வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2020 (15:02 IST)

பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள் - விசாரணை ஆணையம் அறிக்கை

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நடிகைகள்'
மலையாள சினிமா உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை நடிகர்கள் படுக்கைக்கு அழைப்பதாக விசாரணை ஆணையத்தின் அறிக்கை கூறுவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. `
 
கேரள மாநிலம் கொச்சியில், 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 17-ந் தேதி மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொல்லை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் சிக்கினர். ஆனால் வழக்கு விசாரணை இன்னும் முடிந்தபாடில்லை. இதே போன்று மலையாள பட உலகில் நடிக்கிற வாய்ப்புக்காக நடிகைகளை நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் படுக்கைக்கு அழைப்பதாக புகார்கள் எழுந்தன.
 
இதையடுத்து நடிகைகளுக்காக போராடும் நோக்கத்தில் மலையாள பட உலகை சேர்ந்த பெண்கள் ஒன்றுசேர்ந்து டபிள்யு.சி.சி. என்ற அமைப்பை 2017-ம் ஆண்டு தொடங்கினர்.
 
இந்த அமைப்பினர், மலையாள பட உலகில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநியாயங்கள் பற்றியும், அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தனர்.
 
அதன்பேரில், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு, நீதிபதி கே.ஹேமா கமிஷனை அமைத்தது.
 
இந்த ஆணையத்தில் முதுபெரும் நடிகை சாரதா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வல்சலா குமாரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
 
இந்த ஆணையம், மலையாள பட உலகில் உள்ள நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்டோரை சந்தித்து, பட உலகில் சந்தித்து வருகிற பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி, ஆதாரங்களுடன் அறிக்கையை தயாரித்தது.
 
இந்த அறிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நீதிபதி ஹேமா, நடிகை சாரதா, வல்சலா குமாரி ஆகியோர் சந்தித்து அளித்தனர்.
 
இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விஷயங்கள் கசிந்துள்ளன. அதில் திடுக்கிடும் தகவல்கள் பல இடம் பெற்றுள்ளன.
 
குறிப்பாக பட வாய்ப்புக்காக பட உலகில் உள்ள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்களை படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் மரியாதைக்குரிய இடத்தை சினிமா உலகில் பிடிக்க வேண்டுமானால், மிகவும் மோசமான அனுபவங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டி உள்ளது என வேதனையுடன் கூறி உள்ளனர்.
 
இதில் பாதிக்கப்படுகிற நடிகைகள், போலீசில் புகார் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
 
பட உலகில் உள்ள பல ஆண்களும், பெண்களும் இந்த விவகாரம் பற்றி பேசும்போது வெறுப்புணர்வை வெளிப்படுத்தி உள்ளனர். இன்னும் சிலர் பயத்தின் காரணமாக பேசவே மறுத்து விட்டதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
சமூக வலைத்தளங்களில் நடிகைகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டும் அவமானப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளின் தனிமனித உரிமைகள் மீறப்படுகின்றன; கழிவறை, உடை மாற்றும் அறை வசதிகள் கூட செய்து தரப்படுவதில்லை என்றும் புகார் கூறி உள்ளனர்.
 
இந்த அவல நிலையில் இருந்து நடிகைகளுக்கு நிரந்தர தீர்வு தேடித்தர நீதிபதி ஹேமா கமிஷன், கேரள அரசுக்கு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.
 
படுக்கைக்கு அழைக்கும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரகடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.
 
பட உலகினருக்கு நெறிமுறைகளை வகுத்து, அவற்றை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும், விதிமுறைகளை மீறுவோரை படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையை கேரள அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.