1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (12:46 IST)

லேண்ட்சாட் 9 செயற்கைக் கோள்: பூமியை 49 ஆண்டுகளாக வட்டமிடும்

உலகின் மிக முக்கியமான செயற்கைக்கோள், கலிஃபோர்னியாவிலிருந்து நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி திங்கட்கிழமை ஏவப்பட்டது.

லேண்ட்சாட்-9 என்பது சுமார் கடந்த 50 ஆண்டுகளாக பூமியை கண்காணித்து வரும் விண்கலன்களின் தொடர்ச்சியாக இருக்கிறது.

வேறு எந்த ரிமோட் சென்சிங் அமைப்பும் நமது பூமியின் மாறி வரும் நிலை குறித்த நீண்ட, தொடர்ச்சியான பதிவை வைத்திருக்கவில்லை.

லேண்ட்சாட் - 9 வான்டன்பெர்க் விண்வெளிப்படை தளத்திலிருந்து அட்லஸ் ராக்கெட்டில் உள்ளூர் நேரப்படி காலை 11:12-க்கும் ஏவப்பட்டது.

அப்பல்லோ விண்வெளி வீரர்கள் பூமியைத் திரும்பிப் பார்த்த எடுத்த படங்கள்தான், நம் பூமிக்கு மேல் நிரந்தரக் கண்காணிப்பு வேண்டும் என்கிற எண்ணத்தை உறுதிப்படுத்தியது. 1972 ஆம் ஆண்டில், அமெரிக்க விண்வெளி நிறுவனம் (நாசா), அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) ஆகிய இரண்டும் இணைந்து, அவற்றின் புவி வள ஆற்றல் தொழில்நுட்ப செயற்கைக்கோளை ஏவத் தொடங்கின.

நேற்று, ஒன்பதாவது இமேஜிங் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது, அத்திட்டம் தான் பின்னர் லேண்ட்சாட் திட்டம் என்று அழைக்கப்பட்டது.

நாசா மற்றும் யுஎஸ்ஜிஎஸ் விண்கலத் தொடர் தான் பூமியின் மாற்றத்தின் வலுவான பதிவுகள்.

லேண்ட்சாட் செயற்கைக் கோள்கள், பெருநகரங்களின் வளர்ச்சி, விவசாயத்தின் பரவல், கடற்கரைகள், காடுகள், பாலைவனங்கள், பனிப்பாறைகளின் வளர்ச்சி மற்றும் அதன் மாற்றங்களை பட்டியலிட்டுள்ளது.

காட்டெருமை, வோம்பாட்ஸ், மரங்கொத்திப் பறவை, வால்ரஸ் என பல விலங்குகளைக் கூட கண்காணிக்க இந்த செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட்டன.

"கடந்த அரை நூற்றாண்டில் பூமி எவ்வாறு மாறியது என்பதற்கான ஒரு அற்புதமான வரலாற்றை நாங்கள் சேகரித்துள்ளோம்," என்கிறார் நாசாவின் லேண்ட்சாட் - 9 திட்ட விஞ்ஞானி முனைவர் ஜெஃப் மாசெக்,

"உதாரணமாக, காட்டுத் தீ, சூறாவளி, பூச்சி வெடிப்புகள் போன்ற இயற்கை இடையூறுகளை நாம் காண முடிகிறது,"

"சுற்றுச்சூழல் அமைப்புகளில் பருவநிலை மற்றும் பருவநிலை மாற்ற பாதிப்புகளை நாம் குறிப்பாக பார்க்க முடிகிறது. வெப்பமான பருவநிலை காரணமாக உயர் அட்சரேகை பகுதிகளில் செடி கொடிகளின் அதிகரிப்பு மிகுந்த பகுதிகளை நாங்கள் வரைபடமாக்கியுள்ளோம். அதே நேரத்தில் குறைவான நீர் கிடைக்கும் மற்றும் பாதி வறண்ட சுற்றுச்சூழலைக் கொண்ட பகுதிகளில் தாவரங்கள் குறைந்து வருவதையும் நாங்கள் பார்த்தோம். "

1982ஆம் ஆண்டு முதல், லேண்ட்சாட் - 4 செயற்கைக் கோள் முதல், இந்த அமைப்பு தரையில் உள்ளவைகளை 30 மீட்டர் தொலைவு வரை நுட்பமாக காண முடிந்தது. இப்போது மிகவும் கூர்மையாக உற்று நோக்கும் (பத்து சென்டிமீட்டர் வரை காணப்படும்) ஏராளமான பிற இமேஜிங் தொழில்நுட்ப விண்கலங்கள் உள்ளன, ஆனால் நீண்ட காலத்துக்கு எந்த ஒரு விண்கலங்களும் லேண்ட்சாட் அருகில் கூட வருவதில்லை.

