அணுசக்தி ஒப்பந்தத்தை மீறிய இரான்: ஐரோப்பிய நாடுகள் கடும் எச்சரிக்கை!

Last Modified திங்கள், 1 ஜூலை 2019 (17:37 IST)
இரான் உலக நாடுகளுடன் செய்துகொண்ட 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரான், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 500 கிலோவுக்கு மேல் வைத்திருக்கக்கூடாது எனும் விதியை தற்போது மீறியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடந்த மே மாதம், செறிவூட்டப்பட்ட யுரேனிய உற்பத்தியை மும்மடங்கு அதிகரித்துள்ளது. இச்செறிவூட்டப்பட்ட யூரேனியம் தான் அணு உலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் அணு ஆயுத தயாரிப்பிலும் பயன்படுகிறது.
 
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்பந்தத்தை கைவிட்டு மீண்டும் பொருளாதார தடைகளை விதித்துள்ள சூழலில் அதற்கு பதிலடியாக இரான் இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அணுசக்தி ஒப்பந்தத்தில் இரான் எந்த வகையிலாவது மீறினால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன.
 
இரானின் கிடங்குகளில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் சோதனை நடத்தியுள்ளதாக பார்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை குறித்த அறிக்கையை தங்களது உறுப்பினர்கள் விரைவில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
சர்வதேச ஒப்பந்தத்தை இரான் மீறியது உறுதிசெய்யப்படும் பட்சத்தில், அந்நாடு மீதான பலதரப்பட்ட தடைகளை உலக நாடுகள் மீண்டும் விதிக்கக் கூடும்.
 
தனது இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியது மட்டுமின்றி, சமீபத்தில் நடந்த எண்ணெய் டேங்கர்கள் மீதான தாக்குதலுக்கும் இரானே காரணம் என்று அமெரிக்க தெரிவித்து வரும் பரபரப்பான சூழலில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :