வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (19:16 IST)

காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு 36 தீவிரவாதிகளைக் கொன்றதா இந்திய ராணுவம்?

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறி, புகைப்படமொன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய ராணுவத்தினர் மீது ஆயுத போராளிகள் கடந்த 14ஆம் தேதி நடத்திய தாக்குதலில் குறைந்தது 46 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
 
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, மறுநாளே இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது உண்மைதான்.
 
இந்திய ராணுவத்தை பாராட்டும் வகையிலான புகைப்படமொன்று, பல்வேறு வலதுசாரி ஃபேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.
 
இருப்பினும், சமூக ஊடகங்களில் பிரபலம் ஆகியுள்ள அந்தப் புகைப்படத்துக்கும் புல்வாமா சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது பிபிசியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
அதுமட்டுமின்றி, அந்தப் புகைப்படம் பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.
 
இந்த புகைப்படம் போலிச் செய்தியைப் பரப்புவதற்காக பயன்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல.
 
தற்போது வைரலாக பகிரப்பட்டு வரும் புகைப்படத்தின் மூலத்தை ஆய்வு செய்தபோது, அது கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் ஆண்டு ஏ.எஃப்.பி செய்தி முகமையை சேர்ந்த பாசித் ஷா என்னும் புகைப்பட கலைஞரால் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
 
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பள்ளி வாகனம் மீது தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உள்பட 141 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையின்போது கொல்லப்பட்ட தாலிபன் தீவிரவாதிகளின் புகைபடமென்று தெரிகிறது.
 
இதற்கு முன்பு எங்கெங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது?
 
இதற்கு முன்பு, 2016ஆம் ஆண்டு இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய துல்லிய தாக்குதலின்போது, இதே புகைப்படங்கள் வேறொரு விளக்கத்துடன் போலிச் செய்தியாக பரவியது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது வைரலாக பகிரப்பட்டு வரும் அதே புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஓர் இணையதளம், அது குர்திஷ் போராளிகள் படை 120 ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர்களை ஆறே மணிநேரத்தில் கொன்றுவிட்டதாகக் கூறிப் பதிவிட்டுள்ளது.
 
மேலும், லிபியாவில் 21 எகிப்தியர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எகிப்தின் வான்வழி தாக்குதலில் இவர்கள் உயிரிழந்ததாக இதே புகைப்படம் பகிரப்பட்டது.
 
இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 46 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
பாகிஸ்தானை சேர்ந்த ஆயுதப் போராளிகள் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்டது.
 
இந்தத் தாக்குதலை அடுத்து கோபமடைந்த இந்தியா, பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்போவதாக கூறியதுடன், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீத வரி விதித்தது.