ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 மார்ச் 2021 (11:07 IST)

ஆந்திராவில் அதிகரிக்கும் கழுதை இறைச்சி தேவை: பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறதா?

ஆந்திராவில், அதிகம் விரும்பப்படும் விலங்குகளின் பட்டியலில் இப்போது கழுதையும் சேர்ந்துள்ளது. பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் ஆகியவற்றை விட கழுதைப் பால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கோழி, ஆட்டிறைச்சி தவிர, கழுதை இறைச்சியும் இப்போது அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது.
 
ஆந்திராவில் பலர் உடல் ஆரோக்கியத்திற்காக கழுதைப் பால் குடித்து வருவதாகவும், அதன் இறைச்சியை உண்பதால், பாலியல் ஆற்றல் பெருகுவதாகவும் கூறுகிறார்கள்.
 
ஆனால், கழுதைப் பால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அதன் இறைச்சி, பாலியல் திறனை மேம்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
ஆந்திராவின் கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம், கர்னூல், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகா, ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் கழுதைப் பால் மற்றும் இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளது.
 
இதனால், கழுதைகளின் சட்டவிரோதக் கடத்தல் அதிகரித்துள்ளது என்று காக்கினாடாவை தளமாகக் கொண்ட விலங்கு மீட்புக்கான தன்னார்வ அமைப்பான அனிமல் ரெஸ்க்யூ ஆர்கனைசேஷன் கூறுகிறது.
 
கழுதை இறைச்சியை உண்பதால் பாலியல் திறன் அதிகரிக்கும் என்றும் அதன் பாலைக் குடித்தால், சில நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக மக்களிடையே உள்ளது என்றும் சமீபகாலமாக இது அதிகரித்துள்ளது என்றும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
 
இந்த அமைப்பின் நிறுவனர்-செயலாளர் சுராபத்துலா கோபால் பிபிசியிடம், "கழுதை இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளதால், இறைச்சியை விற்கும் கடைகள் காளான்களைப் போல முளைத்து வருகின்றன. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, ஆந்திராவில் கழுதைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால், அந்த மாநிலங்களிலிருந்து அவற்றைக் கொண்டு வருகின்றனர்." என்று கூறுகிறார்.
 
இதன் விலை….
"தற்போது, ஆந்திராவில், ஒரு கழுதையின் விலை, ரூ .15,000 முதல் 20,000 வரை இருக்கிறது. இதனால், மக்கள் கழுதைகளை பிற மாநிலங்களிலிருந்து தருவித்து இங்கு விற்பனை செய்கிறார்கள்," என்றார் கோபால். மேலும் அவர், "ஏற்கனவே நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது, ஆந்திராவில் இது இன்னும் மோசமாக உள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால், எதிர்காலத்தில், கழுதைகளை உயிரியல் பூங்காக்களில் மட்டுமே காண முடியும்," என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.
 
ஸ்ரீகாகுளம் முதல் கர்னூல் வரை மாநிலத்தின் பல மாவட்டங்களில் கழுதை இறைச்சி மற்றும் பால் விற்பனை செழிப்பாக இருப்பதாகவும் இதற்குக் காரணம் கழுதை இறைச்சி உண்பதால் பாலியல் ஆற்றல் அதிகரிக்கிறது என்ற தவறான கருத்துதான் என்றும் கோபால் மேலும் தெரிவித்தார்.
 
கழுதை இறைச்சி உண்ணத் தகுதியானதா? உணவுத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு என்ன கூறுகிறது?
கழுதைப் பால் மற்றும் இறைச்சி விற்பனை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களில் நடைபெறுகிறது. பால் விற்பனையாளர்கள் கழுதைகளை நம் வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் கழுதை இறைச்சியைப் பொறுத்தவரை, சில முக்கியமான மையங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
 
சில மாவட்டங்களில் கழுதை இறைச்சி எல்லா பருவங்களிலும் கிடைக்கிறது, சில இடங்களில் இது சில பருவங்களில் மட்டுமே விற்கப்படுகிறது.
 
"உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் - 2011 விதிமுறைகளின்படி, கழுதை, இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஒரு விலங்காகக் கருதப்படுவதில்லை. அதன் இறைச்சியை விற்பது குற்றம். இந்த விதிமுறைகளை யாராவது மீறினால், அவர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 428, 429 பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படலாம்" என்று கோபால் தெரிவித்தார்.
 
ஆந்திராவில் தற்போது சுமார் 5,000 கழுதைகள் உள்ளன என்றும், அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், அழிந்து வரும் விலங்குகளில் கழுதைகளும் சேர்க்கப்படும் என்றும் கோபால் எச்சரிக்கிறார்.
 
"உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி கழுதைப் பால் மற்றும் இறைச்சி மனிதர்கள் உட்கொள்ளும் உணவுகளின் பட்டியலில் இல்லை. அவற்றின் கூறுகள் என்ன? அவற்றை உட்கொண்ட பிறகு உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா? இந்தக் கேள்விகளுக்குத் தெளிவான விடை தெரியாமல், அவற்றை உண்பது. நாம் வழக்கமாக உட்கொள்ளும் கோழி, மட்டன் போன்ற பொருட்கள் கூட, பருவ நிலை மாற மாற அல்லது நீண்ட நேரம் சேமித்து வைக்கப்பட்டால், நச்சுத்தன்மையடைந்து மனித உடலுக்குச் சேதம் விளைவிக்கும். எனவே, எந்தச் சோதனையும் செய்யாமல் கழுதை இறைச்சியை உட்கொள்வது நல்லதல்ல.
 
எந்தவொரு உணவும் உட்கொள்ளத் தகுதியானதுதானா என்பதைத் தீர்மானிக்க, தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்), மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஃப்டிஆர்ஐ) மூலம் பகுப்பாய்வுச் சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஜி.வி.எம்.சியின் சேஃப்டி பிரிவில் உணவு ஆய்வாளராகப் பணிபுரியும் அப்பா ராவ், பிபிசியிடம் பேசிய போது, இது ஆரோக்கியத்தில் கடும் தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார்.
 
ஏழாண்டுகளில் 5000 கழுதைகள் மாயம்
முறையற்ற உரிமக் கொள்கையின் காரணமாக, தெரு நாய்கள், பன்றிகள் போன்ற வளர்ப்புப் பிராணிகள் குறித்த சரியான புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை. மேலும், விலங்குகளுக்கு உரிமம் வழங்குவதற்காக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமா என்று முடிவு செய்யும் உரிமை மாநிலங்களுக்கானது.
 
இதனால், விலங்குகள் குறித்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு விதிமுறைகள் உள்ளன. நாய்கள் மற்றும் பன்றிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்று அண்மையில் ஆந்திர அரசு ஓர் அரசாணை (GO எண் 693) வெளியிட்டுள்ளது.
 
"2019 விலங்குகள் கணக்கெடுப்பில், நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை 1.2 லட்சமாக உள்ளது. ஆனால் ஆந்திராவில் இந்த எண்ணிக்கை வெறும் 5,000 மட்டுமே.
 
2012 இல், இந்த எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது. அதாவது, ஏழு ஆண்டுகளில், கழுதைகளின் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த நிலையும் இவ்வாறே உள்ளது என்று முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் கோபாலகிருஷ்ணா பிபிசியிடம் தெரிவித்தார். நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கையில் 61.23% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
மேற்கு கோதாவரி மாவட்ட இணை இயக்குநர் ஜி நேரு பாபு கூறுகையில், எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லாமல் மக்கள் கழுதை இறைச்சி மற்றும் பாலைப் பயன்படுத்துகின்றனர். இது குறித்து அரசாங்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். அவர் மேலும் கூறுகையில், "கழுதை இறைச்சியை உண்பது, பாலியல் திறனை மேம்படுத்தும் என்ற தவறான எண்ணத்துடன் மக்கள் இதனை உட்கொண்டால், அது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சிலர் வர்த்தக நோக்கத்திற்காக இதுபோன்ற தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். " என்று தெரிவிக்கிறார்.
 
பால் மற்றும் இறைச்சியை விட கடத்தலால் அதிக வருமானம்.
 
ஆந்திராவில் கழுதைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் சட்டவிரோதமாக மற்ற மாநிலங்களிலிருந்து கழுதைகளைக் கொண்டு வந்து இறைச்சி விற்பனை செய்கின்றனர். கடந்த காலத்தில், மும்பையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 8 கழுதைகளைக் காவல் துறையினர் மீட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, டச்சேபள்ளியில் 39 கழுதைகளை மீட்டுள்ளனர். ஆனால் இந்த நிகழ்வுகளுடன் ஒப்பிடுகையில், சட்டவிரோதமாகக் கடத்தப்படும் கழுதைகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்று விலங்கு ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
 
"ஒரு தேநீர்க் குடுவை அளவு (100 முதல் 150 மில்லி) கழுதைப் பால், இடத்தைப் பொருத்து, ரூ.50 முதல் 100 வரை விற்கப்படுகிறது. கழுதை இறைச்சி ஒரு கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது.
 
சிலர் பால் மற்றும் இறைச்சி வர்த்தகத்தை விட, சட்டவிரோதக் கழுதைக் கடத்தல் மூலமாக அதிக வருமானம் ஈட்டுகிறார்கள். சில மாநிலங்களில், அவை ரூ.3 முதல் 5 ஆயிரம் வரை வாங்கப்பட்டு, வேறொரு மாநிலத்தில் ரூ.15 முதல் 20 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன" என்று விலங்கு மீட்பு அமைப்பு உறுப்பினர் கிஷோர் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
பிரதான மையங்களில் பால் மற்றும் இறைச்சி வீட்டிற்கே வருகின்றன.
 
