1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (14:16 IST)

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

Kozhipannai Chelladurai

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஏகன், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் வெளியாகியுள்ளது கோழிப்பண்ணை செல்லதுரை.

 

 

நடிகைகள் சத்யா, பிரிகிடா போன்றோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை அமைத்துள்ளார் ரகுந்தன். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

 

இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கம் என்பதாலும்,சமீப காலமாக தனித்துவமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் யோகி பாபு நடித்திருப்பதாலும், மக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது.

 

அந்த எதிர்பார்ப்புகளை கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் பூர்த்திச் செய்ததா? ஊடகங்களில் வெளியான விமர்சனங்களை இங்கு பார்க்கலாம்.

 

படத்தின் கதை என்ன?

தேனி, ஆண்டிப்பட்டியில் இருக்கும் செல்லதுரையின் (ஏகன்) அம்மா தகாத உறவால் செல்லத்துரையையும் அவனது தங்கை சுதாவையும் (சத்யாதேவி) சிறுவயதிலேயே விட்டுவிட்டுத் தனக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேடிச் சென்று விடுகிறார்.

 

இதனால் கோபப்படும் தந்தை செல்லதுரையையும் தங்கையையும் பாட்டி பொறுப்பில் விட்டுட்டு அவரும் தன் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு தனியே சென்று விடுகிறார்.

 

அவர்களைக் கவனித்துக் கொண்ட பாட்டியும் சிறிது நாட்களில் இறந்து போகவே, கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் அவன் தங்கைக்கும் ஆதரவாக இருக்கிறார் அந்த ஊரில் இருக்கும் பெரியசாமி (யோகிபாபு).

 

தன்னுடைய கோழிப்பண்ணையிலேயே செல்லதுரைக்கு வேலையும் போட்டுக் கொடுத்து செல்லதுரையையும் சுதாவையும் படிக்க வைத்து ஆளாக்குகிறார். சின்ன வயதில் அம்மா செய்த காரியத்தால் ஊரில் பல சந்தர்ப்ப சூழ்நிலையால் அவமானப்படுத்தப்படுகிறார் செல்லதுரை.

 

இன்னொரு பக்கம் கல்லூரிக்குச் சென்று படிக்கும் தங்கைக்கு காதல் வருகிறது. அம்மாவைப் போல தங்கையும் தனக்கு அவமானத்தைத் தேடி தரப்போகிறாளா எனக் கோபப்படுகிறான் செல்லதுரை. இதன் பிறகு, சுதா என்ன முடிவெடுக்கிறார்?

 

இதை ஒட்டி நடக்கும் சம்பவங்கள் என்னென்ன என்பதுதான் ’கோழிப்பண்ணை செல்லத்துரை’.

 

நடிப்பும் இயக்கமும்

 

"நாயகன் ஏகன் தன்னால் முடிந்த அளவிலான நடிப்பைக் கொடுத்திருந்தாலும் கதைக்குப் போதுமானதாக இல்லாதது திரையில் தெரிவதாக தினமணி விமர்சித்துள்ளது.

 

ஆனால் சில காட்சிகளில் அவரது மெனக்கெடுதல்களை பார்க்கும்போது போகப் போகத் தேறிட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவதாகவும் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

"தங்கையாக நடித்த சத்யா தேவி கச்சிதமான நடிப்பை வழங்கி கவர்கிறார். நாயகியாக நடித்த பிரிகிடா இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். நகைச்சுவை நடிகர் என்பதைத் தாண்டி யோகி பாபு நல்ல கதாப்பாத்திரத்தை ஏற்று அதில் அழகாகப் பொருந்தியும் இருக்கிறார்" என்று தினமணி குறிப்பிட்டுள்ளது.

 

இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில், "யோகிபாபு படங்களில் வழக்கமாக வரும் உருவகேலிகள் இல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ற நகைச்சுவைகளை முயன்றிருப்பது ஆறுதல் தருவதாக" குறிப்பிட்டுள்ளது.

 

அதேவேளையில், யோகி பாபு முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்திருப்பதாகவும் பாராட்டியுள்ளது.

