வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (23:58 IST)

பாகிஸ்தானில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்: அவசர சட்டத்துக்கு அதிபர் ஒப்புதல்

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனையை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டோரின் தேசிய அளவிலான பட்டியல் தயாரிக்கப்படும். அதில் அதி தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரசாயன முறையிலான ஆண்மை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
 
பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்கவும், நான்கு மாதங்களில் விசாரணையை முடிக்கவும் அவசர சட்டம் வகை செய்கிறது.
 
பாகிஸ்தானில் சமீபத்திய ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்த வேளையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
 
கடந்த செப்டம்பர் மாதம் லாஹூரை நோக்கி தனது பிள்ளைகளுடன் காரில் வந்த பெண், வழியில் வாகனம் பழுதானதையடுத்து நின்றது. அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அந்த பெண்ணை அவரது பிள்ளைகள் முன்பே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியது.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறு வயது சிறுமியை உள்ளூர் நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்தார். இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்தன.
 
இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு இம்ரான் கான் அரசு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது.
 
பாகிஸ்தான் பாலியல் வல்லுறவு
 
அந்த சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியிருக்கிறார். இதன்படி தீவிர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபருக்கு ரசாயனம் கொடுத்து அவரது ஆண்மைத்தன்மையை குறைக்கவோ நீக்கவோ செய்யும் மருந்து கொடுக்கப்படும். இது தொடர்பான முடிவை அரசு நியமித்த மருத்துவர்கள் குழு தீர்மானிக்கும்.
 
பாகிஸ்தான் பாலியல் சட்டத்தின்படி பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவது, ஆசைக்கு இணங்காதபோது வற்புறுத்தி பாலியல் செய்வது, உயிருக்கு அச்சுறுத்தலை விளைவித்து பாலியலில் ஈடுபடுவது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது போன்றவை சட்டவிரோதமாக கருதப்படும். மேலும், குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.
 
பாகிஸ்தான் பாலியல் வல்லுறவு
 
வேறு எந்த நாட்டில் ரசாயன ஆண்மை நீக்க நடைமுறை உள்ளது?
உலகின் சில நாடுகளில் ரசாயன ஆண்மை நீக்க நடவடிக்கை நடைமுறையில் இருக்கிறது.
 
2016ஆம் ஆண்டில் இந்தோனீசியாவில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரசாயன ஆண்மை நீக்கத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
2009ஆம் ஆண்டில் போலாந்தில் சிறார் பாலியல் குற்றவாளிகளுக்கு கட்டாய ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை முறையான சட்டமாக மாற்ற ஆளும் அரசுக்கு 120 நாட்கள் அவகாசம் உள்ளன. அதற்குள்ளாக நாடாளுமன்றத்தை கூட்டி இந்த அவசர சட்டம் முறையான சட்ட மசோதா மூலம் சட்டமாக்கப்பட வேண்டும்.
 
ஆனாலும், பாகிஸ்தானில் ஆளும் அரசின் அவசர சட்ட நடவடிக்கை, பரவலான விவாதப்பொருளாகியிருக்கிறது