ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (01:14 IST)

இலங்கையில் பொருளாதார அவசரநிலை அமல் - எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு

இலங்கையில் சீனி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.
 
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை ,கடந்த சில காலமாகவே வெகுவாக அதிகரித்து வருகின்ற பின்னணியில், அவசரகால விதிமுறைகளை அறிவித்துள்ளது அரசு.
 
அதிகரித்து வரும் விலை உயர்வால் நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
 
சீனி, பால்மா, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ச்சியாகவே தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ளன.
 
இவ்வாறான நிலையில், அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
இதன்படி, செட்பம்பர் 31 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அவசரகால விதிமுறைகளுக்கான வர்த்தமானி அறிவிப்பு செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய, இந்த அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்தியாவை அடுத்து சீனாவும் இலங்கைக்கு நிதியுதவி - பின்னணி என்ன?
வரலாறு காணாத பொருளாதார சரிவு: மீண்டு வருமா தீவு தேசம்?
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது சரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அத்தியாவசிய உணவு விநியோகத்துடன், தொடர்புப்பட்ட அவரகால விதிமுறைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை உறுதிப்படுத்தி, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
 
எந்தெந்த பொருட்களுக்கு உத்தரவாத விலை
 
நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
 
சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தொடரும் தட்டுப்பாடு
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சீனி, அரிசி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
 
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்
 
வர்த்தக நிலையங்களில் மக்கள் தொடர்ச்சியாக நீண்ட வரிசைகளில் இருந்தவாறு கடந்த காலங்களில் பொருள் கொள்வனவுகளில் ஈடுபட்டிருந்தனர்.
 
இவ்வாறான நிலையில், ஜுன் மாத முதல் வாரத்தில் 120 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சீனி, தற்போது திடீரென 220 ரூபா வரை அதிகரிக்கப்பட்டதாக வர்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.
 
நகர் பகுதியில் 220 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டாலும், பின்தங்கிய பிரதேசங்களில் 240 ரூபாவிற்கே சீனி விற்பனை செய்யப்படுகின்றது.
 
அத்துடன், 150 ரூபாவிற்கு ஜுன் மாதம் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பருப்பு, தற்போது 250 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
 
அதேபோன்று, பால் மா, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடந்த ஓரிரு மாதங்களில் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
பெரும்பாலான சீனி மொத்த வியாபாரிகள், சீனிகளை பதுக்கியிருந்தமையும், கடந்த ஓரிரு தினங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
கடந்த சில தினங்களில் மாத்திரம் சுமார் 10,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டிருந்தது.
 
இவ்வாறான நிலையிலேயே, ஜனாதிபதியினால் இந்த அவசர கால விதிமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டது.
 
எதிர்கட்சிகள் அழுத்தம்
இலங்கை
படக்குறிப்பு,
ரஞ்ஜித் மத்துமபண்டார, பொதுச் செயலாளர் - ஐக்கிய மக்கள் சக்தி
 
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள அவசரகால விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டாரவினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவசரகால விதிமுறை நிலைமையை நீக்கி, அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
 
இந்த அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டமையானது, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் தவறாக சித்தரித்து, சர்வாதிகாரத்தை நோக்கி நாடு நகரும் என்ற உள்நோக்கம் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
 
அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையினால், அரசாங்கம் வருமானத்தை இழந்துள்ளதுடன், வெளிநாட்டு கையிருப்புக்களும் குறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனாலேயே, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு
இலங்கை
படக்குறிப்பு,
எம்.ஏ. சுமந்திரன்
 
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் மாத்திரமே, இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
 
அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்திற்கான அவசரகால நிலைமை அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, விசேட அறிவிப்பொன்றின் ஊடாக, சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
பொதுமக்கள் சுகாதார நிலைiமையை அடிப்படையாகக் கொண்ட, சட்டமொன்று நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
இதன்படி, சுகாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்ட, சட்டம் உருவாக்குவதற்கான தனிநபர் பிரேரணையொன்றை தான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவம் அவர் குறிப்பிடுகின்றார்.
 
Twitter பதிவை கடந்து செல்ல, 1
 
Twitter பதிவின் முடிவு, 1
இவ்வாறான நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது என்ற போர்வையிலேயே, இந்த அவசர கால நிலைமையை அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
இந்த சட்டம் அறிவிக்கப்பட்டதன் ஊடாக, நாட்டில் இனி முழுமையாக ஜனாதிபதியின் ஆட்சியே நிலவும் என்பதே, இதிலுள்ள அபாயம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.
 
ஜனாதிபதி, தான் விரும்பிய அவசரகால விதிமுறை சட்டங்களை வகுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
அவசரகால நிலைமை அறிவிப்பின் ஊடாக, சட்டங்களை ஜனாதிபதி நிறைவேற்றும் அதிகாரமும் கிடைக்கும் என அவர் கூறுகின்றார்.
 
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.