ஹாங்காங்கில் கவுன்சிலர் காதை கடித்த மர்ம நபர்கள் - தொடரும் போராட்டம்

papiksha| Last Updated: திங்கள், 4 நவம்பர் 2019 (15:33 IST)
ஹாங்காங்கில் சட்ட மசோதா திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடந்த இடத்தில் அடையாளம் தெரியாத ஒருவரால் ஐந்து பேர் கத்தியால் தாக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் ஹாங்காங்கின் டை கூ மாவட்டத்தில் உள்ள சிட்டி பிளாசா மாலில் நடந்தது.
 
நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் காயமடைந்து இருப்பதாக மருத்துவமனை சார்பில் கூறியுள்ளனர். இதில் இருவரின் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இதில் காயமடைந்த ஒருவர் அங்கு நகர சபை உறுப்பினராக இருப்பவர். அந்த அடையாளம் தெரியாத நபர் இவரின் ஒரு காதை கடித்துள்ளார். பிறகு மாலில் இருந்தவர்கள் அவரை பிடித்துத் தடுத்துள்ளனர்.
 
இந்த காட்சியைப் பார்த்தவர்கள், போராட்டம் நடந்த அந்த இடத்தில் சிலரோடு அரசியல் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அந்த அடையாளம் தெரியாத நபர் கத்தியை எடுத்தார் எனக் கூறுகின்றனர். அந்த நபர் மாண்டரியன் மொழி பேசியதாகவும் கூறினர்.
 
நகர சபை உறுப்பினரான ஆண்ட்ரு சியூ காயின் அடையாளம் தெரியாத அந்த நபரை தாக்குதலுக்குப் பிறகு அந்த இடத்தை விட்டு செல்ல விடாமல் தடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதை நேரில் பார்த்தவர்கள், காவல் துறையினர் கைது செய்வதற்கு முன்னால் அந்த நபரை அங்கிருந்தவர்கள் நன்றாக அடித்ததாகக் கூறுகின்றனர்.
 
இந்த தாக்குதலில் காயமடைந்த பெண் சௌத் சைனா மார்னிக் போஸ்ட் என்னும் பத்திரிக்கையில், கத்தியால் தாக்கியவர் தன்னுடைய சகோதரி மற்றும் கணவருடன் விவாதத்தில் ஈடுபட்டார் எனக் கூறியுள்ளார். அவர்களும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர். ஹாங்காங்கை சேர்ந்த ஒரு பத்திரிக்கை அந்த நபர் மாண்டரியன் மொழி பேசும் சீன ஆதரவாளர் எனக் கூறியுள்ளது.
 
கடந்த ஐந்து மாதங்களாக ஹாங்காங் சில நேரங்களில் சட்ட மசோதாவை எதிர்த்துப் போராடும் போராட்டக்காரர்களால் வன்முறையைச் சந்தித்து வருகிறது. முதலில் சட்ட மசோதா திருத்தத்தை எதிர்த்து நடந்த இந்த போராட்டம் சீனா ஹாங்காங்கை நிர்வகிக்கும் விதம் குறித்த எல்லை பிரச்சனையாக மாறியது.
 
இந்த போராட்ட அலை ஜோஸ்வா வாங் என்ற பிரபலம் அங்கு நடக்கும் தேர்தலில் பங்கேற்கத் தடை செய்யப்பட்ட பிறகு வாரத்தின் இறுதிவரை தொடர்ந்தது. இந்த போராட்டத்தின் போது போலீசார் டைகூ நகரத்தில் கண்ணீர்ப்புகை உபயோகப்படுத்தினர். தாக்குதல் நடந்த சிட்டிப்ளாசா இந்த டைகூ நகரத்தில் தான் இருக்கிறது.

இதில் மேலும் படிக்கவும் :