1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (14:24 IST)

பெண்ணின் இதயத்தில் தோட்டா: ஆறு மாதங்களுக்குப் பிறகு மீட்ட மருத்துவரின் அசராத முயற்சி

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையை இணைக்கும் மாகாணமான கைபர் பக்தூங்க்வாவில் பெண்ணின் இதயப்பகுதியில் துளைத்த தோட்டாவை பல மாத முயற்சிக்குப் பிறகு மீட்டுள்ளார் அங்குள்ள மருத்துவர் ஒருவர். மிகவும் நுட்பமான அந்த அறுவை சிகிச்சை அனுபவத்தை பிபிசியிடம் விளக்கினார் அம்மருத்துவர்.

"ஒரு பெண் நோயாளியின் திறந்த நெஞ்சுப்பகுதியில் குண்டு இருக்கும் இடத்தை நாங்கள் தேடினோம். ஆனால் தோட்டாவின் தடயமே இல்லை. நோயாளியைப் பற்றி எனக்கு அதிக கவலை ஏற்பட்டது. காரணம் ஆறு மாதமாக அவர் நெஞ்சில் குண்டைத் தாங்கியுள்ளார்."

கைபர் பக்ததூங்க்வாவின் அபோட்டாபாத் நகரில் அமைந்துள்ள அய்யூப் பயிற்சி மருத்துவமனையின் மருத்துவர் ஜாஹித் அலி ஷாவுக்கு இது ஆச்சரியமாக இல்லை. தொராசிக் அறுவை சிகிச்சை துறையின் தலைவராக, அவர் இதுபோன்ற பல கடினமான அறுவை சிகிச்சைகளை கடந்த காலங்களில் செய்துள்ளார்.

ஆனால் அன்று அவர் முன் இருந்த கேள்வி, "தோட்டா எங்கே போனது?"

நாஸியா நதீம் பெஷாவர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது கணவர் நதீம் கான் அஃப்ரிடி கராச்சியில் வேலை செய்கிறார். நாஸியா, மாமியார், மாமனார், மைத்துனர் மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் தனது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

"அது பிப்ரவரி மாதத்தின் இறுதி. நாங்கள் அனைவரும் மாலையில் எங்கள் முற்றத்தில் அமர்ந்திருந்தோம். திடீரென்று என் நெஞ்சில் ஏதோ துளைத்தது என் உடலுக்குள் நுழைந்தது போல் உணர்ந்தேன், நான் தரையில் விழுந்தேன்." என்று அந்தச் சம்பவத்தை அவர் நினைவுகூர்கிறார்.

மாமியார் குடும்பத்தினர் தன்னை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் நாஸியா கூறுகிறார்.

"அறுவை சிகிச்சைக்குப் பிறகு, என் உடலில் ஒரு தோட்டா பாய்ந்திருப்பதாகவும் ஆனால், அதை அகற்ற முடியவில்லை என்றும் கூறப்பட்டது. ரத்தப்போக்கை நிறுத்தி மார்பை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது."

நாஸியா உடலில் குண்டு பாய்ந்த அந்த நேரத்தில் அவரது கிராமத்தில் மூன்று நான்கு திருமண விழாக்கள் நடைபெற்றுவந்தன. அனைத்துத் திருமணங்களிலும் கொண்டாட்டத்திற்காகத் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருந்தது, எனவே தோட்டா எங்கிருந்து வந்தது என்று ஊகிக்க கூட முடியவில்லை.

நாஸியா நதீமின் கணவர் நதீம் கான் அஃப்ரிடி, தங்கள் பகுதியில் திருமணங்களில் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடப்பது வழக்கம் என்றும் இப்படிப்பட்ட தோட்டாக்கள் பலரின் உயிரைக் குடித்துள்ளன என்றும் கூறுகிறார்.

"என் மனைவியும் இதேபோன்ற தோட்டாவுக்கு இலக்காகியிருக்கிறார். ஆறு மாதங்களாக அவர் அனுபவிக்கும் வலியால் எங்கள் வாழ்வே துன்பமாகியுள்ளது"

பெஷாவரில் நடந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மார்பு மற்றும் கல்லீரலில் தொடர்ந்து வலி இருந்தது, அதனால் எழுந்திருக்க கூட முடியவில்லை என நாஸியா நதீம் கூறுகிறார்.
"எனக்கு மூன்று குழந்தைகள், இளைய மகனுக்கு ஒன்றரை வயது. என் குழந்தைகளுக்கான எந்த வேலையையும் கூட செய்ய எனக்கு உடலில் வலுவில்லை. சிறிய எடையைக் கூட தூக்க முடியவில்லை"

மூன்று இளம் குழந்தைகளின் தாயின் வாழ்க்கை பொதுவாக மிகவும் பரபரப்பானதாக இருக்கும். அவர்கள் பின்னால் ஓடவே ஒரு தாய்க்கு நேரம் சரியாக இருக்கும். ஆனால் நாஸியா வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால், பெரும்பாலான நாட்களில் மயக்கத்தில் இருந்தார்.

