'இந்தியா - பாகிஸ்தானிடம் இருந்து நல்ல செய்தி வருகிறது' - டிரம்ப்
பாகிஸ்தானில் உள்ள பாலகோடில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதல் மற்றும் பாகிஸ்தானிடம் இந்திய விமானப்படை விமானி ஒருவர் பிடிபட்டது போன்ற தொடர் நிகழ்வுகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்து வரும் சூழலில், இந்த பிரச்சனை குறித்து சர்வதேச நாடுகளின் அரசுகள் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளன.
வியாட்நாமில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக பிரச்சனை நிலவி வருகிறது; பரஸ்பரம் விருப்பமின்மை நிலவியது; தற்போது நாடுகளிடம் இருந்து குறிப்பிடத்தகுந்த நற்செய்தி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
இரு தரப்புக்கும் நடுநிலையுடன், உதவும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருந்தது என்று கூறிய டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்
இரு நாடுகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், மேற்கொண்டு ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நேற்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ வலியுறுத்தி இருந்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அர்த்தமுள்ள பரஸ்பர உடன்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலர் ஆண்டனியோ கட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அவையும் ஐரோப்பிய ஒன்றியமும் இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (The Organisation of Islamic Cooperation), தங்கள் தொடக்க கால உறுப்பு நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளதுடன், இருதரப்பும் பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
எனினும், பிரான்ஸ் இந்தியாவுக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டுள்ளது. தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்று கூறியுள்ள பிரான்ஸ், தங்கள் மண்ணில் நிறுவப்பட்டுள்ள தீவிரவாதக் குழுக்களின் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என பாகிஸ்தானிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தங்கள் மண்ணில் இருக்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக உடனடியாக மற்றும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளது.