செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : புதன், 12 ஜனவரி 2022 (11:12 IST)

'அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா ஒமிக்ரானால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம்!

அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
 
டெல்டா திரிபின் பரவலுக்கும் மேல், ஒமிக்ரான் "மேற்கிலிருந்து கிழக்கே எழும்பும் அலையாக" இந்தப் பகுதி முழுவதும் பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இயக்குநர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூஜ் கூறினார்.
 
2022-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஐரோப்பா முழுவதும் 70 லட்சம் பேருக்கு தொற்று உண்டாகியுள்ளதன் அடிப்படையில் இந்தக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
இரண்டு வார காலத்தில் நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
 
"2021-ஆம் ஆண்டின் கடைசி வரை அனைத்து நாடுகளும் டெல்டா திரிபைச் சமாளித்துக் கொண்டிருந்தன. தற்போது அதைவிட அதிகமாக, தற்போது ஒமிக்ரான் திரிபு ஒரு புதிய மேற்கிலிருந்து கிழக்கே பரவும் அலையை உருவாக்கி வருகிறது," என்று மருத்துவர் க்ளூஜ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
 
மேலும், சியாட்டிலில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான நிறுவனம் முன்னறிவித்துள்ளதாக மேற்கோள் காட்டியவர், "அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களில் இப்பகுதியில் உள்ள 50 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவார்கள்," என்றார்.மேற்கத்திய நாடுகளில் இருந்து பால்கன் பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதால் ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகள், "தீவிர அழுத்தத்தில்" இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதோடு, "தொற்றுநோயியல் நிலைமையைப் பொறுத்து ஒவ்வொரு நாடும் இப்போது எப்படி எதிர்செயலாற்றுகின்றன, கைவசம் இருக்கக்கூடிய வளங்கள், தடுப்பூசி போடுவது மற்றும் சமூக-பொருளாதார சூழல் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்," என்றும் கூறினார்.
 
முந்தைய கொரோனா திரிபுகளைவிட ஒமிக்ரான் மக்களைக் கடுமையாக நோய்வாய்ப்படுத்தும் வாய்ப்பு குறைவு என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், ஒமிக்ரான் அதீத பரவும் தன்மை உடையது. முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட மக்களைப் பாதிக்கலாம்.
 
இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை சுகாதார அமைப்புகளைக் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
 
திங்கட்கிழமையன்று, இங்கிலாந்தில் மேலும் 14,224 நோயாளிகள் மற்றும் 77 மரணங்கள் பதிவாகியுள்ளன. பல மருத்துவமனைகள் ஊழியர்கள் இல்லாத காரணத்தாலும், கோவிட் காரணமாக அதிகரித்து வரும் அழுத்தங்களாலும், மோசமான நிலையை அறிவித்துள்ளன.
 
மற்ற பகுதிகளில் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியர் வெரன் கடந்த வாரம் ஜனவரி மருத்துவமனைகளுக்குக் கடினமான மாதமாக இருக்குமென்று எச்சரித்தார்.
 
மேலும், டெல்டா திரிபு அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அதிகமான அழுத்தத்தை உண்டாக்கின. ஆனால், ஒமிக்ரான் நோயாளிகள் மருத்துவமனைகளின் "வழக்கமான" படுக்கைகளில் அதிகமாகச் சேர்க்கப்படுவதாக அவர் கூறினார்.
 
கிழக்கு ஐரோப்பாவில், தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நாட்டில் 100,000 பேர் வைரஸால் இறந்துள்ளதாக போலந்து தெரிவித்துள்ளது. கோவிட்-19 தொற்றால் உயிரிழப்புகள் நிகழ்ந்ததில், உலகில் ஆறாவது அதிக இறப்பு விகிதத்தைத் தற்போது போலந்து கொண்டுள்ளது. மேலும், அதன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40% பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை.
 
ரஷ்யாவில் நுகர்வோர் சுகாதாரத்துறை உயரதிகாரி அன்னா பொபோவா, அரசுடைய கொரோனா வைரஸ் பணிக்குழுவின் கூட்டத்தில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், அங்கு தினசரி புதிதாகப் பதிவாகும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் என்று கூறினார்.
 
நவம்பர் தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட 41,335 நோயாளிகள் என்ற கணக்கிலிருந்து தினசரி தொற்று சமீபத்தில் குறைந்து வருகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
நாட்டின் 13 பிராந்தியங்களில் இதுவரை அறியப்பட்ட 305 ஒமிக்ரான் திரிபினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக பொபோவா கூறினார். ரஷ்யாவில் இன்றுவரை குறைந்தது 311,281 மரணங்கள் மற்றும் 10.5 மில்லியன் கோவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
 
திங்கட்கிழமையன்று, மருந்து நிறுவனமான ஃபைசர், ஒமிக்ரானுக்கு எதிராகச் சிறப்பு பாதுகாப்பை வழங்கும் ஒரு தடுப்பூசியை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்த முடியும் என்று கூறியது. இது தேவையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.