வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2019 (20:30 IST)

பெண்கள் குழு சோதித்த பின்னரே உணவு உண்ட ஹிட்லர்: ரகசியம் வெளியானது எப்படி?

நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு பிளேட் சாப்பாடும், உங்களுடைய கடைசி சாப்பாடாக இருக்கலாம் என்பது பற்றி கற்பனை செய்து பாருங்கள்.

அந்த காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு உயிரைப் பறிக்கக்கூடியதாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் நீங்கள் அதை சாப்பிட்டாக வேண்டும்.

மூன்றாவது சாம்ராஜ்யம் என கருதப்பட்ட ஹிட்லரின் ஜெர்மனியில், இளம் பெண்கள் குழுவினருக்கு, இரண்டாம் உலகப்போரின் கடைசி இரண்டரை ஆண்டுகளில் ஹிட்லரின் உணவை சாப்பிட்டுப் பார்ப்பதுதான் தினசரி வேலையாக இருந்துள்ளது.

தனக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளில் நேச நாட்டுப் படையினர் அல்லது தங்களில் ஒருவர் விஷம் வைக்க முயற்சி செய்யலாம் என்பதால், ஜெர்மனி பெண்கள் அதை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று ஹிட்லர் வலியுறுத்தினார். இதுபோன்ற பங்களிப்பு கௌரவமிக்கதாக - ஒரு வகையான சேவையாகக் கருதப்பட்டது.

இத்தகைய இளம் பெண்களின் அனுபவங்களைப் பற்றிய பிரமிப்பூட்டும் கதைகள் 2013ல் தான் வெளிச்சத்துக்கு வந்தன. 95 வயதான மார்கோட் வோல்க் என்பவர் தன்னுடைய பணி குறித்து ஜெர்மானிய பத்திரிகை Der Spiegel-க்குப் பேட்டி அளித்தபோது இது தெரிய வந்தது.

இப்போது மிச்சிலி கோலோஸ் புரூக்ஸால் நடத்தப்படும் ஹிட்லரின் ‘டேஸ்ட்டர்கள்’ எனப்படும் நாடகம், உங்கள் வாழ்வில் என்ன ஆபத்து இருந்தது, ஒவ்வொரு கரண்டி சாப்பிடும் போதும் எவ்வளவு ஆபத்து இருந்தது என்பது நிஜமாக நடப்பதைப் போல உள்ளது.

அமெரிக்காவில் பல்வேறு அரங்குகளில் இந்த நாடகம் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது உலகின் மிகப் பெரிய கலைத் திருவிழாவாக உள்ள - எடின்பர்க் பிரிங் - நிகழ்ச்சிக்கு ஒரு மாத காலத்துக்கு வந்துள்ளது. இதில் நடித்துள்ள அனைவருமே பெண்கள். கிழக்கு புருஸ்ஸியாவில் (இப்போது போலந்து) ஹிட்லரின் கிழக்கு எல்லை தலைமையகமான உல்ஃப் லெயரை அடுத்துள்ள பள்ளி இல்லத்தில் வாழும் நான்கு இளம் பெண்கள் மீது (உண்மையில் 15 பேர் சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தப் பட்டிருந்தனர்) கவனம் செலுத்துவதாக நாடகம் அமைந்துள்ளது.

ஹிட்லரின் உணவை சாப்பிட்டுப் பார்ப்பவர்கள் பற்றி தற்செயலாகத்தான் புரூக்ஸுக்கு தெரியவந்தது - அவருடைய நண்பரான எழுத்தாளர், விமானத்துக்கு காத்திருந்தபோது நேரத்தைக் கழிக்க பேசிக் கொண்டிருந்தபோது இந்தக் கதையைக் கூறியிருக்கிறார்.

``நீங்கள் அதை எழுதப் போகிறீர்களா என கேட்டேன். ஏனெனில் நீங்கள் எழுதாவிட்டால் நான் எழுதுகிறேன்'' என்று புரூக்ஸ் கூறியுள்ளார்.
ஒரு கதையாக இது உடனடியாக, வெளிப்படையாக நல்ல அம்சங்கள் கொண்டதாக புரூக்ஸ் கருதியிருக்கிறார். ``எனது சிந்தனை மற்றும் கவலையில் உள்ள எல்லா அம்சங்களையும் தொடும் வகையில் இந்தக் கதை உள்ளது: போர்க் களங்களில் பெண்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள், குழந்தைகள் எப்படி பயன்படுத்தப் படுகிறார்கள், வளர் இளம்பருவத்தில் உள்ள பெண்களுக்கு அது எவ்வளவு கஷ்டமானது, அரசியல் நகர்வுகள்...... இப்படி நிறைய யோசித்திருந்தேன்'' என்கிறார் அவர்.

