திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (23:29 IST)

இலங்கை உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா?

sri lanka
அறிவிக்கப்பட்ட ஒரு தேர்தலை நடத்துவதில் - இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைப் போன்று, வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் ஏற்பட்டதில்லை. மார்ச் 09இல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை, அந்தத் தேதியில் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு கடந்த 24ஆம் தேதி கூறிவிட்டது. தேர்தலுக்கான புதிய நாள் தொடர்பில் மார்ச் 03ஆம் தேதி (நாளை வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, 'தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது' போன்ற ஒரு பார்வை பலரிடமும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சட்டப்படி தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்பதில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் ஒரு பக்கமாகவும், தேர்தலை நடத்துவதில்லை என்கிற முடிவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுபக்கமாகவும் 'கயிறு' இழுத்துக் கொண்டிருக்கின்றனர்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான ஆளும் பொதுஜன பெரமுன கட்சியினரும் கூட - தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் பொது வெளியில் கூறுகின்றனர். ஆனால், இப்போது தேர்தலொன்றை நடத்தினால், ஆளும் பொதுஜன பெரமுன கட்சி - பலத்த 'அடி' வாங்கிவிடும் என்றும், அதிலிருந்து அந்தக் கட்சியைக் காப்பாற்றுவதற்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலைத் தடுக்கின்றார் எனவும் எதிரணியினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
 
தேர்தலொன்றை நடத்துவதற்கு தற்போது - நாட்டில் நிதி இல்லை என்பதுதான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறும் பிரதான காரணமாக உள்ளது.
 
இதனால், தேர்தலை நடத்துவதற்குப் போதுமான நிதி - தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுவிக்கப்படவில்லை. ஆகவேதான் அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க, மார்ச் 09இல் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.
 
ஆனால், இந்த நிலைமையானது 'தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு விட்டது' என அர்த்தப்படாது என்கிறார் சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட்.
 
குறித்த தேதியில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருப்பது, சட்டத்தோடு தொடர்பில்லாத சாதாரண அறிவிப்பு என்றும், அந்த அறிவிப்புக்கு - எந்தவித சட்ட அந்தஸ்தும் கிடையாது எனவும் ஹமீட் குறிப்பிடுகின்றார்.
 
" உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஒத்திவைப்பு என்று ஒன்று கிடையாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் - ஏதேனும் அவசர சூழ்நிலை அல்லது விசேட சூழ்நிலையின் காரணமாக தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்படும் போது, தேர்தலுக்கான தேதியை மாற்றலாமே தவிர, தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது" என அவர் விளக்கமளிக்கின்றார்.
 
அதேவேளை தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு எந்தத் தினத்தில் வெளியிடப்பட்டதோ, அந்தத் தினத்திலிருந்து 21ஆம் நாளுக்கு முந்தையை தினமொன்றை, புதிய தேர்தல் தேதியாக அறிவிக்க முடியாது எனவும் ஹமீட் கூறுகின்றார்.
 
"அதாவது தேர்தலுக்கான தேதியொன்று அறிவிக்கப்பட்ட பின்னர், அத்தினத்துக்கு முன்னராகவோ அல்லது பின்னரோ வேறொரு நாளில் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடு உள்ளன" என அவர் சுட்டிக்காட்டினார்.
 
தேர்தலை ஒத்திவைப்பதற்கான முறைகள்
உள்ளூராட்சி தேர்தலொன்று நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்ட பின்னர், அந்தத் தேர்தலை மூன்று முறைமைகளின் ஊடாக ஒத்தி வைக்கலாம் அல்லது மற்றொரு தேதியில் நடத்துவதற்கான அறிவிப்பை விடுக்கலாம் என சட்ட முதுமாணி ஹமீட் குறிப்பிடுகின்றார்.
 
"தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றினை, அவசரகால நிலைமையின் ஊடாக ஜனாதிபதி ஒத்திவைக்க முடியும். அவ்வாறு ஒத்திவைக்கப்படும் தேர்தலுக்கான புதிய தேதியை அறிவிக்கவும் முடியும், அறிவிக்காமலும் ஒத்திவைக்க முடியும்”.
 
"தேர்தலை நடத்த முடியாத வகையில் எதிர்பாராத அல்லது விசேட சூழ்நிலையொன்று ஏற்பட்டு, அதனை எதிர்கொள்வதற்கான சட்டம் இல்லாதவிடத்து அல்லது சட்டத்தில் போதுமான ஏற்பாடுகள் இல்லை எனும் நிலையில் தேர்தலை ஒத்திவைக்கலாம். எவ்வாறென்றால், பொறுப்பான அமைச்சர் - உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் 84ஆவது பிரிவின் கீழ் உத்தரவொன்றினை வர்த்தமானியின் ஊடாக அறிவிப்பதன் மூலம், குறித்த தேர்தலை தேதி குறிப்பிட்டு, அல்லது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்க முடியும்" என வை.எல்.எஸ். ஹமீட் விவரித்தார்.
 
உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரிவு 38(3)இன் கீழும், உள்ளூராட்சித் தேர்தலொன்றை ஒத்தி வைக்க முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
 
”38(3)இன் கீழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேர்தலொன்றை வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஒத்தி வைக்க முடியும். அவ்வாறு ஒத்தி வைக்கும் போது, புதிய தேதியினையும் அறிவிக்க வேண்டும். இதன்போது முன்னர் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னர் அல்லது பின்னர் ஒரு நாளைக் குறிப்பிட்டு, புதிய தேர்தலை அறிவிக்கலாம்” எனவும் அவர் கூறினார்.
 
உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரிவு 38(3)இன் கீழ், தேர்தல் ஒன்றை வேறோரு தேதிக்கு ஒத்திவைத்த பிறகு, இன்னொரு தடவை ஒத்திவைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
மார்ச் 09ஆம் தேதி நடத்துவதற்கு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்குரிய - தபால் மூல வாக்களிப்பு, கடந்த பிப்ரவரி 22,23,24 மற்றும் 28ஆம் தேதிகளில் நடத்தப்படவிருந்தது. ஆனால், அந்த வாக்களிப்பும் ஒத்திவைக்கப்பட்டது.
 
கலைக்கப்படாத உள்ளூராட்சி சபைகள்
இலங்கையில் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றன.
 
உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் 04 வருடங்களாகும். அதன்படி தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சபைகள் 2022ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு இணங்க, குறித்த சபைகளின் பதவிக் காலங்கள் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டன.
 
இந்த நிலையிலேயே, மேற்படி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பினை - தேர்தல் ஆணைக்குழு விடுத்ததோடு, தேர்தலுக்கான தினத்தையும் அறிவித்தது.
 
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும், இந்த சபைகள் எவையும் இதுவரை கலைக்கப்படவில்லை.
 
உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களாக பதவி வகித்துக் கொண்டே, ஏராளமானோர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலானது - பல்வேறு வகையிலும் புரியாத புதிராகவே மக்களுக்கு உள்ளது.