1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (14:20 IST)

சுடப்பட்ட உக்ரைன் விமானம், இதுதான் காரணம் என்கிறது இரான்!

கடந்த ஜனவரி மாதம் இரானில் உக்ரைன் பயணிகள் விமானம் ஒன்று சுடப்பட்டதில் அதில் பயணித்த 176 பேர் பலியானார்கள். 
 
இது குறித்து விசாரித்து வரும் இரான் விமான போக்குவரத்து அமைப்பு, இந்த விபத்திற்கு மனித தவறும், மோசமான ராணுவ தகவல் பரிமாற்றமே காரணம் என்று கூறி உள்ளது.
 
ஜனவரி மாதம் 8ஆம் தேதி உக்ரைன் விமானம் ஒன்று ஏவுகணையால் தாக்கப்பட்டது. முதலில் இதனை இரான் மறுத்தது. அந்த சமயத்தில் இரானின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தலைவர், நிச்சயமாக அந்த விமானம் ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
 
இராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது இரான் தாக்குதல் நடத்திய சிறிது நேரத்தில் 176 பயணிகளுடன் சென்ற உக்ரைனை சேர்ந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
 
இது குறித்து விசாரித்து வரும் விமான போக்குவரத்து அமைப்பு, ராணுவ தொலைத்தொடர்பில் ஏற்பட்ட தவறே இந்த விபத்துக்கு காரணம் என்பதை ஒப்பு கொண்டுள்ளது. இந்த விமானத்தின் `கருப்புப் பெட்டி' தரவுகளை வெளியிடுவதை தாமதப்படுத்தி வரும் இரான், ஜூலை 20ஆம் தேதி அதனை ஆய்வுக்காக பிரான்ஸ் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.