பிரகாசம், குண்டூர் மாவட்டங்களிலும், விஜயவாடாவிலும் கழுதைப் பால் இல்லம் தேடி வருவது வாடிக்கையாகவே ஆகிவிட்டது. கழுதை இறைச்சிக் கடைகளை முக்கியமான பகுதிகளில் வெளிப்படையாகவே காணலாம். அவற்றின் விற்பனையாளர்கள் எந்தவொரு தடையும் இல்லாமல் தங்கள் தொழிலை மேற்கொள்கின்றனர்.
 
வீடு வீடாகச் சென்று கழுதைப் பாலை விற்பனை செய்யும் நாஞ்சர், "நாங்கள் பால் கொண்டு வந்து கழுதைப் பால் என்று சொன்னால் மக்கள் எங்களை நம்ப மாட்டார்கள். அதனால்தான், நாங்கள் கழுதைகளை அந்தந்த வீடுகளுக்கு அழைத்துச் சென்று அவர்களின் முன்னிலையில் கறந்து விற்பனை செய்கிறோம். நாங்கள், ராஜஸ்தானில் இருந்து நாற்பது குடும்பங்கள் கழுதை பால் வியாபாரம் செய்வதற்காக வந்திருக்கிறோம். கழுதைப் பால் பல நோய்களைக் குணப்படுத்துகிறது. நாங்கள் இந்த வணிகத்தை 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம்." என்று கூறுகிறார்.
 
"கடந்த 25 ஆண்டுகளாக எனக்கு நுரையீரல் பிரச்சினை உள்ளது. நான் கழுதைப் பால் குடிக்க ஆரம்பித்த பிறகு, அது குறைந்தது. அந்தப் பாலைக் குழந்தைகளுக்கும் கொடுக்கிறோம். இது நல்ல பலனைத் தருகிறது. நான் இறைச்சியையும் சாப்பிடுகிறேன். எனக்கு எந்தப் பிரச்சனையும்இல்லை." என்று விஜயவாடாவைச் சேர்ந்த தேவம்மா கூறினார்.
 
"அவர்கள் ஒரு கிளாஸ் பாலை 100 ரூபாய்க்கு விற்கிறார்கள். எங்கள் வீட்டில் - குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், அனைவரும் இந்தப் பாலைக் குடிக்கிறோம். மூட்டு வலி, சுவாசப் பிரச்னைகளை குணப்படுத்த கழுதைப் பால் உதவியுள்ளது. நாங்கள் இறைச்சி சாப்பிடதில்லை. ஆனால் எங்கள் கிராமத்தில் அதுவும் விற்பனை செய்யப்படுகிறது." என்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த நரசண்ணாபேட்டையைச் சேர்ந்த நாராயணா கூறினார்.
 
கழுதைக் கடத்தல்
தெலுங்கு மாநிலங்களில், முந்தைய காலத்தில், கழுதைகள் முக்கியமாக போக்குவரத்து மற்றும் சுமைகளைச் சுமக்கப் பயன்படுத்தப்பட்டன. நீரோடைகள் மற்றும் ஆறுகளில் இருந்து மணல் மூட்டைகளைக் கொண்டு வருவதற்கும், சலவைத் தொழில் செய்வோர், துணி மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கும் அவை பயன்படுத்தப்பட்டன. விஜயநகரம் மாவட்டம் சலூரில் கழுதைத் திருட்டு குறித்து அவ்வப்போது புகார்கள் வந்திருப்பதாக அப்பகுதி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இறைச்சிக்காக கழுதைகள் திருடப்பட்டன.
 
பொலிவு பெற கழுதைப் பால் குளியல்
கழுதை இறைச்சி பாலியல் திறனை மேம்படுத்துகிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றாலும், அதன் பாலில் வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பிரபல மருத்துவ நிபுணர் கூட்டிகுப்பலா சூர்யராவ் பிபிசியிடம் பேசுகையில், "கழுதைப் பாலில் உள்ள புரதம் ராஜ புரதம் என்று அழைக்கப்படுகிறது. மாடு மற்றும் எருமைப் பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு, கழுதைப் பால் வழங்கப்படுகிறது.

முற்காலத்தில், ராணிகள் தங்கள் அழகைப் பாதுகாக்க கழுதைப் பாலில் குளிப்பதைப் வழக்கமாகக் கொண்டிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் கழுதை இறைச்சியை உட்கொள்வதால் பாலியல் திறன் அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், கழுதை இறைச்சிக்கு அத்தகைய குணங்கள் இல்லை" என்று கூறினார்.