மடிக்கணினி, கணினி மற்றும் டேப்லெட் ஆகிய மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் முடிவை அமல்படுத்துவதை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், இந்தப் பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது புதிய அறிவிப்பில், இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் 31 அக்டோபர் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்வதற்கான தடை உத்தரவு நவம்பர் 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மடிக்கணினி, கணினி, டேப்லேட் உள்ளிட்ட ஏழு பொருட்களின் இறக்குமதிக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது, தொழில்துறையில் கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியது.
தீபாவளியின்போது இந்தப் பொருட்களுக்கு அதிக கிராக்கி இருக்கும். அப்படியிருக்கும் சூழலில் அரசாங்கம் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தொழில்நுட்ப வன்பொருள் தொடர்பான வல்லுநர்கள் கூறுகின்றனர். அரசின் இந்த அறிவிப்பால் நிறுவனங்களின் வணிகம் மோசமாகப் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உரிமம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்திற்கு தகவல் தொழில்நுட்பத்திற்கான உற்பத்தியாளர்கள் சங்கம், மின்னஞ்சல் அனுப்பியிருந்தது.
இந்திய அரசின் அறிவிப்பையடுத்து, ஆப்பிள், சாம்சங், ஹெச்பி ஆகிய நிறுவனங்கள் மடிக்கணினி, டேப்லேட்களின் இறக்குமதியை உடனடியாக நிறுத்தின.
மடிக்கணினி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்ட உத்தரவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. ஆகையால், மத்திய அரசு தற்போது இந்த உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் வெளியிட்ட முதல் அறிவிப்பில் என்ன கூறப்பட்டுள்ளது?
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் கடந்த வியாழக்கிழமை மடிக்கணினி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இனி அவற்றை இறக்குமதி செய்வதற்கு நிறுவனங்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தது.
தற்போது இந்த முடிவை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எனினும், இறக்குமதி தடை தொடர்பான அரசின் அறிவிப்பு ஆப்பிள், டெல், லெனோவா, ஹெச்பி, சாம்சங் போன்ற நிறுவனங்களின் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
தற்போது, இந்தியாவில் தங்கள் பொருட்களுக்கு உள்ள தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளூர் தயாரிப்பை விரைவுபடுத்த வேண்டிய நிலை இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளன.
இதேபோல், அரசின் இந்த நடவடிக்கையால் உள்நாட்டு சந்தையில் மடிக்கணினி, டேப்லெட் போன்றவற்றின் விலை பெருமளவில் உயர வாய்ப்புள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் (குறிப்பாக கோவிட் தொற்றுப் பேரிடரின்போது), நாட்டில் மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற பொருட்களின் தேவை கணிசமாக அதிகரித்தது. தேவை அதிகரிப்பால் அவற்றின் விலையும் அதிகரித்தது.
இவற்றின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு எவ்வித காரணங்களும் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தப் பொருட்களின் இறக்குமதியை தடை செய்ய அரசு விரும்புவதாகக் கூறப்படுகிறது.
மடிக்கணினி, கணினி, டேப்லெட் உட்பட இறக்குமதிக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஏழு பொருட்களில் 58 சதவீதம் சீனாவிலிருந்து வருகிறது.
மேலும், 2022-23 நிதியாண்டில் இந்தியாவில் அவற்றின் இறக்குமதி 8.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் சீனாவின் பங்கு மட்டும் 5.1 பில்லியன் டாலர்கள்.
அரசின் அறிவிப்புக்கு பின்னணியில் சீனா?
ஒருசில ஊடகங்கள், பெரும்பாலான பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இந்தப் பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளுக்குப் பாதுகாப்பு காரணங்களை அரசாங்க வட்டாரங்கள் கூறுவதாக மேற்கோள் காட்டியுள்ளன.
ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டும் இந்தப் பொருட்களை இறக்குமதி செய்ய அரசு தடை விதிக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் மின்னணு சாதனங்கள் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்கும் முன்னணி அமைப்பான VLSI-இன் தலைவர் சத்ய குப்தா பிபிசியிடம் பேசும்போது, “பாதுகாப்பு பிரச்னை விவாதத்திற்குரிய விஷயம். அதனால்தான் அரசாங்கம் தனது அறிவிப்பில் குறிப்பிடவில்லை. சீன தயாரிப்புகள் பாதுகாப்பானவை அல்ல என்பதை நிரூபிப்பது என்பது மிகவும் கடினமானவை,” என தெரிவித்தார்.
“சொல்லப்போனால், லேப்டாப், டேப்லெட், கணினி பாதுகாப்பு அம்சம் செயலியுடன் தொடர்புடையது. இவற்றில் பெரும்பாலான பொருட்களில் இன்டெல், ஏஎம்டி மற்றும் மைக்ரோடெக் செயலிகள் உள்ளன. இவை சீன செயலிகள் அல்ல.
சீன செயலிகள் யுனிசர்ஃப் மூலம் மடிக்கணினிகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் அவை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. எனவே சீனாவின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு கணினி மற்றும் டேப்லெட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது என்று கூறுவது தவறு,” என்றும் அவர் கூறுகிறார்.
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியாவை பெரிய மையமாக மாற்ற மோதி அரசு விரும்புகிறது. இந்த நோக்கத்தை அடைய, தகவல் தொழில்நுட்ப வன்பொருளுக்கான பிஎல்ஐ (உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை) திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.
'மேக் இன் இந்தியா' பிரசாரத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்க அரசு விரும்புகிறது, எனவே பிஎல்ஐ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ், ஜவுளி மற்றும் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட துறைகளுக்கு பிஎல்ஐ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாட்டில் கச்சா எண்ணெய், தங்கத்திற்கு அடுத்தபடியாக மின்னணு சாதனங்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. பிப்ரவரி 2021 மற்றும் ஏப்ரல் 2022க்கு இடையில் 550 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அதில் மின்னணு சாதன பொருட்கள் மட்டும் 62.7 பில்லியன் டாலர்கள்.
எனவே, இந்தியாவை மின்னணு சாதனங்களின் உற்பத்தி மையமாக மாற்றுவதன் மூலம் அந்நிய செலாவணியைச் சேமிப்பதும் இதன் நோக்கமாக இருக்கிறது.
கடந்த 2020இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு நாட்டில் உற்பத்தி அலகுகளை அமைப்பதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும், பொருட்களை விற்பனை செய்வதற்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
பிஎல்ஐ திட்டத்தின் கீழ், ஐடி வன்பொருள் துறைக்கு மட்டும் ரூ.17,000 கோடி ஊக்கத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி ஆப்பிள், டெல், ஹெச்பி, சாம்சங் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யும் என அரசு நம்புகிறது.
மடிக்கணினி, கணினி, அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கணினி ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்து வாங்கினால் இந்தக் கட்டுப்பாடு உங்களுக்குப் பொருந்தாது.
அத்தகைய கணினிகளை மின் வர்த்தக தளங்கள் அல்லது கூரியர் தபால் மூலம் ஆர்டர் செய்வதற்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. எனினும், அதற்கு வரி செலுத்த வேண்டும்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, தரப்படுத்துதல், மதிப்பீடு, பழுதுபார்த்தல் அல்லது மறு ஏற்றுமதி ஆகியவற்றுக்கான 20 பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் உரிமம் தேவையில்லை.
மடிக்கணினி, டேப்லெட், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கணினிகள் மற்றும் சர்வர்கள் ஆகியவை மூலதனப் பொருட்களின் ஒரு பகுதியாக இறக்குமதி செய்யப்பட்டால், இவையும் இந்தத் தடையின் வரம்பிற்குள் வராது.