இந்த தரவுகளை எங்கும், யார் வேண்டுமானாலும் இலவசமாக பயன்படுத்தலாம்.

லேண்ட்சாட் - 9 செயற்கைக் கோள், அதன் அட்லஸ் ராக்கெட்டின் உச்சியில் இருந்து செயல்பாட்டுக்கு வருவதற்கு முன் சில பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது.

அட்லஸ் ராக்கெட் இந்த செயற்கை கோளை 680 கிலோமீட்டருக்குக் கீழ் கொண்டு சேர்த்துவிட்டது. லேண்ட்சாட் செயற்கைக் கோள் தன் த்ரஸ்டர்களைப் பயன்படுத்தி, தன் கண்காணிப்பு உயரமான 700 கிலோமீட்டரை விட சற்று உயரத்தை அடைய வேண்டும்.

சில வாரங்களுக்குப் பிறகு, லேண்ட்சாட் 9 செயற்கைக் கோள் படங்களை எடுக்கத் தொடங்கும், அதை 2013ஆம் ஆண்டில் ஏவப்பட்ட லேண்ட்சாட் - 8-ன் படங்களோடு ஒப்பிடலாம்.

இந்த பகுப்பாய்வு புதிய விண்கலத்தால் கண்டறியப்பட்ட வண்ணங்களை ஐந்து தசாப்தங்கள் பழமையான லேண்ட்சாட் காப்பகத்தில் உள்ள பழைய படங்களுடன் நேரடியாகப் பொருத்துவதை உறுதி செய்யும்.

கடந்த ஆறு ஆண்டுகளாக, லேண்ட்சாட் ஐரோப்பிய ஒன்றியத்தின் சென்டினல் -2 செயற்கைக்கோள்களின் விண்மீன் தொகுப்பில் பறந்து வருகிறது. மீண்டும், அவர்களின் உருவப்படங்கள் துல்லியமாக அமைக்கப்பட்டன, இதனால் அவர்கள் தங்கள் அமெரிக்க சகாக்கள் பூமியைப் பார்ப்பது போலவே பார்க்கிறார்கள்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அமைப்புகள் இரண்டையுமே கட்டமைப்பதற்கும், இயங்குவதற்கு அதிகம் செலவாகும். லேண்ட்சாட் - 9 செயற்கை கோளின் வாழ்க்கைச் சுழற்சிக்கான செலவு $1 பில்லியனுக்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மில்லியன் டாலர்களில் ஏவப்படும் வணிக ரீதியிலான புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் இருக்கும்போது, இதுபோன்ற திட்டங்களின் பணத்திற்கான மதிப்பு குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"நிறைய விஷயங்களைச் செய்ய வணிக நிறுவனங்கள் எங்களை அனுமதிக்கின்றன, ஆனால் அவை லேண்ட்சாட் மூலம் நாங்கள் செய்யும் கண்காணிப்புகளுக்கு மாற்றாக இல்லை. உதாரணமாக வணிக அமைப்புகள், பொதுவாக - அவர்கள் அடிக்கடி கண்காணிக்க முடியும்,

ஆனால் நாங்கள் லேண்ட்சாட் செயற்கைக் கோளைக் கொண்டு கண்காணிக்கும் எல்லா அலைவரிசையையும் அவர்கள் கவனிப்பதில்லை," என்று நாசாவின் எர்த் சயின்ஸ் இயக்குனர் முனைவர் கரேன் செயின்ட் ஜெர்மைன் பிபிசி செய்திக்கு தெரிவித்தார்.

இந்த கருத்தை சான்-பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்கும் பிளானட் என்கிற நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் வில் மார்ஷல் எதிரொலித்தார், இந்நிறுவனம் இன்று 200 க்கும் மேற்பட்ட சிறிய இமேஜர்களை சுற்றுப்பாதையில் இயக்கி வருகிறது.

நாசா தனது நிறுவனத்தின் (பிளானட்) தரவை, அதன் காலநிலை மாதிரிகளை மேம்படுத்துவதற்காக வாங்கியதாகவும், பிளானட் நிறுவன பொறியாளர்கள் தங்கள் சொந்த தயாரிப்புகளை மேம்படுத்த லேண்ட்சாட்டின் படங்களை நம்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.