திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (15:05 IST)

ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானியை விஞ்சிய சீன தொழிலதிபர்

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெயரை இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இழந்துள்ளார்.

சமீபத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவை சந்தித்த முகேஷ் அம்பானி, அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில்  மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
அதே நிலையில், இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த சீனாவை சேர்ந்த தொழிலதிபரான ஜாங் ஷான்ஷானின் தடுப்பூசி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயரவே தற்போது முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
 
ஷான்ஷானின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 7 பில்லியன் டாலர்கள் அதிகரித்ததையடுத்து, அவர் பட்டியலில் தனக்கு முன்னிருந்த முகேஷ் அம்பானி,  சீனாவின் ஜாக் மா ஆகியோரை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
 
ஒட்டுமொத்தமாக 77.8 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டுள்ள ஷான்ஷான், இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலிலும் 11ஆவது இடத்துக்கு  முன்னேறியுள்ளதாக அதுகுறித்த தகவலை பராமரிக்கும் ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
யார் இந்த ஷான்ஷான்?
 
சீன தொழில்துறையில் மற்ற பெரிய பணக்காரர்கள் போலன்றி ஜாங் ஷான்ஷான் இதழியல் துறை, காளான் வளர்ப்பு மற்றும் சுகாதாரத்துறையில் கவனம் செலுத்தி  வந்தார்.
 
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் கடந்த ஏப்ரல் மாதம் 'பெய்ஜிங் வண்டாய் பயோலாஜிக்கல்' என்ற தனக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை சீன பங்குச்சந்தையில் பட்டியலிட்டார் ஷான்ஷான்.
 
மூன்று மாதங்களுக்கு பிறகு, தனது மற்றொரு நிறுவனமான 'நோங்பூ ஸ்ப்ரிங்' என்ற தண்ணீர் பாட்டில் நிறுவனத்தை ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிட்டார்  ஷான்ஷான்.
 
இதன் மூலம் திரட்டப்பட்ட பணத்தின் மூலம், ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின்  நிறுவனர் ஜாக் மாவை நெருங்கினார் ஷான்ஷான்.
 
மறுபுறம் ஹாங்காங் பங்குச்சந்தை வரலாற்றில் சிறப்பான அறிமுகத்தை கண்ட பங்குகளின் பட்டியலில் இணைந்த 'நோங்பூ ஸ்ப்ரிங்' என்ற அவரது தண்ணீர்  பாட்டில் நிறுவனத்தின் பங்கின் மதிப்பு தொடக்க விலையை விட 155 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது.
 
அதேபோன்று, கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் இறங்கிய ஷான்ஷானின் மற்றொரு நிறுவனத்தின் பங்கின் விலை 2,000% மேல் அதிகரித்து போட்டி நிறுவனங்களை வியப்படைய செய்தது.
 
இந்த வியத்தகு சொத்து மதிப்பு உயர்வின் காரணமாக தற்போது ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ஜாங் ஷான்ஷான். மேலும், இது வரலாற்றில் குறுகிய காலத்தில் அதிக செல்வம் ஈட்டப்பட்ட நிகழ்வாக பதிவாகியுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
உயரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்புகள்
 
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் உள்பட உலகின் பல்வேறு பணக்காரர்களின் சொத்து மதிப்பு கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவத்  தொடங்கியதிலிருந்து அதிகரித்தது.
 
குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 18.3 பில்லியன் டாலர்களிலிருந்து 76.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான 'ரிலையன்ஸ் ஜியோ'வில் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள்  போட்டிப் போட்டுக்கொண்டு முதலீடு செய்தது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
 
ஆனால், சமீபகாலமாக சீன அரசின் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பிடியில் சிக்கி தவித்து வரும் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மாவின் சொத்து மதிப்பு  61.7 பில்லியன் டாலர்களிலிருந்து 51.2 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது.
 
அலிபாபா நிறுவனம், தன்னை மட்டுமே சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ள, முற்றொருமை (Monopoly) நடவடிக்கைகளை எடுக்கிறதா என சீனாவின் சந்தை  நெறிமுறையாளர்கள் விசாரித்து வருகிறார்கள்.
 
சீனாவின் புதிய பணக்காரர்களில் பெரும்பாலோர் தொழில்நுட்பத் துறையிலிருந்து வந்தவர்கள். ஆனால் ஹுவாவே, டிக்டாக் மற்றும் வீசாட் தொடர்பாக சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களினால் சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு குறைந்து காணப்படுகிறது.