ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு - மீண்டும் சர்ச்சையில் சிக்கியது ஏன்?
அமெரிக்கா ஓக்லாஹோமா மாகாணம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. மருந்துகளுக்கு அடிமையாகும் வண்ணம் வலி நிவாரணி மருந்துகளை தயாரித்தது உட்பட அந்த நிறுவனத்திற்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால், அந்த நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. சில நாட்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான முகப்பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது குறைந்தது 1971 முதலே தெரியும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பின் அதன் பங்கு மதிப்புகள் 10% அளவுக்கு சரிந்தன.
புற்றுநோய் உண்டானதாக அந்நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராய்ட்டர்ஸ் செய்தி ஒருதலைப்பட்சமானது என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கூறியது.