வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (15:12 IST)

கமல் முரசொலி மேடையேறியதுதான் தற்காப்பு; ரஜினி கீழே அமர்ந்தது தன்மானம்

தி.மு.கவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலி இதழின் பவளவிழாவில் தற்காப்பு அல்ல, தன்மானமே முக்கியம் என கமல்ஹாசன் பேசிய குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன.


 

 
முரசொலி நாளிதழின் பவளவிழா வியாழக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தில் வெளியாகும் நாளிதழ்களின் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இவர்கள் தவிர, நடிகர் கமல் ஹாசனும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.
 
விழாவில் அனைவரும் பேசி முடித்த பிறகு இறுதியாக பேச அழைக்கப்பட்ட கமல், "விழா அழைப்பிதழை என்னிடம் கொடுத்தபோது, விழாவுக்கு ரஜினியும் வருகிறாரா என்று கேட்டேன். அவர் பார்வையாளராக அமர்கிறார் என்று சொன்னார்கள். ரஜினி வந்தால் அவர் கையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிடலாம்; வம்பில் மாட்டிக்கொள்ளமாட்டோம் என்று நினைத்தேன். அதற்குப் பிறகுதான், எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய், இந்த விழா எப்படிப்பட்ட விழா என்பதை முதலில் புரிந்துகொள் என்று தோன்றியது. தற்காப்பு முக்கியமல்ல; தன்மானம்தான் முக்கியம்" என்று குறிப்பிட்டார்.
 
மேலும் பேசிய கமல், இந்த விழாவுக்கு வருவதால் தான் தி.மு.கவில் சேரப் போகிறேனா என்று பலரும் கேட்பதாகவும், சேர்வதாக இருந்தால் 1983ல் கருணாநிதி தனக்கு தந்தி மூலம் கட்சியில் சேர்கிறாயா என்று கேட்டபோதே சேர்ந்திருப்பேன் என்றும் தெரிவித்தார்.
 
ஆனால், அந்தத் தந்திக்கு இதுவரை தான் பதிலளிக்கவில்லையென்றும், அவரும் அதற்குப் பிறகு அதைப் பற்றிக் கேட்கவில்லையென்றும் கமல் கூறினார்.
 
ஆனந்த விகடன் இதழை பூணூல் பத்திரிகை என முரசொலி கிண்டல் செய்திருப்பதாக அந்த இதழின் ஆசிரியர் பா. சீனிவாசன் பேசியதைச் சுட்டிக்காட்டிய கமல், அவரே விழாவுக்கு வந்திருக்கும்போது பூணூலே இல்லாத தான் விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம் என்று கேள்வியெழுப்பினார்.
 
"இதோடு முடிந்தது திராவிடம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஜன கன மன பாட்டில் திராவிடம் என்ற சொல் இருக்கும்வரை இது இருக்கும். திராவிடம் என்பது இங்கே தமிழகம், தென்னகத்தோடு முடிந்துவிட்டது என்று நினைப்பவர்களுக்கு கொஞ்சம் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றியும், மானுடவியல் பற்றியும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நாடு தழுவியது இந்த திராவிடம்" என்று குறிப்பிட்டார் கமல்ஹாசன்.


 

 
இந்த விழாவில் பார்வையாளராக ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
 
தற்காப்பு அல்ல; தன்மானம் என கமல்ஹாசன் குறிப்பிட்டது ரஜினிகாந்தை சுட்டிக்காட்டித்தான் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
 
கமல் முரசொலி மேடையேறியதுதான் தற்காப்பு; ரஜினி கீழே அமர்ந்தது தன்மானம் என்று ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர். வேறு சிலர், இருவரும் நீண்ட கால நண்பர்கள், அதனை பிரிக்க வேண்டாம் எனக் கூறுகின்றனர்.
 
இதற்கிடையில், வியாழக்கிழமையன்று இரவில் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் தெரிவித்துள்ள கருத்துகள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
 
"விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே, ஓடி எனைப்பின்தள்ளாதே, களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்" என்றும், "பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு. தேசியமும் தான்" என்று கமல் கூறியுள்ள கருத்துகளுக்கு பலரும் சமூக வலைதளங்களில் விளக்கங்களை எழுதிவருகின்றனர்.