செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (16:42 IST)

கடன் செயலி மோசடி: கடன் வாங்கி விட்டு உயிர் பயத்தில் வாழும் இந்தியர்கள்

கடந்த மார்ச் மாதம் ராஜ், ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கியபோது, ​​அது தமது நிதிப் பிரச்னைகளை விரைவில் தீர்க்கும் என்று நினைத்தார். ஆனால் அது அவரது வாழ்க்கையை மிகவும் மோசமாக்கி விட்டது.
 
புனேவைச் சேர்ந்த இவர் இந்தியாவின் பல டிஜிட்டல் கடன் மோசடிகளில் சிக்கியவர். பலரைப் போலவே, ராஜ் (உண்மையான பெயர் அல்ல) விரைவான, எளிதான கடன் வழங்கும் முறையால் கவரப்பட்டார். அவர் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு செயலியை அவரது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து, அடையாள அட்டையின் நகலை வழங்க வேண்டும்.
 
விரைவாகவே அவருக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தது. அது அவர் கோரிய தொகையில் பாதி மட்டுமே. மூன்று நாட்களுக்குப் பிறகு, நிறுவனம் அவருக்குக் கடனாகக் கொடுத்த தொகையை விட மூன்று மடங்கு திருப்பித் தரக் கோரத் தொடங்கியது.
 
முதல் கடனை அடைப்பதற்காக மற்ற கடன் செயலிகளில் இருந்து கடன் வாங்கியதால் அவரது கடன்கள் அதிகரித்தன. இறுதியில், ராஜ் 35 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இது 33 வெவ்வேறு செயலிகள் மூலமாக வாங்கியது.
அந்தச் செயலிகளை இயக்குவோர், திருப்பிச் செலுத்துவது தொடர்பாக அவரை அச்சுறுத்தத் தொடங்கினர், ஆனால் அவர் காவல்துறைக்கு செல்ல மிகவும் பயந்தார்.
 
செயலிகளை இயக்கும் நபர்கள் அவரது தொலைபேசியில் உள்ள அனைத்து தொடர்புகள் மற்றும் அவரது புகைப்படங்களை அணுகுவதற்கான அனுமதியைப் பெற்றனர். அவரது தொலைபேசியில் உள்ள அனைவருக்கும் அவரது மனைவியின் நிர்வாணப் படங்களை அனுப்புவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
 
கடனைச் செலுத்துவதற்காக, அவர் தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் விற்றுவிட்டார். ஆனால் அவர் இன்னும் அச்சமாக இருப்பதாகக் கூறுகிறார்."அவர்கள் என்னை விட்டுவிடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. உயிருக்கு அச்சமாக இருக்கிறது. தினமும் மிரட்டல் அழைப்புகள், குறுஞ்செய்திகள் வருகின்றன" என்று ராஜ் கூறுகிறார்.
 
இந்தியாவில், இந்த வகையான மொபைல் போன் மோசடி மிகவும் பொதுவானதாகி விட்டது. ஜனவரி 1, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நடத்திய ஆய்வில், 600 சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த காலகட்டத்தில், கடன் வழங்கும் செயலிகள் தொடர்பாக அதிகபட்சமாக 572 புகார்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரிசர்வ் வங்கிக்கு வந்திருக்கின்றன..
 
"இந்த செயலிகள், தொந்தரவில்லாமல் விரைவாகக் கடன் தருவதாகக் கூறுகின்றன. இதனால் மக்கள் தங்கள் தொலைபேசிகள் ஹேக் செய்யப்படுவதையும், தரவு திருடப்படுவதையும் உணராமல் மயங்கி விடுகிறார்கள்" என்கிறார் மகாராஷ்டிர காவல்துறையின் சிறப்பு ஐ.ஜி. யஷஸ்வி யாதவ்.
 
"இந்தியாவில் பலர் [சட்டபூர்வமான வங்கி] கடன்களுக்கு தகுதியற்றவர்கள் என்பதால் நடக்கும் ஒரு மோசடி இது என்று நான் கூறுவேன்" என்கிறார் அவர். பெரும்பாலும் கடன் செயலிகள் சீனாவில் இருக்கும் சர்வர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. ஆனால் மோசடி செய்பவர்கள் பொதுவாக இந்தியாவில்தான் இருப்பார்கள் என்கிறார் யஷஸ்வி யாதவ்.
 
அவர்களது வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களைக் கண்காணிப்பதன் மூலம் மோசடி செய்பவர்கள் பலர் பிடிபட்டுள்ளதாக அவர் கூறுகிறார். ஆனால் பிபிசியிடம் பேசிய கடன் செயலியை இயக்கும் ஒருவர், இந்திய அதிகாரிகளை ஏமாற்றுவது ஒப்பீட்டளவில் எளிமையானது என்று கூறினார்.
 
