1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 29 மே 2021 (18:46 IST)

கங்கைக் கரை மணலில் புதைக்கப்பட்ட பெருமளவு சடலங்கள் - பாரம்பரியமா?

பிரயாக்ராஜில் (அலகாபாத்) கங்கைக் கரையில் சில இடங்களில் மணலில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சடலங்களின் படங்களும் வீடியோக்களும் தேசிய அளவிலும் உலகளவிலும் விவாதப் பொருளாக ஆனபோது, இந்த நூற்றுக்கணக்கான மரணங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

கடந்த வாரம், இந்நகரில் இருந்த மாநில அமைச்சர் மகேந்திர பிரதாப் சிங், இப்படிப் புதைப்பது 'பிரயாக்ராஜின் பழமையான பாரம்பரியம்' என்று கூறினார்.
 
கடந்த இரண்டு மாதங்களில், பிரயாகராஜில் உள்ள ஷ்ரிங்வெர்பூர் அருகே கங்கைக்கு மிக அருகில் எண்ணிலடங்காத அளவு சடலங்கள் புதைக்கப்பட்டன.
 
இந்தச் சடலங்கள் மீது போர்த்தப்பட்டிருந்த துணியும் சில இடங்களில் இறந்தவர்களின் உடல் பாகங்களும் கூட வெளியில் தெரியும் அளவிற்கு அவசர அவசரமாக இவை புதைக்கப்பட்டுள்ளன. அந்த உடல் பாகங்களை இரையாகக் கொள்ள, விலங்குகளும் கழுகுகளும் காகங்களும் சுற்றிச் சுற்றி வந்தன.
 
இந்த நிலைமை பிரயாக்ராஜின் ஃபாஃபாமவு, ஜான்சி, தாராகஞ்ச் மற்றும் வேறு சில ஆற்றுத் துறைகளிலும் காணப்பட்டது. இதற்கு முன்னர், உன்னாவ், ஃபதேபூர், கான்பூர் மற்றும் ரே பரேலி ஆகிய இடங்களிலும் இவ்வாறு சடலங்கள் புதைக்கப்பட்டன.
 
அதற்கு முன்னர், கங்கை, யமுனை ஆறுகளில் ஏராளமான சடலங்கள் மிதந்து சென்றன.
 
கிராமங்களில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இறப்புகள் எதனால் நிகழ்ந்தன என்பதும் இவை எந்தெந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களின் சடலங்கள்  என்பதும் இப்போது வரை மர்மமாகவே உள்ளது.
 
இந்தச் சடலங்கள் யாருடையவை என்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மக்கள் தாமாக முன்வந்து புதைத்திருக்கிறார்கள் என்றும் நீண்ட காலமாக மக்கள் இங்கு இதைச் செய்து வருகிறார்கள் என்றும் பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் பானுச்சந்திர கோஸ்வாமி கூறுகிறார்.
 
"இது ஒன்றும் புதிதல்ல. இங்குள்ள அனைவருக்கும் இது பற்றித் தெரியும். சில சமூகங்களில் இது ஒரு பாரம்பரியம். மற்றும் சிலர் பாம்புக் கடித்து இறந்த உடல்களை இப்படித்தான் அடக்கம் செய்கிறார்கள்" என்றும் அவர் கூறுகிறார்.
 
இருப்பினும், மாசுபாட்டைத் தவிர்க்க, உடல்களை எரிப்பதற்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்று விழிப்புணர்வைப் பரப்பும் வகையில் நாங்கள் குழுக்கள்  அமைத்துள்ளோம் என்றும் அவர் கூறுகிறார்.
 
இதற்கு முன்பும்கூட புதைக்கப்பட்ட சடலங்கள் கங்கையில் காணப்பட்டுள்ளன என்று நிர்வாக அதிகாரிகள் கூறுகிறார்கள். உன்னாவ் மாவட்ட ஆட்சியர் ரவீந்திர  குமார் கூறுகையில், மணலில் ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டதற்குக் காரணம் இது பாரம்பரியமான முறை என்பது தான் என்று தெரிவிக்கிறார்.
 
பிரயாக்ராஜில் உள்ள சில உள்ளூர் செய்தித்தாள்கள், 2018 ஆம் ஆண்டு கும்ப மேளாவிற்கான ஏற்பாடுகளின்போதே, ஷ்ரிங்வெர்பூரைச் சுற்றி இதே போன்ற காட்சிகள்  காணப்பட்டதாகவும், இது பல முறை நிகழ்ந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
 
ஆனால் ஒரு விரிவான விசாரணையில், வட இந்தியாவில் இந்து மதத்தில் உடல்கள் அடக்கம் செய்யப்படும் பாரம்பரியம் இல்லை என்றே தெரியவருகிறது. மாறாக  அசாதாரணமான சூழ்நிலைகளில் சிறப்புச் சூழ்நிலைகளில் அல்லது வேறு வழியில்லாத சூழ்நிலையில்தான் இவ்வாறு செய்கிறார்கள் என்றும் தெரியவருகிறது.
 
