை அதன்பின் தனது மனதை மாற்றிக் கொண்டதாக அந்த செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.
 
"நான் தற்போது தடுப்பூசியை செலுத்தி கொள்ள விரும்புகிறேன் ஆனால் அதற்கான இடம் கிடைப்பது தற்போது கடினமாக உள்ளது. மேலும் இலவச முட்டைகளும், தடுப்பு மருந்து மையங்களுக்கு இலவசமாக கூட்டிச் செல்வதும் வாகன வசதிகளும் தற்போது இல்லை," என அந்த 27 வயது பெண் தெரிவித்துள்ளார்.
 
இருப்பினும் பிற பகுதிகளில் சில இலவசங்களை அளிக்கின்றனர். இலவசமாக முட்டைகளையும் அளிக்கின்றனர். பீய்ஜிங்கில் உள்ள சிலருக்கு ஷாப்பிங் வவுச்சர்களும் கிடைத்துள்ளன.
 
இந்த வருடத்தின் முடிவில் மக்கள் தொகையில் 70 சதவீத பேருக்கு தடுப்பு மருந்து செலுத்த இலக்கு வைத்துள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம்  தெரிவித்துள்ளது.
 
இதுவரை மூன்று சீன தடுப்பு மருந்துகளுக்கு அவசர நிலை பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
சினோஃபாம் மற்றும் சினோவேக் தடுப்பு மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெற்றுள்ளன
 
இந்த தடுப்பு மருந்துகளும் ஏற்கனவே பிலிப்பைன்ஸ், சில்லி, பிரேசில், இந்தோனீசியா, மெக்ஸிகோ, தாய்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
கொரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் உள்ள அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சினோஃபார்ம் தடுப்பு மருந்து 79 சதவீத பலன் தருகிறது  என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
 
சினோவேக் தடுப்பு மருந்து எடுத்து கொண்டவர்களில் 51 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்படமால் உள்ளது. மேலும் 100 சதவீத மாதிரிகளில் தீவிர அறிகுறிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையை தடுத்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.