வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (21:31 IST)

"கதாபாத்திரத்துக்காக திருநங்கைகளுடன் 10 நாட்கள் இருந்தேன்" - ஸ்ரீபல்லவி

தமிழ் படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் பலர் நடித்து பாராட்டு பெற்றுள்ளனர். காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சராசரியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்வதில் இருந்து, ஏதாவது வித்தியாசமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பெறும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது.
 
'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். அவரது தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
 
இதுபோல் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் ஆனந்த பாண்டி ஆகியோர் நடித்து திரைக்கு வந்த 'தாதா 87' படத்தில் நடிகை ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து இருந்தார்.
 
பொதுவாக, திருநங்கை வேடங்களில் நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இமேஜ் பார்க்காமல் ஸ்ரீபல்லவி இந்த கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
 
திருநங்கைகளை பெண் என்று அழைப்போம் என்ற கருத்தை பதிவு செய்யும் படமாக 'தாதா 87' படத்தை இயக்குநர் உருவாக்கி இருந்தார்.
 
திரைப்படங்களில் ஆண், பெண் வேடத்திலும், பெண், ஆண் வேடத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆனால், இந்திய சினிமா வரலாற்றில் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.
 
 
ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு சாட்சியாக வீடு முழுவதும் வாழ்த்துகளாக பூங்கொத்துக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. தன் படப்பிடிப்பு அனுபவங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார் நடிகை ஸ்ரீபல்லவி.
 
"என்னோட சொந்த ஊர் விசாகப்பட்டினம். அப்பா அங்கே இருக்கிற ஸ்டீல் ப்ளாண்ட்ல காண்ட்ராக்டரா வேலைப் பார்க்கிறார். அம்மா அங்கன்வாடி பள்ளிக்கூடத்துல டீச்சரா இருக்காங்க. நான்தான் மூத்த பொண்ணு. செல்லம்னாலும், திட்டுன்னாலும் எனக்குத்தான் அதிகமா கிடைக்கும். எனக்கு அப்புறம் பொறந்த இரட்டையராக தம்பி, தங்கை இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் கூட டீச்சராதான் வேலைப் பார்க்குறாங்க. வீட்ல எல்லாருமே டீச்சர்ஸா இருக்காங்க நான் மட்டும் ன் ரிவர்ஸா நடிக்க வந்துட்டேன்.
 
கேள்வி: சினிமா வாய்ப்பு எப்படி கிடைச்சது?
 
பதில்: சினிமாவுக்கு வந்து மூணு வருஷம் ஆச்சு. சின்ன வயசுலேயிருந்தே ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவேன். பரதம், குச்சிபுடி, வெஸ்டர்ன், பாலேன்னு எல்லா நடன வகைகளுமே அத்துப்படி. ஆனா முறையா நடனம் கத்துக்கல.
 
அப்படி ஒரு நிகழ்ச்சியில் என்னுடைய நடன நிகழ்ச்சியை பார்த்துட்டு 'நேனு ரெக்கம்' தெலுங்குப் படத்தோட இணை இயக்குநர் சரத்குமார் சாரோட பொண்ணா நடிக்கிறதுக்கு வாய்ப்புக் கொடுத்தார்.
 
அந்தப் படம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. அப்புறம் தெலுங்குல 'நீவல்லே நீனுன்னா'ன்னு ஒரு படம் நடித்தேன். தெலுங்குப் படங்களைப் பார்த்துட்டு 'தாதா 87' வாய்ப்பு கிடைச்சது.
 
 
கே: வளர்ந்த நடிகைகளே நடிக்கத் தயங்குகிற திருநங்கை கதாபாத்திரத்துல எப்படி துணிச்சலா நடிச்சீங்க...?
 
ப: தமிழில், இந்த கதாபாத்திரத்தில் நிறைய நடிகைகள் நடிக்க சம்மதிக்கலைன்னு சொன்னாங்க. எங்க வீட்லேயும், 'திருநங்கையா எல்லாம் நடிக்க வேண்டாம்'னு சொன்னாங்க. கஷ்டப்பட்டுதான் சம்மதிக்க வைத்தேன்.
 
தமிழில் அறிமுகமே இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் இருந்தா, அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காதுன்னு நண்பர்கள் நிறைய பேர் பயமுறுத்தினாங்க.
 
ஆனா ரொம்ப வித்தியாசமான கதாபாத்திரமுன்னு எனக்கு நடிக்க ஆர்வம் இருந்தது. இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிச்சா, என்னுடைய நடிப்புத் திறமையும் வெளிப்படும்னு நம்பினேன்.
 
படம் பார்த்துட்டு வர்ற பாராட்டுக்கள் என் நம்பிக்கைப் பொய்யாகவில்லை. படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்ததால இப்போ 'தாதா 87' படத்தை மீண்டும் தமிழில் வெளியிடுறாங்க. இதே படமும் தெலுங்கிலும் 'பவுடர்' என்ற பெயருல வெளியாக இருக்கு.
 
கே: திருநங்கைகளோட உடல்மொழியை எப்படி இவ்வளவு இயல்பா கொண்டு வந்தீங்க? அந்த அனுபவம்?
 
ப: இயக்குநரோட முயற்சிதான் காரணம். கதையைச் சொல்லிட்டு, ஷூட்டிங் ஆரம்பிக்கிறது முன்னாடி திருநங்கைகள் பத்து பேரை அறிமுகப்படுத்தி வச்சார். அவங்க தினமும் ஷூட்டிங் வந்துடுவாங்க.
 
அவங்களுக்கு நடுவில் என்னை உட்காரச் சொல்லிட்டாரு. 'அங்கேயே உட்கார்ந்து பேசிக்கிட்டு இருங்க. அவங்க கூடவே சாப்பிடுங்க. உங்களுக்கு அவங்களோட உடல்மொழி தெரிய ஆரம்பிக்கும்'னு சொன்னார்.
 
அவங்களோட பழக ஆரம்பிச்சதுக்கப்புறமா திருநங்கைகளோட வாழ்க்கை முறையைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்.
 
படத்துக்காகன்னு இல்லாமா, நிஜமா அவங்களோட பழக ஆரம்பிச்சேன். இப்போ என்னோட ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல அவங்க எல்லாருமே இருக்காங்க. எல்லாருமே அத்தனை அன்பானவங்க. முழு படம் ஷூட்டிங் முடிகிற வரைக்கும் அவங்க எல்லாருமே ஷூட்டிங் ஸ்பாட்ல என் கூட தான் இருந்தாங்க.
 
அவங்களோட நட்பும், வழிகாட்டுதலும் இந்தக் கேரக்டரைப் பண்றதுக்கு எனக்கு ரொம்ப உதவியா இருந்தது. எப்படி உட்காருவது, பேசுவது, நடக்கிறதுன்னு ஒவ்வொரு விஷயமா சொல்லிக் கொடுத்தாங்க. இன்னைக்குப் படம் பார்த்துட்டு எல்லாரும் என்னைப் பாராட்டும்போது, அடிமனசுல என்னுடைய திருநங்கை நண்பர்களுக்கு மானமார நன்றி சொல்லிக்கிறேன்.
 
இந்த நிலையில், 2018-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்காக தேசிய விருதுக்கு என்னுடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக எல்லோரும் சொல்றாங்க.
 
எத்தனை விருதுகள் கிடைச்சாலும், படம் பார்த்துட்டு 'நீ ரொம்ப நல்லா நடிச்சிருக்கே'ன்னு என்னுடைய திருநங்கை நண்பர்கள் பாராட்டினதைதான் எனக்கான பெரிய அங்கீகாரமாகவும், வாழ்த்தாகவும் நினைக்கிறேன்.
 
கே: அடுத்த திட்டம் என்ன?
 
ப: இந்த படம் ஆரம்பம்தான். இன்னும் வித்தியாசமான கதைகளில் நிறைய படங்கள் பண்ண வேண்டும். இப்போ தெலுங்குல நிறைய பட வாய்ப்புகள் வருது. தமிழிலும் அடுத்தடுத்து படங்கள் பண்ணுகிறேன். எங்க குடும்பத்துலேயிருந்து முதல் ஆளா நான் மட்டும் தான் சினிமாவுக்கு வந்திருக்கேன்.