வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (23:41 IST)

பாகிஸ்தானி ஷாலீனை கரம் பிடிக்க ஏழு ஆண்டுகள் வரை காத்திருந்த இந்தியர் நமன்

marriage obstacles
சமீப காலமாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவரும் வரும் சுவையான காதல் கதை தான் இது. இந்திய பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த இருவருக்கு இடையே காதல் மலர்ந்தது குறித்தும், அவர்களது திருமணம் குறித்தும் விவரிக்கிறது இந்த கதை.
 
எல்லைகளோ, மதங்களோ, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் கசப்பான உறவுகளோ இந்த உறவைப் பிரிக்க முடியாது.
 
இந்த காதல் கதை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2015 இல் தொடங்கியது.
 
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நமன் லுத்ரா மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரைச் சேர்ந்த ஷாலீன் ஜாவேத் ஆகியோர் தான் இந்தக் கதையின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள். இருவரின் முதல் சந்திப்பு 2015 இல் நடந்தது. சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மே 2023 இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
 
நமன் ஒரு இந்து, ஷாலீன் ஒரு கிறிஸ்தவர். அதனால்தான் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
 
நமன் மற்றும் ஷாலீன் திருமணத்திற்கு முன்பு பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. பின்னர் ஷாலீன் திருமணத்திற்காக இந்தியாவுக்கு வந்து, திருமண பந்தத்தில் இணைந்தார். பின்னர் தமது மணவாழ்க்கையை இந்தியாவிலேயே வாழ முடிவெடுத்துள்ளார்.
 
தனது தாய் மற்றும் பாட்டியுடன் லாகூர் சென்ற நமன் லுத்ரா, 2015 ஆம் ஆண்டு ஷாலீனை சந்தித்தார். நமனின் தாத்தா, பஞ்சாபின் படாலா நகரில் வசித்தவர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாகூர் நகரத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்.
 
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் அவரது தாத்தா இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். அதனால்தான் நமன், பாகிஸ்தானையோ, அங்கு வாழும் மக்களையோ அந்நிய நாடாகக் கருதுவதில்லை.
 
ஷாலீனுடனான தனது முதல் சந்திப்பைப் பற்றி கூறிய நமன், "எனது தாய்வழி தாத்தாவும், பாட்டியும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிரிவினைக்குப் பிறகும் இந்தியாவுக்கு வரவில்லை. தொடக்கத்தில் அவர்களுடன் வாழ்ந்த எனது குடும்பம் 1947க்கு பிறகு இங்கே வந்தது," என்கிறார்.
 
நமனின் கூற்றுப்படி, 2015 ஆம் ஆண்டில் அவர் தனது தாய் மற்றும் பாட்டியுடன் அவர்களது உறவினர்களை சந்திக்க லாகூர் சென்றார், அங்கு அவர் ஷாலீனை சந்தித்தார்.
 
ஷாலீன் அவருடைய தூரத்து உறவினர். இந்த சந்திப்புக்குப் பிறகு, நமன் இந்தியாவுக்குத் திரும்பினார். ஆனால் அவர் ஷாலீனுடன் ஆன்லைனில் தொடர்பில் இருந்தார். இணையத்தில் தொடர்ந்த இருவரது நட்பும், பின்னர் விரைவில் காதலாக மாறியது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு குடும்பத்தினர் சமமதத்துடன் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நிச்சயதார்த்த விழா பாகிஸ்தானில் நடந்தது.
 
நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, 2018 இல் தனது தாய் மற்றும் அத்தையுடன் இந்தியா வந்ததாகவும், அங்கு நமனின் குடும்பத்தை சந்தித்ததாகவும் ஷாலீன் கூறுகிறார்.
 
2018-ம் ஆண்டு நடந்த குடும்ப பேச்சுவார்த்தையில் இருவீட்டாரும் இந்த திருமண உறவுக்கு சம்மதித்தனர். சிறிது காலத்தில் திருமண நிகழ்ச்சியை நடத்தவும் இரு வீட்டாரும் முடிவெடுத்தனர். இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கசப்பான உறவின் காரணமாக எல்லையை கடந்து இருவரும் ஒன்றாக வாழ்வது எளிதான விஷயமாக தெரியவில்லை.
 
ஆனால் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கொரோனா தொற்றுநோய் உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. தொற்றுநோய் பரவுவதற்கான ஆபத்துக்களை தவிர்க்கும் வகையில் பல நாடுகள் தங்கள் எல்லைகளை முற்றிலுமாக மூடிவிட்டன. சர்வதேச பயணத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன.
 
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இதே போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிற நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இந்தியா தடை விதித்தது.
 
ஏற்கெனவே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவிய மோசமான உறவுகளால் இந் நாடுகளுக்கு இடையே பயணம் செய்வது கடினமாக இருந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இது போன்ற பயணம் செய்யும் நிலை மேலும் மோசமடைந்தது.
 
டிசம்பர் 2021 இல், கொரோனா தொற்றுநோயின் தாக்கம் தணிந்த பிறகு, ஷாலீனின் குடும்ப உறுப்பினர்கள் திருமண நிகழ்ச்சியை நடத்தும் நோக்கத்திற்காக இந்தியாவிற்கு வர விசா கோரி விண்ணப்பித்தனர்.
 
ஆனால் அவர்களால் அவ்வளவு எளிதாக விசா பெற முடியவில்லை. இதையடுத்து, ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதாவது மே 2022 இல், மீண்டும் விசா பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த முறையும் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
 
மூன்றாவது முயற்சியில் அதாவது மார்ச் 2023 இல் மூன்று குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே விசா பெற முயன்றனர். இந்த முயற்சி வெற்றி பெற்றது. ஷாலீனும் அவரது தாயும் விசா பெற்று ஏப்ரல் 2023 இல் இந்தியாவுக்கு வந்தனர்.
 
"உண்மையில் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை நிச்சயமாக அடைவீர்கள். நிச்சயதார்த்தம் ஆனதிலிருந்து, நான் இந்தியா செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். வேறு எதைப்பற்றியும் நான் சிந்திக்கவில்லை. எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன்."
 
ஷாலீனுக்கும் நமனுக்கும் இடையிலான திருமணம் உறுதி செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நிறைவடைந்த பின்னர் திருமணம் செய்வதற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் இருவரும் மொபைல் ஃபோன் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பில் இருந்துள்ளனர்.
 
திருமணம் தாமதம் மற்றும் விசா கிடைப்பதில் பல சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவாரில் மீண்டும் அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
நவம்பர் 2019 இல், சீக்கியர்களின் முதல் குருவான ஸ்ரீ குரு நானக் தேவ் ஜியின் 550 வது பிறந்தநாளை முன்னிட்டு, பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் தர்பார் சாகிப் குருத்துவார் இந்தியர்களுக்காக திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
நமன் லூத்ராவின் தாயார் யோகிதா லூத்ராவுக்கு, தனது மகனுக்கு பாகிஸ்தானில் திருமணம் செய்து வைப்பது என்ற முடிவு எளிதானதாக இருக்கவில்லை.
 
”நான் சிறியவளாக இருந்தபோது ​​என் தாயுடன் உறவினர்களை சந்திக்க
 
பாகிஸ்தானுக்கு செல்வேன். ஆனால் என் மகன் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது,”
 
”மாப்பிள்ளை ஊர்வலம் எப்படிப் போகும் என்பது பெரிய கேள்வியாக இருந்தது. தூரம் அதிகம். தடைகளும் இருந்தன. ஆனால் நமன் தன் முடிவில் உறுதியாக இருந்ததால், நாங்களும் இந்த உறவுக்கு ஒப்புக்கொண்டோம்.” என்று அவர் குறிப்பிட்டார்.
 
நமனின் தந்தை பின்னர் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாலும், திருமணத்தை படாலாவில்தான் நடத்தவேண்டும் என்று ஒரு நிபந்தனை விதித்தார்.
 
”நமன் என் பேரன், ஷாலீன் என் பேத்தி. நாங்கள் முறைப்படி பெண் கேட்டபோது, ​​குழந்தைகள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இவ்வளவு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை,” என்று நமனின் பாட்டி கூறுகிறார்.
 
”இப்படியே காத்திருந்தால் எதுவும் நடக்காது என்றும், அதனால் திருமணத்திறக்காக வேறு இடம் பார்ப்போம் என்றும் உறவினர்கள் சொல்வதுண்டு. ஆனால் குழந்தைகள் இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர், இன்று கடவுள் இரு குடும்பத்தாரின் வீடுகளையும்
 
”நமனுடனான உறவு தொடங்கிய பின்னர் வேறு வேறு வகையில் நாங்கள் பெரும் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. எல்லோரும் சேர்ந்து அதைப் பற்றி நிறைய யோசித்தோம்,” என்று மகளின் திருமணத்திற்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ஷாலீனின் தாய் குறிப்பிட்டார்.
 
”மகள்களுக்கு வீட்டிற்கு அருகில் திருமணம் செய்ய வேண்டும். அதாவது அவர்களின் மாமியார் வீடு அருகில் இருக்க வேண்டும் என்று பலர் எங்களுக்கு யோசனை சொன்னார்கள்,” என்றார் அவர்.
 
”நாங்கள் விசா பெற மூன்று முறை முயற்சித்தோம். ஆனால் மூன்றாவது முறை கூட எனக்கும் ஷாலீனுக்கும் மட்டுமே விசா கிடைத்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
 
”இங்கே (இந்தியாவில்) திருமண சடங்குகள் தொடர்ந்து 15 நாட்கள் மேற்கொள்ளப்பட்டன. நாங்கள் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்தோம்,” என்று அவர் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கிறார்.
 
அரசு வேலையில் இருக்கும் நமனின் தந்தை குர்விந்தர் பாலும் இந்த திருமணம் குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.
 
குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி. சன்னி தியோல் மற்றும் படாலாவின் எம்.எல்.ஏ. அமன் ஷேர் சிங் ஷெர்ரி கால்ஸி ஆகியோரின் முயற்சிகள் காரணமாக ஷாலீனுக்கும் அவரது தாயாருக்கும் விசா கிடைப்பது ஓரளவு எளிதானதாக நமனின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர்.