பிரயாக்ராஜில் உள்ள தாராகஞ்சில் உடல் தகனத்தின்போது புரோகிதம் செய்யும் ராஜ்குமார், "பல நேரங்களில், மக்கள் உடல்களைக் கொண்டு வந்து மணலில் புதைத்துவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், தகனம் செய்யும் வசதி இல்லாதவர்கள் அல்லது இறந்த குழந்தைகளின் உடல்களைக் கொண்டு வருவோர்தான் அப்படிச்  செய்கின்றனர்" என்கிறார்.
 
மேலும், "இப்படிச் செய்வோர் பலரை சந்தித்து அவர்களுடன் பேசியபோது, பணம் இல்லாததால்தான் இப்படி சடலங்களை மணலில் புதைத்துச் செல்வதாகக்  கூறுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் பல முறை உதவியுள்ளோம். தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் உதவுகின்றன. யாரும் தங்கள் சொந்த விருப்பத்தினாலோ அல்லது பாரம்பரியத்தினாலோ புதைக்கப்பதில்லை. " என்று அவர் கூறுகிறார்.
 
உன்னாவில் உள்ள பக்சர் துறைக்கு வெளியே இறுதிச் சடங்குக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்து வரும் தின்கர் சாஹு, இவ்வளவு பெரிய  எண்ணிக்கையில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு, கங்கை ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்குகிறார்.
 
அவர், "தகனக்கூடங்களில் காணப்படும் கூட்டம், விறகு விலையேற்றம் காரணமாக ஏழைகள் இறந்த உடல்களை அடக்கம் செய்யத் தொடங்கியுள்ளனர். கங்கை ஆற்றுத் துறைகளுக்குச் சற்று தொலைவில் மணலில் சடலங்கள் புதைக்கப்பட்டன. ஆனால் இது அரிதாகத்தான் நடக்கும். ஏதோ ஒரு கட்டாயத்தின் பேரில்தான்  மக்கள் இப்படிச் செய்திருக்க வேண்டும்." என்று கூறுகிறார்.
 
பிரயாக்ராஜில் உள்ள ஷ்ரிங்வெர்பூருக்கு அருகிலுள்ள கமலாப்பூர் கிராமத்தில் வசிக்கும் திலீப் குமார், கடந்த ஒரு மாதமாக, அக்கம்பக்கத்திலிருந்து எண்ணிலடங்காதவர்கள் சடலங்களை கங்கை மணலில் புதைத்துச் சென்றுள்ளனர் என்று கூறுகிறார். ஊரைச் சுற்றி வசிக்கும் மக்கள் பலர், பலமுறை  காவல்துறையில் புகார் செய்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று திலீப் குமார் கூறுகிறார்.
 
"இரண்டுமே மரபுதான் ஆனால், தகனமே சிறந்தது"
 
கடந்த சில நாட்களில், உத்தரப்பிரதேசத்தில் எந்தெந்த இடங்களில் கங்கை மணலில் சடலங்கள் புதைக்கப்பட்டனவோ அங்கு அருகிலுள்ள இடங்களில் வசிக்கும் பலருடன் நாங்கள் பேசினோம். ஆனால் இதை ஒரு பாரம்பரியம் என்று அங்கு எந்தக் குடும்பமும் கூறவில்லை.
 
மே 11 அன்று, கமலாப்பூர் கிராமத்தின் தலித் பெண் ஒருவர் 'இருமல்-காய்ச்சல்' காரணமாக இறந்தார். அவர்கள் இறந்த உடலை மணலில் புதைத்தனர். ஆனால் இது  'அகால மரணம் என்பதால்தான் இப்படி என்றும் எப்போதும் இப்படி இல்லை' என்று அந்தக் குடும்பத்தினர் கூறினார்கள்.
 
கொரோனா காரணமாக ஊரில், ஏராளமான மக்கள் இறந்தனர். இடுகாடுகளிலும் கல்லறைகளிலும் இறுதிக் காரியங்கள் செய்ய நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.  இடுகாடுகளில் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது
 
இது மட்டுமல்லாமல், பல இடங்களில் விறகு விலை பலமடங்கு அதிகரித்தது. சுடுகாடுகளில் விறகு பற்றாக்குறை இருந்தது. கிராமங்களிலும் இறப்புகள் நிகழ்ந்தன,  இந்த பிரச்சினைகள் கிராமங்களிலும் இருந்தன. இதன் விளைவாக, தகன செலவை சுமக்க முடியாத பலர், இறந்த உடலை மணலில் புதைத்துச் சென்றனர் அல்லது  ஆறுகளில் மிதக்க விட்டனர்.
 
