1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (00:53 IST)

இலங்கையில் இடைக்கால அரசு - கோட்டாபய இணக்கம் தெரிவித்தாக தகவல்

sri lanka
இலங்கையில் இடைக்கால அரசை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் ஆவண காப்பாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்னைகள் குறித்து, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அண்மையில் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் வழங்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
 
இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன், பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதாகவும் ஜனாதிபதி பதில் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகின்றார். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறும் கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல்களை நடத்தி, அந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக மெதகம தம்மானந்த தேரர் தெரிவிக்கின்றார்.
 
இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில், அது தனது தலைமையிலேயே ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அமைச்சரவையில் அங்கம் வகித்த பலரும் தற்போது அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றி, ஜனாதிபதியினால் வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், ''பதவியிலிருந்து விலகுவதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக.'' தெரிவித்தார்.
 
மேலும், ''ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வழங்குவார்கள்'' எனவும் அவர் கூறுகின்றார்.
 
உதய கம்மன்பில கூறுவதை போன்று, பிரதமருக்கு எதிராக 120 நாடாளுமன்ற உறுப்பினர்களை தயார்ப்படுத்தியிருக்க முடியாது என பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.