புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (14:53 IST)

இரான் அமைதிக்காக முதல் முறையாக வெள்ளிக்கிழமை தொழுகை!

எட்டு வருடங்களில் முதன்முறையாக இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்தவுள்ளார்.
 
கடந்த வாரம் இரானில் உக்ரைன் பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அந்நாட்டு மக்கள் பெருங்கோபத்துடன் இருப்பதால் இந்த தொழுகை நடத்தப்படுகிறது.
 
அமெரிக்கா விதித்த தடைகளால் இரான் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இரான் தலைவர்கள் மீதும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
புதன்கிழமையன்று, நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என ஆயதுல்லா அலி காமேனி தெரிவித்திருந்தார்.
 
விமானம் சுடப்பட்டது குறித்து இரான் ராணுவத்திடம் விளக்கம் கேட்டிருந்தார் ஆயதுல்லா அலி காமேனி. இதன்மூலம் மிக அரிதாக இரான் அரசுடன் அவருக்கு உரசல் ஏற்படும் போக்கு காணப்படுவதாக கூறப்பட்டது.
 
விமான விபத்துக்குள்ளான மூன்று நாட்கள்வரை இரான் அதிகாரிகள் தங்களுக்கு அதில் தொடர்பில்லை என்று கூறிவந்தனர். ஆனால், சர்வதேச அழுத்தத்தால் இரானின் கடும்போக்கு புரட்சிப்படை, அது "போர் ஏவுகணை" என்று தவறுதலாக எண்ணி அதை சுட்டு வீழ்த்திவிட்டோம் என ஒப்புக் கொண்டது.
 
உக்ரைன் நாட்டை சேர்ந்த சர்வதேச விமான சேவையின் போயிங் 737 - 800 விமானம் ஜனவரி 8ஆம் தேதி இரானில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமான ஊழியர்கள் உள்பட இதில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர். உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம், அங்கிருந்து கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு செல்ல இருந்தது.
 
இராக்கில் உள்ள அமெரிக்க படைகளை இலக்கு வைத்து இரான் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளான செய்தி வெளியானது.
 
அந்த தாக்குதல் அமெரிக்க இரானின் அதிகாரமிக்க படைத்தளபதி காசெம் சுலமானீயை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்டது.
 
என்ன நடக்கிறது இரானில்?
இரானின் செய்தி முகமையான மெர்ரில், டெஹ்ரானில் உள்ள மொசல்லா மசூதியில் 80 வயதான ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்துவார் என்று கூறப்படுகிறது.
 
இருப்பினும் தற்போதைய சூழலுக்கும் இந்த தொழுகைக்கும் தொடர்பு இருப்பதாக அதில் குறிப்பிடவில்லை. இரான் அதிகாரிகள், இரான் தனது ஒற்றுமையையும் சிறப்பையும் மீண்டும் வெளிப்படுத்தும் நேரமிது என தெரிவித்துள்ளதாக செய்தி முகமை தெரிவிக்கிறது.
 
இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் 33ஆவது ஆண்டுவிழாவின் போது, டெஹ்ரானில் ஆயதுல்லா அலி காமேனி வெள்ளிக்கிழமை தொழுகையை தலைமையேற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.