பிரயாக்ராஜில் உள்ள தாராகஞ்சில் உள்ள ஒரு சமஸ்கிருத கல்லூரியின் முதல்வரான டாக்டர் பாபுலால் மிஸ்ரா கூறுகையில், இரண்டுமே மரபுகள்தாம். ஆனால் இந்து வேதங்களில் தகனமே சிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் அதையே பின்பற்றுகிறார்கள்.
 
பிபிசியிடம் பேசிய டாக்டர் மிஸ்ரா, "தொழுநோய், காசநோய் போன்றவற்றால் இறப்பவர்கள் தகனம் செய்யப்படுவதில்லை, ஏனெனில் அந்த நோய்கள் தகனம் செய்பவர்களுக்கும் பரவும் என்று நம்பப்படுகிறது. அவர்களைத் தண்ணீரில் விடுவதும் பூமியில் புதைப்பதும் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும்  பூணூல் அணிவிக்கப்படாதவர்கள் இறந்தால், அவர்களையும் அடக்கம் செய்வது பண்டைய காலத்திலிருந்தே மரபாக உள்ளது. 
 
"சடலங்களை எரிப்பதற்கும் ஜாதிக்கும் தொடர்பில்லை, ஏழ்மைதான் காரணம்."
பாபுலால் மிஸ்ரா மேலும் கூறுகிறார், "தற்போது தகனம் செய்வது செலவு மிக்கதாகிவிட்டது. வசதி இல்லாதவர்கள், சாதாரண மரணத்திலும வேறு வழியின்றிப்  புதைக்கிறார்கள். பழைய பாரம்பரியத்தின் படி உடல் புதைக்கப்படும்போது, வெறுமனே புதைக்காமல், உப்பு மற்றும் சில பொருட்களைச் சேர்த்துப் புதைப்பது  வழக்கம். இதனால் உடல் கரைந்து சுற்று சூழலும் மாசுபடாமல் இருக்கும்."
 
இந்து மதத்தில் சில சாதிகளில் சடலத்தை அடக்கம் செய்வது பாரம்பரியம் என்று உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். ஆனால் டாக்டர் மிஸ்ரா அதை முற்றிலும்  நிராகரிக்கிறார். "இதற்கும் சாதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இதற்கு வறுமைதான் காரணம். வசதி இல்லாததால், தலித் சமூகத்தினர் முன்பு இப்படிச் செய்து  வந்தார்கள். ஏழைகள் இன்னும் இதைச் செய்கிறார்கள், ஆனால் வசதியுள்ளவர்கள் தகனம் மட்டுமே செய்கிறார்கள்." என்று அவர் கூறுகிறார்.
 
சில விதிவிலக்குகள் உள்ளன என்று மிஸ்ரா கூறுகிறார், "அசாதாரணமான சூழ்நிலைகளில் விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. துறவிகள் தகனம் செய்யப்படுவதில்லை.  அவர்களை நீரில் விடுகிறார்கள் அல்லது பூமியில் அடக்கம் செய்கிறார்கள். காரணம், அவர்கள் துறவு மேற்கொள்ளும் முன்பே இறுதிச் சடங்குகள்  செய்யப்படுகின்றன."
 
சைவ சம்பிரதாயத்திலும், கபீர் வழிவந்தவர்களும் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.
 
சமூகவியலாளர்கள் கூட, இந்து மதத்தில், குறிப்பாக வட இந்தியாவில் அடக்கம் செய்யும் மரபு இருப்பதாக ஏற்பதில்லை. காசி இந்து பல்கலைக்கழகத்தின்  சமூகவியல் பேராசிரியர் அசோக் கவுல் கூறுகிறார், "இதுபோல ஒரு பாரம்பரியம் இருப்பதாக சொல்வதற்கு வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை. செவி வழிச்  செய்தி மட்டுமே. இது இந்து மதத்தில் ஒருபோதும் ஒரு முக்கிய கலாசாரமாக இருந்ததில்லை. அடக்கம் செய்வது அல்லது எரிப்பது தொடர்பான சர்ச்சை சாதியின்  அடிப்படையில் அல்ல. "
 
இந்து மதத்தில் உள்ள சில பிரிவுகளான சைவம், கபிர் வழி வந்தவர்கள், அடக்கம் செய்யப்படும் வழக்கம். இருந்தாலும், பேராசிரியர் அசோக் கவுல் கருத்துப்படி,  "அத்தகைய நபர்களின் எண்ணிக்கை அன்றும் கூட மிகக் குறைவாகவே இருந்தது, இன்று அது இன்னும் குறைவு."
 