 

சீனு ராமசாயின் 'டச்' இருந்ததா?

 

இயக்குநர் சீனு ராமசாமியின் மற்ற படங்களில் கிடைத்த உணர்வு இந்தப் படத்தில் கிடைக்கவில்லை என்று தினமணி குறிப்பிட்டுள்ளது.

 

அதேவேளையில், "முதற்பாதி முதல் இரண்டாம் பாதியில் பாதிவரை படம் சோர்வாகவே நகர்கிறது. எதார்த்தமான கதாப்பாத்திரங்களையும், காட்சிகளையும் கொடுத்து நம்மைக் கவர்ந்த சீனு ராமசாமியின் 'டச்' இந்தப் படத்தில் இல்லை," என்றும் கூறியுள்ளது.

 

சீனு ராமசாமியின் இயக்கம் எதார்த்தத்தைப் பேச முயன்றாலும், படம் மிகவும் தீவிரமான கதையை நோக்கியே நகர்வதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

 

அதோடு, "செல்லதுரையின் பெற்றோர்கள் பிரிந்து செல்வதற்காக வழங்கப்படும் காரணம் கதைக்கு ஒத்திசைவாக இருக்கிறதே இன்றி நம்பத் தகுந்ததாக இல்லை," என்று விமர்சித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

 

படத்தில் இடம் பெறும் ஆவேசமான காட்சிகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, கதையை விரைந்து சொல்வதற்காக அந்த உத்தியைப் பயன்படுத்தியிருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.

 

திரைக்கதையும் தொழில் நுட்பமும்

 

முக்கால்வாசி கதாப்பாத்திரங்கள் எதார்த்த நடிப்பைக் கொடுக்கத் தவறியதும், காட்சிகளை இயல்பாக உருவாக்க இயக்குநர் தவறியதும் படத்தின் தொய்வுக்கு முக்கியக் காரணம் என்று தினமணி தெரிவித்துள்ளது.

 

"ரகுந்தனுடைய இசை கதைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. அசோக்ராஜுடைய ஒளிப்பதிவு தேனியின் அழகைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது," என்று இந்து தமிழ் திசை பாராட்டியுள்ளது.

 

ஆனால், இசை முதல் பாதியில் தொந்தரவு செய்திருப்பதாகவும், இரண்டாம் பாதியில் உள்ள கடைசி இரண்டு பாடல்கள் ஆறுதல் அளிக்கின்றன என்று தினமணி விமர்சித்துள்ளது.

 

இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில், "செல்லதுரை கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு உணர்வுபூர்வமான தொடர்பு வரும்படியான காட்சிகள் எதுவும் பெரிதாக இல்லை. அதேபோல், அண்ணன் தங்கை இடையிலான அன்பை அழுத்தமாக உணர்த்தும்படியான விஷயங்களும் படத்தில் இல்லாதது ஒரு மைனஸ்," என்று விமர்சித்துள்ளது.

 

ஹீரோ கதாப்பாத்திரத்துடன் ஒன்றுவதற்குத் தேவையான காட்சிகள் திரைக்கதையில் இடம் பெறாத காரணத்தால் செல்லத்துரை பார்வையாளர்களை நெருங்கவும் கவரவும் தவறுவதாக தினமணி குறிப்பிட்டுள்ளது.

 

"அன்பும் பொறுமையும் தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை கொடுக்கிறது என சொல்கிறார்கள். ஆனால், கோழிப்பண்ணை செல்லதுரை ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்திருக்கிறார்," என்று விமர்சித்துள்ளது இந்து தமிழ் திசை.

 

தினமணியும், "கோழிப்பண்ணையில் வேலை செய்யும் செல்லதுரை மிகவும் நல்லவனாகக் காட்டப்பட்டாலும், நல்ல திரைக்கதையும் காட்சிகளும் இருந்திருந்தால் நல்ல படமாகவும் மாறியிருப்பான்," என்று தனது விமர்சனத்தின் முடிவில் குறிப்பிட்டுள்ளது.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு