செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (15:37 IST)

எந்த சாதியையும், மதத்தையும் சேராதவர் என சான்று பெறுவது எப்படி?

BBC
கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் தன்னுடைய மகள் வில்மாவிற்கு எந்த சாதியையும் எந்த மதத்தையும் சேராதவர் என தமிழ்நாடு அரசிடம் சான்று வாங்கியுள்ளார்.

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் தன்னுடைய மூன்று வயது மகள் வில்மாவை பள்ளியில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தில் சாதி, மதம் என்கிற பகுதியை தேர்வு செய்யாமல் இருந்துள்ளார். இதனால் பல்வேறு பள்ளிகளில் இவருடைய விண்ணப்பம் மறுக்கப்பட்ட நிலையில் சட்டப்பூர்வமாக தன் மகள் ''எந்த சாதியையும், எந்த மதத்தையும் சேராதவர்'' எனச் சான்று வாங்கியுள்ளார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியவர், `சாத, மத வித்தியாசங்களை நான் ஏற்றுக் கொள்வதில்லை. சாதி, மதத்தின் மூலம் கிடைக்ககூடிய அணுகூலங்கள் எனக்கு தேவையில்லை என முடிவு செய்தேன்.

அதனால்தான் என் மகளை பள்ளியில் சேர்க்கின்றபோது சாதி, மத பிரிவுகளை நான் குறிப்பிடவில்லை. ஆனால் அதை குறிப்பிடாமல் என்னுடைய மனுவை பள்ளியில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்கள். சாதி பிரிவை குறிப்பிடாமல் பொது பிரிவை தேர்வு செய்தாலும் இதர சாதிகள் என சாதி, மதத்தை குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

அதனால் தான் இந்த சான்று வாங்க முடிவு செய்தேன். ஏற்கனவே திருப்பத்தூரைச் சேர்ந்த சினேகா என்கிற வழக்கறிஞர் ஒன்பது ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி எந்த சாதி, மதத்தையும் சேர்ந்தவரில்லை என்கிற சான்றிதழை பெற்றிருந்தார்.

அவருடைய சான்றிதழை மேற்கோள் காட்டித்தான் என் மகளுக்கும் விண்ணபித்தேன். தற்போது என் மகளுக்கும் இந்த சான்று கிடைத்துள்ளது. சாதி, மத வேறுபாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதையே சட்டப்பூர்வமாக சான்று பெறுகிறபோது எங்களின் குரலை வலுவாக பதிவு செய்ய முடியும்.

அதே சமயம் இடஒதுக்கீடு என்பதும் அதன் தேவை உள்ளவர்களுக்கு அவசியம் கிடைக்க வேண்டும். சாதி, மத உணர்வு இல்லாமல் என் மகளை வளர்த்த முடியும். சாதி என்கிற அடையாளத்திலிருந்து என் மகள் வெளியேறுகிறபோது இடஒதுக்கீடு போன்ற பலன்கள் வேறு ஒருவருக்கு கிடைக்கும்'' என்றார்.

தமிழ்நாடு அரசின் அரசாணைகள்

''தமிழ்நாடு அரசு கடந்த 1973-ம் ஆண்டும் 2000-ம் ஆண்டும் இரண்டு அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்களை பள்ளியில் சேர்க்கின்றபோது சாதியில்லை, சமயமில்லை என்று குறிப்பிடவோ அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ விரும்பினால் அவர்களிடம் விருப்பக் கடிதத்தை பெற்றுக் கொண்டு அனுமதிக்கலாம் எனக் கூறியிருக்கிறது.''

''ஆனால் பெரும்பான்மையான அதிகாரிகளுக்கு இத்தகைய அரசாணை இருப்பது தெரியாது. அதனால் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றபோது நிராகரிக்கின்றனர்,'' என்றார் நரேஷ்

எந்த சாதியையும் எந்த மதத்தையும் சேராதவர் என்கிற சான்று பெற சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும்.

அப்போது ''எங்களுக்கு எந்த சாதி, எந்த மத பிரிவிலும் குறிப்பிடப்பட விருப்பமில்லை. எனவே அதை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு அதற்கான சான்று வழங்க வேண்டும். மேலும் இதன் மூலம் எதிர்காலத்தில் சாதி, மதம் அடிப்படையில் அரசாங்கம் வழங்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தவொரு பலன்களையும் பெற முடியாது என்பதை நன்கு உணர்கிறோம்,'' என்று குறிப்பிட்டு விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

இதையே நோட்டரியிடம் சான்று பெற்று பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். அந்த பிரமாண பத்திரத்தில் எதிர்காலத்தில் இதில் திருத்தங்கள் வேண்டும் எனக்கோரி விண்ணப்பிக்க மாட்டோம் என்றும் உறுதியளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் ஆவணங்களை சரிபார்த்துவிட்டு உரிய சான்றினை வழங்குவார்கள். இந்த அரசாணை பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்தால் சிக்கல் இருக்காது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் இதை மேற்கோள் காட்ட வேண்டியிருக்கும்.

`இந்த அரசாணை தொடர்பாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இந்த கோரிக்கை அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வதாக உறுதியளித்துள்ளார். அரசும் இது தொடர்பான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும்.` என்றார் நரேஷ்.