"கடன் செயலிகளின் நிறுவனர்கள், அதில் பணிபுரியும் நபர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில் நாங்கள் மொபைல் எண்ணைப் பெற அனைத்து போலி ஆவணங்களையும் பயன்படுத்துகிறோம்."
 
"நாங்கள் இந்தியா முழுவதிலும் இருந்து செயல்படுகிறோம். எங்களில் பலர் ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வது இல்லை. எங்களுக்குத் தேவை மடிக்கணினி மற்றும் தொலைபேசி இணைப்பு மட்டுமே. என்னைப் போன்ற ஒரு ஆபரேட்டர் வாடிக்கையாளரை அச்சுறுத்துவதற்கு 10 எண்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டும்."
 
"ஏமாறக்கூடிய மற்றும் பணம் தேவைப்படக்கூடிய" நபர்களைக் கண்டறிய தங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக அவர் கூறுகிறார். கேட்பதில் பாதி மட்டுமே கடனாக வழங்கப்படும். பிறகு மூன்று மடங்கு தொகையைத் திருப்பித் தருமாறு கோருவார்கள். பாதிக்கப்பட்டவர் பணம் செலுத்தத் தவறினால், அதிக அழுத்தம் விரைவாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
"முதல் படி துன்புறுத்துவது. பின்னர் அச்சுறுத்துவது. பின்னர் கடன் பெற்றவர்களின் தொலைபேசி விவரங்கள் எங்களிடம் இருப்பதால், அந்த நபரை மிரட்டுவது. அதன் பிறகுதான் உண்மையான ஆட்டம் தொடங்குகிறது" என்று அந்த நபர் கூறினார். "பலர் வெட்கம் மற்றும் பயத்தால் காவல்துறைக்குச் செல்வதில்லை."
 
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்ட செய்திகளை பிபிசி பார்த்தது. இதில் பாதிக்கப்பட்டவரின் கடன்களைப் பற்றி குடும்பத்தினரிடமும் பணிபுரியும் சக ஊழியர்களிடமும் சொல்லும் அச்சுறுத்தல்களும் அடங்கும். ஆனால் சிலர் மிகவும் கொடூரமாகச் செயல்படுகின்றனர். பாதிக்கப்பட்டவரின் படத்தைப் பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை உருவாக்கி பரவ விடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
 
கடன் மோசடி செய்பவர்களை ஒழிக்க அரசு சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம், அதன் பிளே ஸ்டோரில் செயலிகளை மதிப்பாய்வு செய்யுமாறு கூகுளை வலியுறுத்தியது. ஆனால் கூகுளில் இருந்து நீக்கப்படும்போது, மோசடி செய்பவர்கள் வேறு இடத்திற்குச் சென்று, விளம்பரப்படுத்த குறுஞ் செய்திகளைப் பயன்படுத்துகின்றனர்.
 
டிஜிட்டல் கடன் வழங்குவது குறித்த ஆய்வைத் தொடர்ந்து, சட்டவிரோத கடன் வழங்குவதைத் தடுக்க புதிய சட்டத்தை கொண்டு வருமாறு ரிசர்வ் வங்கி அரசை கேட்டுக் கொண்டுள்ளது. வரும் வாரங்களில் அரசு பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிய விதிகள் வருவது சிலரைப் பொறுத்தவரை மிகவும் தாமதமே.
 
சந்தீப் கோர்கோன்கர் என்பவர் கடன் மோசடி செய்பவர்களிடமிருந்து அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே 4 அன்று தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அவர் கடன் வாங்கக்கூட இல்லை. செயலியை பதிவிறக்கம் மட்டுமே செய்தார் என்று அவரது சகோதரர் தத்தாத்ரேயா கூறுகிறார்.
 
சந்தீப்பின் சக ஊழியர்களுக்கு அவரது கடன் பற்றிய விவரத்தை அனுப்பியிருக்கிறார்கள். நிர்வாண புகைப்படங்களை உருவாக்கி சுமார் 50 பேருக்கு அனுப்பியிருக்கிறார்கள். "அவர் காவல்துறையில் புகார் அளித்த பிறகும், துன்புறுத்தல் நிற்கவில்லை," என்கிறார் தத்தாத்ரேயா.
 
"அவரது வாழ்க்கை ஒரு நரகமாக மாறியது. அவரால் தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை" தற்போது இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.