பிரயாக்ராஜில் உள்ள ஒரு மூத்த நிர்வாக அதிகாரி, 2018, 2019 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளின் சில புகைப்படங்களை காட்டி, சடலங்களை அடக்கம்  செய்வது மரபு என்று கூறுகிறார். ஆனால் பல உள்ளூர் பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் 'முன்பும் உடல்கள் புதைக்கப்பட்டதுண்டு. ஆனால் இத்தனை பெரிய எண்ணிக்கையில் இதுவரை இருந்ததில்லை' என்று கூறுகிறார்கள். மூத்த புகைப்படக் கலைஞர் ராஜேஷ் குமார் சிங் பிரயாக்ராஜில் உள்ள சர்வதேச  செய்தி, புகைப்பட நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
 
ராஜேஷ் குமார் சிங் விளக்குகிறார், "உடல்கள் புதைக்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் 2018 அல்லது அதற்கு முன்னர் இவ்வளவு உடல்களைப்  பார்த்ததில்லை. 2019 ஆம் ஆண்டில் நமாமி கங்கே திட்டத்திற்காக பிஜ்னோரில் இருந்து பலியாவுக்குப் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, பல இடங்களில் கங்கைக் கரையில் மணலில் புதைக்கப்பட்ட உடல்களை நான் கண்டேன். ஷ்ரிங்வெர்பூரிலும் பார்த்தேன். நான் அவற்றைப் படங்களும் எடுத்திருந்தேன். ஆனால், இப்போது இருப்பதைப் போன்ற எண்ணிக்கையில் எப்போதும் இல்லை.
 
பல உள்ளூர் பத்திரிகையாளர்கள், 2018 ஆம் ஆண்டில் சடலங்கள் புதைக்கப்பட்டது தெரியவந்திருந்தால், அந்த செய்தி உள்ளூர் ஊடகங்களில்  வெளியிடப்பட்டிருக்கும், மேலும் அது புகைப்படக் கலைஞர்களின் கண்களிலிருந்து தப்பிக்க முடியாது, ஆனால் அது நடக்கவில்லை. இவ்வளவு பெரிய அளவில்  உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு பெரிய காரணம், கடந்த ஒன்றரை மாதங்களுக்குள் கிராமங்களில் கோவிட் மற்றும் பிற நோய்கள் இருந்ததுதான் என்பது  உள்ளூர் மக்களின் கருத்து.
 
"நோய் காரணமாக ஏற்பட்ட மரணங்கள் குறித்து, யாரும் தங்களிடம் கேள்வி எழுப்பிவிடக் கூடாதே என்று உறவினர்களும் கங்கையில் மணலில் புதைத்து விடுகிறார்கள். இரண்டாவது காரணம், வசதி இல்லாதது. " என்று அவர்கள் கூறுகிறார்கள்.
 
எஸ்.கே. யாதவ் கடந்த மூன்று தசாப்தங்களாக பிரயாகராஜில் புகைப்படப் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது அலகாபாத் பல்கலைக்கழகத்தில்  புகைப்படத் துறையில் பேராசிரியராக உள்ளார். எஸ்.கே. யாதவ் 2018 ஆம் ஆண்டில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சடலங்களின் அடக்கம் பற்றியோ அல்லது அவற்றின் படங்கள் ஊடகங்களில் வெளியானதாகவோ அறிந்திருக்கவில்லை.
 
"கங்கைக் கரையில் கல்லறை போன்ற ஒரு காட்சி என்பது சாதாரண விஷயமல்ல. இதுபோன்ற விஷயம் நடந்து அவை ஊடகங்களில் வராமல் இருப்பது என்பது  அசாத்தியம். சில ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டதைக் காட்டும் படங்கள் என்று கூறி சில படங்கள் வெளிவருகின்றன என்றால், நிச்சயமாக இவற்றைச்  சரிபார்க்க வேண்டும். அவை எந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்று கண்டறிய வேண்டும். இப்போதெல்லாம், இது மொபைலிலிருந்து எடுக்கப்பட்டாலும் கேமராவிலிருந்து எடுக்கப்பட்டாலும் அதன் தேதி உள்ளிட்ட முழு விவரங்களையும் அறியமுடியும். " என்கிறார் அவர்.