எல்லாவற்றையும் பார்த்தால் கடினமான விஷயமாகத் தோன்றும், ஆனால் உண்மையில் இது காமெடி நாடகம் - ஆனாலும் இருண்ட பக்கம் பற்றியது.
 

அங்கு சிக்கிக் கொண்ட பெண்களை தற்கால டீன் ஏஜ் பெண்களாகக் கற்பனை செய்ததன் மூலம், அதன் வரலாற்றுத் தருணங்களை நினைவு படுத்தியிருக்கிறார் புரூக்ஸ். பெண்கள் பாப் இசைக்கு நடனம் ஆடுகின்றனர், செல்பி எடுக்க போஸ் கொடுக்கின்றனர் ஆனால், அமெரிக்கப் பாடகர் பிராங்க் சினாட்ரா, அமெரிக்க திரைப்பட நடிகர் கிளார்க் கேப்ளே போல நடந்து கொள்வது பற்றி முணுமுணுக்கிறார்கள் - ஹிட்லரை போல நடந்து கொள்வதையும் முணுமுணுக்கிறார்கள். அவர்கள் கலிபோர்னியா பள்ளத்தாக்கு பெண்களைப் போல பேசுகிறார்கள். ஒருவருக்கொருவர் ``கேர்ள் பிரண்ட்'' அல்லது ``லூசர்'' என்று அழைக்கிறார்கள். ஆனால் யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள்.
இந்த இரட்டை சிந்தனையான முடிவுக்கான காரணம் பற்றிக் குறிப்பிட்ட புரூக்ஸ், ``இந்த இளம் பெண்கள் செல்பி எடுப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன், சரியான செல்பி வருவதற்காக அவர்கள் அக்கறை காட்டியதைப் பார்த்தேன், இவர்கள் தான் சரியானவர்கள் என்று அப்போது எனக்குத் தோன்றியது. காலத்தைத் தவிர வேறு வித்தியாசம் எதுவும் இல்லை'' என்று கூறினார்.

``வரலாற்றில் பழைய காலப் போக்கில் உள்ளவர்களாக இந்தக் கதாபாத்திரங்களை உருவாக்க நான் விரும்பவில்லை. அவர்கள் ரொம்ப ரொம்ப தற்காலத்தவர்களாக உணர வேண்டும் என்று விரும்பினேன்.''
 

இரண்டாம் உலகப் போர் வரலாற்றின் வித்தியாசமான இந்த அத்தியாயத்தை இந்த நாடகம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. வளர் இளம் பருவப் பெண்ணாக இருப்பதன் உலகளாவிய அனுபவத்தை ஆய்வு செய்வதாக இது உள்ளது - இருந்தாலும் அசாதாரணமான மேல்தட்டு சூழ்நிலையில் உள்ளது. ஆனால் உணவை சாப்பிட்டுப் பார்ப்பவர்கள் ஒவ்வொரு வாய் சாப்பிடும்போதும் ஆபத்தை எதிர்நோக்கியதாக இருந்தாலும், நம்ப முடியாத வகையில் சாதாரணமானதாக, சலிப்பான விஷயமாக இருந்தது.

போரில் பலருடைய அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு கட்டத்தில் அவர்கள் எளிதாகக் கருதியிருக்கிறார்கள் - 1944 வாக்கில், ஜெர்மனியில் பலர் மிகவும் பசியுடன் இருந்துள்ளனர், அவர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு தரப் பட்டுள்ளது. அவை சைவ உணவு தான் - ஹிட்லர் மாமிச உணவைத் தவிர்த்தார் - காய்கறிகள், அரிசி, பாஸ்தா, நூடுல்ஸ் மற்றும் பழங்கள் கொண்ட உணவுப் பட்டியலை வோல்க் தயாரிப்பார், அந்த காலக்கட்டத்தில் இது அபூர்வமான பட்டியலாக இருந்தது. ``உணவு நன்றாக - மிக நன்றாக'' இருந்தது என்றாலும், அவர்களால் அனுபவித்து சாப்பிட முடியாது என்று என்று அவர் கூறினார்.

