புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (14:40 IST)

சிம்புவுக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்ததா பத்து தல? - ஊடக விமர்சனம்

Pathu thala
சிலம்பரசன், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ள பத்துதல திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் 2017ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற முஃப்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல திரைப்படம். கன்னட நடிகர் சிவகுமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்தியும் நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

கன்னியாகுமரியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் மிகப்பெரிய தாதாவான ஏஜிஆர் என்னும் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். மாநாடு படம் சிம்புக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு அவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனை படமாகவும் அமைந்தது. அதை தொடர்ந்து சிம்பு நடித்திருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவே கருதப்படுகிறது. இந்த இரு வெற்றிப் படங்களையும் தொடர்ந்து வெளியாகியுள்ள பத்து தல திரைப்படம் எப்படி உள்ளது என்பது தொடர்பாக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் போலீஸ்- தாதா இடையேயான பகையை கூறும் படங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், பார்வையாளர்களை கதாபாத்திரங்களின் உலகத்திற்கு நெருக்கமாக கொண்டு வரும் நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் மூலமே இத்தகைய திரைப்படங்கள் தனித்து நிற்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா, பத்து தல படத்தில் சில மறக்கமுடியாத நினைவுகள் இருந்தாலும், பார்வையாளர்களை கட்டாயப்படுத்தி ஈர்க்கும் விதமாக படத்தின் காட்சிகள் இருப்பதாக கூறியுள்ளது.

காணாமல் போன தமிழ்நாடு முதலமைச்சரை கண்டுபிடிக்கும் அண்டர் கவர் போலீசாக குணா என்னும் கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்தி நடித்துள்ளார். முதலமைச்சர் கடத்தலுக்கும் தாதாவான சிம்புவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கௌதம் சந்தேகிக்கிறார். எனவே, அவரிடம் அடியாளாக சேர்ந்து உண்மையை கண்டுபிடிப்பதே படத்தின் கதை என்றும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் சிம்பு தனது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளதாகவும் ஏ.ஆர். ரகுமான் பின்னணி இசை சிறப்பாக இருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள பக்காவான பொழுதுபோக்கு கேங்ஸ்டர் படமாக பத்து தல இருப்பதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா கூறுகிறது.

"ஒவ்வொரு கேங்ஸ்டர் படத்திலும் ஹிரோவாக உள்ள தாதா கடந்த காலத்தில் நல்லவராக இருப்பார். அவர் ஏன் தாதாவாக மாறினார் என்ற ஃபிளாஷ்பேக் இருக்கும். பத்துதல படத்திலும் இது உள்ளது. ஆனாலும் கவரவில்லை" என்று இந்தியா டுடே விமர்சனம் கூறுகிறது.

'படத்தின் ஒருசில காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும்விதத்தில் இருக்கிறது. குறிப்பாக சிம்புவின் அறிமுகக் காட்சி. இருப்பினும் ஒபிலி கிருஷ்ணாவின் திரைக்கதை பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. முக்கியமான காட்சிகள் கூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பிரதான வில்லனான கௌதம் மேனனின் பாத்திரம் வலுவானதாக இல்லை` என்று இந்தியா டுடே விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

"தாதா ஏஜிஆராக சிம்பு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கௌதம் கார்த்தி அவரது திரைப்பயணத்தில் சிறப்பான கதாப்பாத்திரங்களில் ஒன்றை ஏற்று நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசை, யூகிக்கக்கூடிய கதையம்சம் கொண்டுள்ள இந்த படத்தை வேறு தளத்துக்கு எடுத்து செல்கிறது" என்றும் இந்தியா டுடே விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு இடைவேளைக்கு பின்னர் மட்டுமே வருவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது என்று தினமலர் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பத்து தல என டைட்டில் ரோலில் நடித்துள்ள சிம்புவை படம் முழுவதும் வர வைத்து தெறிக்கவிட்டிருக்க வேண்டும். இடைவேளைக்குப் பின் மட்டுமே அவருடைய ராஜ்ஜியம் தொடர்கிறது. அண்டர்கவர் போலீஸாக வரும் கௌதம் கார்த்திக் தனக்கு கொடுப்பட்ட வேலையை சரியாகச் செய்திருக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.