வீட்டில் ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்ததால், அவரது மாமியார், மாமனார், மைத்துனர் ஆகியோர் அவருடைய பணிகளைப் பகிர்ந்து கொண்டனர்.

"அந்த வலி என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. என் குழந்தையை என் கைகளில் தூக்கக் கூட முடியவில்லை. அவர்கள் தான் என் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டார்கள்."

மருத்துவச் செலவு செய்தும் சிகிச்சை இல்லை

நதீம் அஃப்ரிடி தனது மனைவிக்கு ஏற்பட்ட விபத்து பற்றிய செய்தி கிடைத்தவுடன், கராச்சியில் இருந்து சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு பெஷாவர் வந்ததாகக் கூறுகிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்த பிறகும், எப்போதும் மார்பு மற்றும் கல்லீரலில் வலி இருந்ததாகக் கூறுகிறார்.

தனது மனைவிக்கு வலி காரணமாக மயக்கம் ஏற்பட்டதாகவும் இன்னும் சில நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு, பெஷாவரில் உள்ள அனைத்து மருத்துவர்களிடமும் அழைத்துச் சென்றதாகவும் கூறுகிறார் அஃப்ரிடி.

இந்த ஆறு மாத காலத்தில் ஒவ்வொரு வாரமும் தன் மனைவியை மருத்துவரிடம் அழைததுச் சென்றதாகவும், பல மருத்துவர்களும் தோட்டா வெளியே எடுக்க முடியாத படி சிக்கியிருப்பதாகக் கூறியதாகவும் தெரிவிக்கிறார். இப்படிச் சிக்குவது அசாதாரணமானதல்ல என்று அவர்கள் கூறினாலும், வலியை மட்டும் போக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார் நதீம்.

ஒவ்வொரு மருத்துவரும் இன்னொரு மருத்துவரைக் கை காட்டி விட்டதில், ஒவ்வொரு முறையும் எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட் போன்ற சோதனைகளுக்கு மட்டுமே ஐந்து முதல் ஆறு லட்சம் வரை செலவாகியுள்ளதாகக் கூறுகிறார். மற்ற செலவுகள் இதில் அடங்காது என்றும் கூறுகிறார்.

"என்ன செய்வது என்று புரியாமல் தவித்த போது அபோட்டாபாத்தில் இது போன்ற சிக்கலான விஷயங்களில் அனுபவம் வாய்ந்த ஜாஹித் அலி ஷா என்ற மருத்துவரிடம் செல்லுமாறு சிலர் அறிவுரை கூற, அவர், பரிசோதித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் ஆனால் அதில் ஆபத்து இருப்பதாகவும் கூறினார்." என்கிறார் நதீம்

அந்தப் பெண்ணின் பரிசோதனை மற்றும் ஆரம்ப அறிக்கைகளில் இருந்து, அந்த தோட்டா இதயத்தின் அருகில் எங்கோ இருப்பதாவும் கடினமான அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற முடியும் என்றும் மருத்துவர் ஜாஹித் அலி ஷா கூறினார்.

அவர் இதற்கு முன்பு இதுபோன்ற கடினமான அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளதால், அவர் நம்பிக்கையுடன் இருந்தார். அவர் மேலும் கூறுகையில், "நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற அறுவை சிகிச்சை செய்தேன், ஒன்பது வயது குழந்தையின் உடலில் குண்டு பாய்ந்திருந்தது. தோட்டா அவரது மார்பில் பட்டது என்றும் கூறப்பட்டது, ஆனால் உண்மையில் தோட்டா அந்தக் குழந்தையின் இதயத்தில் இருந்தது" என்றார்.

மருத்துவர் ஜாஹித் அலி ஷா, "அறுவை சிகிச்சை தொடங்கியபோது, இந்த அறுவை சிகிச்சை ஐந்து மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. நாங்கள் அவருடைய மார்பைத் திறந்தபோது, தோட்டா சிக்கிக் கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து அறுவை சிகிச்சையைத் தொடங்கினோம். அந்தப் பெண்ணின் இதயத்தைக் கையால் தொட்டபோது, அந்த தோட்டா இதயத்தில் நுழைந்தது என்பதை புரிந்துகொண்டேன்," என்கிறார்.

"எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்ததில், இதயத் துடிப்போடு தோட்டாவும் மேலேயும் கீழேயும் நகர்ந்தது தெரிந்தது. ஆறு மாதமாக இவர் இதை அனுபவித்து வந்ததால் எனக்கு அந்தப் பெண் குறித்து அதிக கவலை ஏற்பட்டது."

"அவர் அன்று உயிருடன் இருந்தார். ஆனால், மரணத்துக்கு மிக அருகில் இருந்தார் அவர். மரணவாயிலில் இருந்து மீண்டார் அவர்".

மூன்றாவது முயற்சியில் கிடைத்த வெற்றி

இந்த அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் ரஹ்மத்தின் உதவி பெறப்பட்டதாக மருத்துவர் ஜாஹித் அலி ஷா கூறுகிறார்.

"நான் அல்லாஹ்வின் பெயரைக் கூறி, இதயத்தின் வலது வென்ட்ரிக்கிளில் ஒரு வழி உருவாக்க ஆரம்பித்தேன், அங்கு தான் புல்லட் சிக்கியிருந்தது. இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தங்கள் செயல்பாடுகளில் இதயத்தைக் கட்டுப்படுத்த இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் என்னிடம் அது போன்ற வசதி இல்லை."

"அந்தப் பெண்ணின் இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போது தான் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. மிகவும் மென்மையான நரம்புகளைக் கையாளும் சமயம், இதயம் துடிக்கும் போது, ஒரு சிறிய தவறு கூட மிகவும் ஆபத்தானது." என்றார் மருத்துவர்.

"இரண்டு முறை முயற்சித்தேன் ஆனால் தோட்டா இருக்கும் இடத்தை அடைய முடியவில்லை. மூன்றாவது முறை நான் வெற்றி பெற்றேன்." என்கிறார் அவர்.

தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் இதய அறுவை சிகிச்சையை எப்படிச் செய்தார்?

"நாடு முழுவதும் தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை 80 அல்லது 90 தான். கைபர் பக்தூங்க்வாவில் இந்த எண்ணிக்கை ஒன்பது அல்லது பத்து தான்," என்கிறார் மருத்துவர் ஜாஹித் அலி ஷா.

தொராசிக் அறுவை சிகிச்சையில், மார்புக்குள் உள்ள அனைத்து உறுப்புகளும் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகின்றன.

மருத்துவர் ஜாஹித் அலி ஷா "நான் முன்பு எலும்பியல் அறுவை சிகிச்சையில் தான் பயிற்சி பெற்று வந்தேன். ஆனால் தொராசிக் அறுவை சிகிச்சை தான் அதிகம் தேவையாக இருப்பதை உணர்ந்து, நான் இந்த துறைக்கு வந்தேன்." என்கிறார்.

மருத்துவர் ஜாஹித் அலி ஷா, தங்களிடம் போதுமான மருத்துவர்களோ வசதிகளோ இல்லை என்று கூறுகிறார். ஒரு அறுவை சிகிச்சைக்கு அந்தத் துறையில் உள்ள நிபுணர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களிடம் நேரம் இருப்பதில்லை.

"அவர் போன வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது." என்கிறார்.

15- 20 விநாடிகளில் நற்செய்தி

மருத்துவர் ஜாஹித் அலி ஷா, "ஐந்து மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையை நான் தனியாகச் செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு சோர்வு ஏற்படவில்லை. ஆனால் நான் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்காகச் சிறிது நேரம் ஓய்வெடுத்தேன்." என்கிறார்.

"நோயாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே ஒரு எண்ணம் தான் இருந்தது. அதற்காக உயிரைக் கொடுத்து உழைத்தேன்." என்கிறார் அம்மருத்துவர்.

அவர் தோட்டா இருக்கும் இடத்தை அடைந்து அதை வெளியே எடுத்தபோது, நோயாளியின் இரத்த அழுத்தம் பதினைந்து வினாடிகளுக்குக் குறைந்து விட்டது என்று கூறினார். அப்போது, அவரது இதயப் பைகளில் ஒன்றில் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதாகவும் அந்த பதினைந்து வினாடிகள் மிகவும் ஆபத்தானவை என்றும் அவர் கூறினார்.

"உடனடியாக அவருக்கு இரத்தம் கொடுத்து, அவரது இதயத் துடிப்பைத் தொடர வைக்க ஆவன செய்தேன். அடுத்த இருபது வினாடிகளில் நோயாளியின் நிலை சீரானது. ஆறு மாதங்கள் இதயத்தில் தோட்டாவை வைத்திருந்த நோயாளியின் நிலை இப்போது சீராக உள்ளது என்பதை நான் புரிந்துகொண்டேன்," என்று கூறுகிறார் அந்த வெற்றி நாயகன்.