வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (10:49 IST)

"இரான் வசம் அனுமதி அளவைவிட பல மடங்கு செறிவூட்டிய யூரேனியம்"

சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிக செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை இரான் வைத்துள்ளது என ஐநாவின் சர்வதேச அணு சக்தி முகமை தெரிவிக்கிறது.

இரான் வசம் தற்போது 2,105 கிலோ செறிவூட்டப்பட்ட யூரேனியம் இருக்கிறது என்கிறது அணு சக்தி முகமை.
 
இது ஒப்புக் கொள்ளப்பட்ட அளவான 300 கிலோவைக் காட்டிலும் பெரிய அளவுக்கு அதிகமாகும்.
 
இரனில் உள்ள சந்தேகத்துக்குரிய இரண்டு முன்னாள் அணுக்கருத் தளங்களைப் பார்வையிட சர்வதேச அணுசக்தி முகமையை இரான் அனுமதித்த பிறகு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது முகமை.
 
இரான் தனது அணுக்கரு திட்டங்கள் அனைத்தும் அமைதிக்கானவை என்று தெரிவிக்கிறது.
 
இரண்டாவது தளத்தில் இந்த மாத இறுதியில் சோதனை செய்யப்படும் என அந்த முகமை தெரிவித்துள்ளது.
 
2015ஆம் ஆண்டு இரான், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கையெழுத்திட்ட சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, அணுசக்தி ஒப்பந்தத்தின் எல்லா அம்சங்களும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று இரான் அறிவித்தது.
 
அணு ஆயுதம் ஒன்றை தயாரிக்க இரான் 1,050 கிலோ வரையிலான 3.67% செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை தயாரிக்க வேண்டும்.
 
மேலும் அதை 90% செறிவூட்ட வேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
 
அணு ஆயுத பாதுகாப்பு குறித்து நிலவி வரும் சர்வதேசப் பிரச்சனையை சரி செய்ய “நல்ல எண்ணத்தில்” ஆயுத கண்காணிப்பாளர்கள் அணுக்கருத் தளத்தை  சோதனையிட அனுமதி வழங்கியதாக இரான் தெரிவித்துள்ளது.