``சில பெண்கள் பயம் காரணமாக சாப்பிடத் தொடங்கும்போது அழத் தொடங்கி விடுவார்கள்'' என்று 2013ல் நேர்காணல் ஒன்றில் அவர் கூறியுள்ளார். ``நாங்கள் முழுவதுமாக சாப்பிட வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். எங்கள் உடல் நலம் கெட்டுவிடுமோ என்று ஒவ்வொரு முறையும் நாங்கள் பயப்படுவோம். நாய்களைப் போல நாங்கள் அழுவோம். உயிர் பிழைத்திருந்தால் மகிழ்ச்சி அடைவோம்.''

எஸ்.எஸ். பிரிவைச் சேர்ந்தவர்கள் உணவு பரிமாறுவார்கள். பெண்கள் மயங்கி விழுகிறார்களா என்று பார்க்க ஒரு மணி நேரம் காத்திருப்பார்கள். அப்படி ஏதும் நடக்காவிட்டால், அந்த உணவு ஹிட்லருக்கு எடுத்துச்செல்லப்படும். ஒவ்வொரு உணவு நேரத்துக்கு இடையிலும், இளம் பெண்கள் உட்கார்ந்து காத்திருப்பதைத் தவிர வேறு வேலை கிடையாது, மரணிக்கிறார்களா என்று பார்க்க காத்திருக்க வேண்டும்.

``அவர்கள் எப்படி நேரத்தைக் கழிப்பார்கள், போரடிக்காமல் எப்படி இருப்பார்கள்'' என்பது பற்றி அவர் எழுதியுள்ளார். ``அவர்கள் எதைப் பற்றிப் பேசுவார்கள்? பெண்களாக திரும்பி வர வேண்டும், உயிர் வாழ வேண்டும் என்று நினைப்பதாக இருக்கும்: ஒருவருக்கு ஒருவர் தலைமுடி பின்னி விடுவார்கள், சிரிப்பார்கள், நிகழ்ந்து கொண்டிருக்கும் மனநலிவு நிலையில் இருந்து விடுபடுவதற்கு வழி தேடிக் கொண்டிருப்பார்கள்.''

எங்களுக்குத் தெரிந்த வரையில், இந்தப் பெண்களில் யாரும் உணவில் விஷத்தால் பாதிக்கப்படவில்லை. ஆனால் அவர்களுடைய கதைகள் பெரிதாக ஆவணப்படுத்தப் படவில்லை - வோல்க் கூறியிருக்காவிட்டால் இது ஒருபோதும் வெளியில் தெரியாமலே போயிருக்கும்.
ரஷ்யப் படைகள் முன்னேறிச் சென்ற போது, ஹிட்லரின் உணவை சாப்பிட்டுப் பார்த்தவர்களில் உயிர் பிழைத்தவர் வோல்க் ஒருவராகத் தான் இருக்கும் என்று தெரிகிறது.


ஜோசப் கோயாபல்ஸ் சென்ற ரயிலில் அவரை ஏற்றி அனுப்பியுள்ளார் ஒரு ராணுவ அதிகாரி. மற்ற பெண்கள் அனைவரும் சோவியத் வீரர்களால் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டதாகக் கருதப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளை காமெடியாக உருவாக்குவது `கேலிக்குரிய விஷயம்' என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார் -
நாடகத்தைப் பார்த்து சிரிப்பது சரிதானா என்று அவரிடம் மக்கள் கேட்கிறார்கள், அல்லது நாடகத்தைப் பார்க்க மறுப்பதாகவும் சிலர் கூறுகிறார்கள். ``பரிதாபகரமான ஒரு விஷயம் குறித்து நாம் சிரிக்கிறோம் என்பதால் இந்த நாடகத்தைப் பார்க்க விரும்பவில்லை என்று சிலர் கூறுகின்றனர் - ஆனால் நாடகத்தை நீங்கள் பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள் [நாங்கள் பார்க்கவில்லை].

நாங்கள் ஹிட்லரின் ஆதரவாளர் இல்லை. உண்மையில் எங்களுக்கு அவரைப் பிடிக்காது!'' என்று புரூக்ஸ் கூறுகிறார். இதுபோன்ற விஷயங்களை நம்ப முடியாது என்பதால் சொல்லியாக வேண்டியுள்ளது. ஹிட்லரின் டேஸ்ட்டர்கள் என்ற நாடகம் இந்த இளம்பெண்களுடன் சிரிப்பது, குறிப்பாக அப்பாவிப் பெண்களுடன் சிரிப்பது என்பது பாசிஸவாதிகளைப் பார்த்து நகையாடுவது அவர்களுடைய அதிகாரத்தை குறைப்பது என்ற கருத்தை ஒப்புக்கொள்வதாகும்.