ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (15:45 IST)

'இது ஓர் அவசரநிலை' - காங்கிரஸுக்கு கமல் ஆதவளிப்பதன் காரணம் என்ன?

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆதரவு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.எஸ்.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

சென்னையின் தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் இந்த முடிவைத் தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்பாக அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டது. 

அதில் "ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் மறுமலர்ச்சி தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஃபார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளின் சார்பாக போட்டியிடும் எனது நண்பரும் பெரியாரின் பேரனுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரிப்பது எனும் முடிவை மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஆமோதித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது வெற்றிக்காக நானும் எனது கட்சியினரும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.” என்று கூறப்பட்டிருந்தது.

“நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றிபெறச் செய்து மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு முடிவெடுக்கும் தேர்தல் நாளில் ஈரோடு கிழக்குத் தொகுதியில்  18 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் தங்கள் வாக்குகளை பதிவுசெய்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் பங்குபெற வேண்டும். தமிழ்நாடு சமத்துவத்தின், சகோதரத்துவத்தின், சமூக நீதியின் மண் என்பதை மீண்டும் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலிக்கச் செய்வோம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "இந்த நிலை என்பது ஒரு அவசர நிலை. இது தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதாக அமையவேண்டும் என்பதற்காக எடுத்த முடிவு. இது இப்போதைய முடிவு. இன்னும் ஒரு வருடம் கழித்து எடுக்க வேண்டிய முடிவை அவசரப்படுத்தி, இப்போது பதிலைப் பெற முடியாது" என்று தெரிவித்தார்.

பிரசாரத்திற்குச் செல்வீர்களா எனக் கேட்டபோது, "எல்லா உதவிகளையும் செய்வோம் எனச் சொல்லும்போது அதுவும் உட்பட்டுவிடுகிறது. அதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. நான் போகாமல் அதை அவுட் - சோர்ஸ் செய்ய முடியாது" என்றார்.

மேலும், "தேசிய முக்கியத்துவம் என்று வரும்போது, கட்சி வித்தியாசங்களைத் தாண்டிச் செயல்பட வேண்டியிருக்கிறது. நாங்கள் ஒற்றைக் கலாச்சாரத்திற்கு எதிராக இருக்கிறோம். இந்தியாவின் பன்முகத்தன்மையே அதனைத் தனித்துவமிக்கதாக்குகிறது. இது மிகப் பெரிய லட்சியத்திற்காக நடக்கும் யுத்தம். அதில் சிறிய வித்தியாசங்களைத் தியாகம் செய்ய நான் தயார். அந்த யுத்தத்திற்கு நாங்கள் மீண்டும் வருவோம். ஊழலுக்கு எதிராக இனி குரல்கொடுக்க மாட்டேன் என அர்த்தமல்ல. ஏதாவது நடந்தால் பேசாமல் இருப்பேன் என அர்த்தமல்ல. நான் ஒரு யுத்தத்தில் பங்கேற்பவன். தமிழ்நாட்டிற்கும் தேசத்திற்கும் முக்கியமான ஒரு கட்டத்தை நோக்கி நகர்கிறோம்" என்றார்.

இந்தக் கூட்டணி தொடருமா எனக் கேட்டபோது, காலமும் அரசியலும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த நேரத்தில் அனைவரும் சகோதரர்கள்தான். நாளை தேசத்திற்கென வரும்போது அந்தக் கோட்டையும் அழிக்க வேண்டும். பிடிக்காத கட்சியாக இருந்தாலும், தேசத்திற்காக ஒரே மேடையில் அமர வேண்டும் என்பதுதான் எனது அரசியல் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டுமென்பதுதான் உங்கள் ஆசையா என்று கேட்டபோது, "மக்களுக்குப் பணி செய்ய வேண்டுமென்பதுதான் எனது ஆசை" என்றார் கமல்.

இந்த இடைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியின் பொறுப்பாளராக ஆ. அருணாச்சலத்தை அக்கட்சி நியமித்துள்ளது.