புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (14:44 IST)

கொரோனா பரவலுக்குக் நோய் எதிர்ப்பு சக்தி குறைவுதான் காரணம்: ராதாகிருஷ்ணன்!

எதிர்ப்புச் சக்தி இல்லாததால் தான் கொரோனா வேகமாகப் பரவுகிறது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கண்டு மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் மக்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாததால்தான் கொரோனா வேகமாகப் பரவுகிறது என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் ஏற்படும் என்ற பயத்தை மக்கள் கைவிடவேண்டும். நோய் வராமல் தடுப்பு சிறந்தது. ஆனால் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டால், அதனை முறையாகக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்றார்.
 
''கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மதிப்போடு நடத்தவேண்டும். அச்சம் கொள்ளத் தேவையில்லை. உலகளவில் தடுப்பு மருந்து கண்டறிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும், ஐசிஎம்ஆர் அனுமதியோடு தடுப்பு மருந்து ஆய்வு நடைபெற்றுவருகிறது. மனநல ஆலோசனைகளை அரசாங்கம் வழங்கிவருகிறது. தற்கொலை போன்ற முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவேண்டும். கொரோனவை எதிர்கொள்ள ஆரோக்கியமான உடல் நலன் மற்றும் மனநலம் அவசியம்,''என்றார்.
 
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, 11 வகையான சிகிச்சைகள் வகுக்கப்பட்டுள்ளது என்கிறார் ராதாகிருஷ்ணன். சர்க்கரை வியாதி உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணைநோய்கள் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கொண்டு என 11 வகையாக வகுத்து சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
 
அதோடு அலோபதி, இந்திய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,யுனானி,இயற்கை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி என எல்லா விதமான சிகிச்சைகளையும் அளிக்கிறோம். சென்னையில் 1,974 குடிசைப் பகுதிகள் கண்டறியப்பட்டுக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரவலை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்திவருகிறோம், என்றார் ராதாகிருஷ்ணன்.