வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (15:12 IST)

இலங்கையில் இந்தியாவை நோக்கி பயணித்த கப்பலில் பயங்கர தீ

இலங்கையில் கிழக்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் பாரிய தீ பரவியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கிறது.

MT NEW DIAMOND என்ற கப்பலிலேயே இந்த தீ பரவியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. குறித்த கப்பலில் தீ பரவியுள்ளமை தொடர்பில் தமக்கு இன்று காலை 8.30 அளவில் அறிவிக்கப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிடுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய கடற்படை முகாம்களிலிருந்து இரண்டு கப்பல்கள் தீயணைப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

இலங்கையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவிலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளது. கப்பலிலுள்ள ஊழியர்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பல் இந்தியாவிலுள்ள துறைமுகமொன்றை நோக்கியே பயணித்ததாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், அந்த கப்பல் எங்கிருந்து புறப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

தீயணைப்பு பணிகளுக்காக சென்றுள்ள கடற்படையினர் இதுவரை கப்பலின் தற்போதைய நிலைமை குறித்து அறிவிக்கவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறுகிறார். எனினும், கப்பலில் இயந்திர பகுதியிலேயே தீ பரவியுள்ளமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை, கப்பலில் தீ பரவியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பீச் கிராவ்ட் கண்காணிப்பு விமானமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கிறது.

இந்த விமானத்தில் சென்றுள்ள கண்காணிப்பு குழுவினர் விடயங்களை ஆராய்ந்து தமக்கு அறிவித்த பின்னர், மேலதிக நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் ஆராயப்படும் எனவும் கடற்படை கூறுகின்றது. MT NEW DIAMOND கப்பலில் எரிபொருள் கொண்டு செல்லப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் உறுதி செய்வதாக பாதுகாப்பு பிரிவினர் கூறுகின்றனர்.