1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஜனவரி 2020 (19:01 IST)

இரானால் சுடப்பட்ட உக்ரைன் விமானம்; தொடங்கியது கைது நடவடிக்கை

உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை, ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியது தொடர்பாக பலரை கைது செய்துள்ளதாக இரான் நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது நடந்துவரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதித் துறை செய்தித் தொடர்பாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். எனினும் அவர் மேற்கொண்டு எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் நடக்கும் என்று இரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

இந்த சோகமான சம்பவத்துக்கு ஏவுகணையை ஏவுவதற்கான பொத்தானை அழுத்திய ஒரு நபர் மீது மட்டும் குற்றம் சாட்டக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

"தங்கள் தவறை இரான் படைகள் ஒப்புக்கொண்டுள்ளது ஒரு நல்ல முதற்படி. இது போன்ற தவறுகள் மேற்கொண்டு நடக்காது," என்று ருஹானி உறுதியளித்துள்ளார்.

விமான விபத்தின் பின்னணி

ஜனவரி 8ஆம் தேதி, இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி பறக்க தொடங்கிய பயணிகள் விமானம் ஒன்று சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் அதில் பயணித்த 176 பேருமே உயிரிழந்தனர்.

தங்கள் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், இந்த விமானம் விழுந்து நொறுங்கியது.


தாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா , கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கூறின.

மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தது இரான்; இந்நிலையில் விமானத்தை 'தவறுதலாக' சுட்டு வீழ்த்திவிட்டதாக இரான் ராணுவம் கடந்த சனிக்கிழமை ஒப்புக்கொண்டது.