1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (13:20 IST)

மருந்து எதிர்ப்புத் திறன் காரணமாக லட்சக்கணக்கில் ஏற்படும் உயிரிழப்புகள் - அதிர்ச்சி அறிக்கை

ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பாக்டீரியா (நுண்ணுயிரி எதிர்ப்பு) தொற்று காரணமாக, கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுக்க 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேரியா அல்லது எய்ட்ஸ் ஆகிய நோய்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிராக நோய்களுக்கு எதிர்ப்பாற்றல் கிடைப்பதால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.

உலகில் ஏழை நாடுகள் இந்த பிரச்சனையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும், அனைவரின் உடல் நலத்திற்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது.

புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு முதலீடு செய்வது, தற்போது இருக்கும் மருந்துகளை கவனமாக பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் இந்த பிரச்சினைக்கு தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.

சாதாரண நோய்த் தொற்றுகளுக்கு கூட அதிகப்படியாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. எனவே தீவிர நோய் தொற்றின்போது ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் செயல் திறன் குறைகிறது.

இதற்கு முன்பு சிகிச்சை அளித்து குணப்படுத்தக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தற்போது சிகிச்சை பலனின்றி இறந்து கொண்டிருக்கிறார்கள். காரணம் அந்த பாக்டீரியா மருந்துகளை எதிர்கொள்ளும் திறனை பெற்றுவிட்டது.

ஆன்டி மைக்ரோபயல் ரெசிஸ்டன்ஸ் (ஏ எம் ஆர்) என்றழைக்கப்படும் இந்தப் பிரச்சனை மறைந்திருக்கும் பெருந்தொற்று என பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் சமீபத்தில் எச்சரித்துள்ளனர். கவனமாக ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பரிந்துரைக்கவில்லை எனில், இது கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் வெளிப்படலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடியது

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 204 நாடுகளில் ஏ எம் ஆர் பிரச்சனையால் ஏற்படும் உயிரிழப்புகளை மதிப்பிடுவதற்காக ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தவர்களில், சுமார் 50 லட்சம் பேரின் உயிரிழப்புக்கு ஏ எம் ஆர் காரணமாக இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளனர். இதில் 12 லட்சம் பேரின் உயிரிழப்புக்கு எம்ஆர் நேரடி காரணமாக இருந்துள்ளது என்றும் கணக்கிட்டுள்ளனர்.

அந்த ஆண்டில் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,60,000. மலேரியா நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,40,000 என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ எம் ஆர் பிரச்சனை காரணமாக உயிரிழந்தவர்களில் பலரும் நிமோனியா மற்றும் ரத்தநாள தொற்று போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டனர். இது, அழுகிய புண்ணால் ரத்தத்தில் நச்சுத்தன்மையை உண்டாக்கும் செப்சிஸ்க்கு வழிவகுக்கும்.

நோயாளிகளின் மருத்துவ பதிவுகள் ஆராய்ச்சிகள் மற்றும் கிடைக்கும் தரவுகள் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, ஏ எம் ஆர் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் குழந்தைகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பில் ஐந்தில் ஒரு உயிரிழப்பு ஏ எம் ஆர் பிரச்சினையோடு தொடர்புடையதாக இருக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏ எம் ஆர் பிரச்சனையால் உயிர் இழப்புகள் ஏற்படுவது சஹாராவுக்குக் கீழே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில், தெற்காசிய பகுதிகளில் ஒரு லட்சம் பேருக்கு 24 உயிரிழப்புகள் என்று அதிகமாக இருக்கிறது. பணக்கார நாடுகளில் ஒரு லட்சம் பேரில் 13 உயிரிழப்புகள் என குறைவாக இருக்கிறது.

புதிய தரவுகள், உலக அளவில் இந்தப் பிரச்சனை எவ்வளவு வலியது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இப்பிரச்சனைக்கு எதிரான போட்டியில் நாம் முன்னிலை வகிக்க வேண்டுமானால், அவசர நடவடிக்கைகள் தேவை எனவும் இது வலியுறுத்துகிறது என கூறியுள்ளார் இன்ஸ்டிட்டியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவலுவேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் முர்ரே.

பல்வேறு நாடுகளில், இந்தப் பிரச்னையை சிறப்பாக கண்காணிப்பது அவசியம் என மற்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மற்ற நோய்களுக்கு செலவழிக்கும் அளவுக்கு ஏ எம் ஆர் பிரச்சனைக்கும் உலக அளவில் செலவழிக்க வேண்டும் என வாஷிங்டன் டிசியில் உள்ள சென்டர் ஃபார் டிசீஸ் டைனமிக்ஸ், எகனாமிக்ஸ் அண்ட் பாலிசி அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ரமணன் லக்ஷ்மி நாராயணன் கூறினார்.

"ஏ எம் ஆர் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு முதலில் நிதி ஒதுக்கப்பட வேண்டும், தற்போது புழக்கத்தில் இருக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் சரியாக பரிந்துரைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், புதிய ஆன்டிபயாடிக் மருந்துகள் சந்தைக்குக் கொண்டு வரப்படவேண்டும்" என்று கூறினார்.

விலை மலிவான, சிறப்பாக செயல்படக் கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பெற பெரும்பாலான உலக நாடுகள் கடும் சவாலை எதிர்கொண்டு வருகின்றன, அதை அரசியல் மற்றும் சுகாதாரத் தலைவர்கள் தீவிர பிரச்சனையாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் லக்ஷ்மி நாராயணன் கூறினார்.