1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (13:35 IST)

கடைசி நிமிடத்தில் ஆடையை மாற்றச் சொன்னார்கள் - மேரி கோம் புகார்!!

ஆறு முறை உலகச் சாம்பியனான இந்தியாவின் மேரி கோம் ஒலிம்பிக் போட்டிகளில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்று வெளியேறியிருப்பது விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
 
கடைசி நேரத்தில் ஆடையை மாற்றச் சொன்னது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருப்பதும், நடுவர்களின் கணிப்பு சரியாக இல்லை என்று அவர் கூறியிருப்பதும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கின்றன.
 
ஒலிம்பிக் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் மொத்தமுள்ள மூன்று சுற்றுகளில் இரண்டு சுற்றுகளை மேரி கோம் வென்றார். இருப்பினும் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் அவருடன் மோதிய கொலம்பியாவின் வேலன்சியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
இது குறித்து போட்டிக்குப் பிறகு அதிர்ச்சியை வெளியிட்ட மேரிகோம் தாமே வெற்றி பெற்றதாக நினைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் ட்விட்டரை பார்த்த பிறகுதான் தாம் தோல்வியடைந்திருப்பதே தெரிய வந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
முதல் சுற்றின்போது 5 நடுவர்களில் நான்கு நடுவர்கள் வேலன்சியாவுக்கு அதிக புள்ளிகள் கொடுத்தனர். அடுத்த இரண்டு சுற்றுகளில் மூன்று நடுவர்கள் மேரிகோமுக்கு அதிக புள்ளிகளை வழங்கினர். ஆனால் கூட்டுத் தொகையில் மூன்று நடுவர்கள் வழங்கிய புள்ளிகள் வேலன்சியாவுக்கே அதிகமாக இருந்தன.
 
அந்த அடிப்படையில் வேலன்சியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. "இது மோசமான மதிப்பீடு" என்று மேரிகோம் கூறியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "எங்களுக்கு நீங்கள்தான் வெற்றியாளர், நடுவர்களுக்கு வேறு கணக்கீடு இருந்திருக்கிறது" என்று கூறியுள்ளார். 
 
மற்றொரு முக்கியமான நிகழ்வையும் மேரி கோம் இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார். வேலன்சியாவுடனான சண்டை தொடங்குவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்னதாக அணிந்திருந்த ஆடையை மாற்ற வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியதாக மேரி கோம் கூறியிருக்கிறார்.
 
"அது அதிர்ச்சியாக இருந்தது. இது ஏன் என்று யாராவது எனக்கு விளக்குகிறீர்களா" என்று கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் மேரி கோம் பதிவிட்டுள்ளார். பிரதமர், அமைச்சர் அனுராக் தாக்குர், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரை இந்தப் பதிவில் அவர் இணைத்திருக்கிறார்.
 
மேரி கோமின் வழக்கமான மேலாடையில் "மேரி கோம்" என எழுதப்பட்டிருக்கும். ஆனால் முதல் பெயர் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியதாக மேரி கோம் கூறுகிறார். புதிதாக ஏற்பாட்டாளர்கள் வழங்கிய ஆடையில் எதுவும் எழுதப்படவில்லை.