ஜெயலலிதா உயில் இருக்கிறதா, இல்லையா?


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 20 டிசம்பர் 2016 (18:54 IST)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், அவர் உயில் எழுதியிருந்தால், சட்டப்படி அது நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்தபோது இத்தகவலை அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம், கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள தோட்டம் உள்ளிட்ட பல சொத்துக்கள் அவருக்குச் சொந்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

உயில் இருக்கிறதா?

இந்த நிலையில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம், அவர் உயிலில் என்ன எழுதியிருக்கிறார் என்ற கேள்விகளுக்கு எப்போது பதில் கிடைக்கும் என்று பொன்னையனிடம் கேட்டபோது, "உயில் இருக்கிறதா, இல்லையா என்பது யாருக்குமே தெரியாது. உயிலில் இருப்பதைத்தான் சட்டம் நடைமுறைப்படுத்தும்" என்றார் முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான பொன்னையன்.

ஜெயலலிதாவை அடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பொன்னையன் தெரிவித்தார்.

"ஜெயலலிதாவை அடுத்து, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தகுதி, அவரது தோழியாக, கடந்த 33 ஆண்டுகள் அவருக்கு உறுதுணையாக இருந்த சசிகலாவுக்குத்தான் உண்டு. அவர் தோழியாக மட்டுமல்ல, அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டவர்", என்று பொன்னையன் குறிப்பிட்டார்.

அவரைப் பொதுச் செயலாளர் ஆக்குவதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்றும், தகுதி படைத்த ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதற்கு, கட்சி விதிகளில் திருத்தம் செய்வதில் தவறேதும் இல்லை என்றும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

கிளைக்கழக நிர்வாகிகள் முதல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை கட்சியின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களும் சசிகலா பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், சசிகலா அவர்கள் இதுவரை சம்மதம் தெரிவிக்காமல் மவுனமாக இருப்பதாகவும் பொன்னையன் தெரிவித்தார். 

"ஜெயலலிதாவுக்காக ஜெயலலிதா பேரவையை உருவாக்கியவர் சசிகலா. எம்.ஜி.ஆர். காலத்தில் 30 லட்சம் பேராக இருந்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்றரைக் கோடியாக உயர்த்தியதில் பெரும் பங்கு வகித்தவர். கட்சியைக் கட்டுக்கோப்போடு கொண்டு செல்வதற்கு ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியவர். அவருக்கு அளப்பரிய அரசியல் தகுதி உண்டு. மாநில அரசியல், இந்திய அரசியல், அகில உலக அரசியல் தெரிந்த, ஒரு ஞானம் படைத்த அரசியல்வாதி அவர்" என்று பொன்னையன் குறிப்பிட்டார்.

ஆலோசகர் தலைவராக முடியுமா?

ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக இருந்ததால் கட்சிக்குத் தலைமையேற்கும் அளவுக்கு நிர்வாக ரீதியாக அனுபவம் பெற்றுவிட்டதாகவும், கட்சியை வழிநடத்துவதற்கும் தகுதி பெற்றுவிட்டதாகக் கருத முடியுமா எனக் கேட்டபோது, கடந்த 12 ஆண்டுகளாக கட்சியை நிர்வாக ரீதியாக நடத்தியவர் சசிகலாதான் என்று பொன்னையன் தெரிவித்தார்.

"கட்சியின் தேர்தல்களை முன்னின்று நடத்தியவர் சசிகலாதான். எம்.எல்.ஏ. தேர்வு, எம்.பி. தேர்வு நடத்தும்போது, நேர்முகம் காண்பது, அவர்களைப் பற்றி விசாரிப்பது என்று ஜெயலலிதாவுக்காக பல்வேறு பணிகளைச் செய்தவர் சசிகலா என்பது மக்களுக்குத் தெரியும்" என்றார் பொன்னையன்.

என்ன சொல்கிறது கட்சி விதி?

அதிமுகவின் சட்ட விதிமுறைகளின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த ஒருவர்தான் பொதுச் செயலாளர் ஆக முடியும் என்று கூறப்படும் நிலையில், சசிகலாவுக்கு அந்தத் தகுதி இல்லை என்று கூறப்படுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த பொன்னையன், "அது பொதுக்குழுவும், செயற்குழுவும் கொண்டு வந்திருக்கும் விதி. அந்த விதியைத் தளர்த்தவும், மாற்றவும் பொதுக்குழுவுக்கும் செயற்குழுவுக்கும் அதிகாரம் உண்டு. அதன்படி, விதியைத் தளர்த்தி சசிகலாவை சட்ட ரீதியாக பொதுச் செயலாளர் ஆக்கலாம்" என்றார் பொன்னையன்.

அப்படியானால், சசிகலாவுக்காக கட்சி விதிகள் திருத்தப்படுகிறதா என்று கேட்டபோது, "அதில் தவறொன்றும் இல்லை. திறமை மிக்க ஒருவர், ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கத்தை காக்கக் கூடிய ஒருவரைப் பொதுச் செயலராக்குவதற்கு விதியைத் தளர்த்துவதில் குறையொன்றும் இல்லை", என்றார் பொன்னையன்.

`சசிகலாவும் ஜெயலலிதா அறைக்குச் செல்லவில்லை'

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக ரகசியம் காக்கப்படுவதாகக் கூறப்படும் புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த பொன்னையன், இது திட்டமிட்டு, கட்சியை வழிநடத்தக்கூடிய தகுதி படைத்த சசிகலாவுக்கு தொய்வை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுப் பரப்பும் பொய் குற்றச்சாட்டு என்று தெரிவித்தார்.

"ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது, அப்போலோ மருத்துவ நிபுணர்கள் குழு. லண்டன் மருத்துவர், டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் குழு, சிங்கப்பூர் மருத்துவ நிபுணர் குழுதான். யாருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சசிகலா அவர்கள் கூட உள்ளே சென்று எதையும் பார்க்கவில்லை. மருத்துவர்கள் குழு கண்காணித்தது. நுரையீரல் தொற்றை குணப்படுத்தினார்கள்.

ஆனால், இறுதியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. 35 ஆண்டுகளாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா. என்டோதொலியம் என்று சொல்லக்கூடிய ரத்தக்குழாயின் உள்சுவர் தளர்ச்சியின் காரணமாக, எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. அதுதான் உண்மை" என்று விளக்கமளித்தார் பொன்னையன்.

அதே நேரத்தில், சிகிச்சையின் உள் விவரங்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் பொன்னையன் தெரிவித்தார்.

இதில் மேலும் படிக்கவும் :