நாட்டில் விற்கப்படும் 90 சதவீத கணினிகள் (டெஸ்க் டாப், லேப்டாப் மற்றும் டேப்லெட்) இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதே உண்மை.
அப்படியிருக்கும்போது, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தற்போதைக்கு தங்களின் இறக்குமதியை நிறுத்தும் என்று கணினியை விற்பனை செய்யும் நிறுவனங்கள் கூறுகின்றன.
இதனால், சந்தையில் இந்தப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படும். இதன் விளைவாக, அவற்றின் விலை பெருமளவில் அதிகரிக்கும்.
கடந்த 2020ஆம் ஆண்டில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் இதேபோன்ற நடவடிக்கையை எடுத்தது. அப்போது தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக டி.எஸ்.எல், வூ, சாம்சங், எல்ஜி ஷையோமி போன்ற நிறுவனங்களின் உயர் ரக வண்ணத் தொலைக்காட்சி விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் இந்தியாவிலும் உற்பத்தி செய்கின்றன.
அரசின் இந்த நடவடிக்கையால், 7000 முதல் 8000 கோடி ரூபாய் மதிப்புள்ள டிவி இறக்குமதி சந்தை பாதிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் மொத்த டிவி விற்பனையில் இது ஒரு சிறிய பகுதியாகும்.
தற்போது, கணினிகளை இறக்குமதி செய்வதற்கும் இதேபோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான கணினிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்த நடவடிக்கை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
திடீர் விலை ஏற்றத்தில் இருந்து நுகர்வோர்களைப் பாதுகாக்க, இந்த முடிவை அமல்படுத்துவதற்கு முன்பு மூன்று மாதங்கள் அவகாசம் அளித்திருக்க வேண்டும் என கணினி தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ரிலையன்ஸ் ஜியோபுக் அறிமுகமும் அரசின் இறக்குமதி தடை உத்தரவும்
இந்த வாரம் முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோ `ரிலையன்ஸ் ஜியோபுக்கை` வெறும் 16,499 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது டேப்லெட் மற்றும் லேப்டாப்பின் கலவையான பதிப்பாகும்.
இது சந்தையில் மலிவான 'லேப்டாப்' என்று கூறப்படுகிறது. முன்னதாக, ஹெச்பி மற்றும் பிற நிறுவனங்களின் Chromebooks ரூ.20,000க்கு விற்கப்பட்டது.
ஜியோபுக் அறிமுகம் குறித்தும், அரசின் புதிய விதிகள் வெளியான நேரம் குறித்தும் சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு லாபம் தரும் வகையில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் நிபுணர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றனர்.
சத்யா குப்தா கூறும்போது, “சந்தையில் உள்ள மற்ற தயாரிப்புகளுடன் ரிலையன்ஸின் ஜியோபுக் போட்டியிட முடியாது. இது லேப்டாப் அல்ல, உயர்தர டேப்லெட். ரிலையன்ஸின் தயாரிப்பு இன்னும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. அப்படியிருக்கும்போது, அரசின் இறக்குமதி தடை உத்தரவால் இந்திய சந்தையை ரிலையன்ஸ் ஜியோபுக் பிடித்துவிடும் என்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை,” எனக் குறிப்பிட்டார்.
அரசின் இந்தக் கொள்கை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மடிக்கணினிகள், டேப்லெட்கள் தயாரிக்க ஒரு யூனிட்டை தொடங்குவதும் அவற்றைப் பொருத்தும் கூடங்களை அமைப்பதும் எளிது.
பல நிறுவனங்களின் பொருத்தும் கூடங்கள் இயங்குகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் யூனிட்களை இங்கு நிறுவி தங்களின் பிஎல்ஐ திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
இது பற்றி சத்ய குப்தா கூறும்போது, “புதிய பிஎல்ஐ திட்டத்தின் கீழ் அரசு ரூ.17,000 கோடி ஊக்கத்தொகை அளிக்கிறது. இதன் கீழ், நான்கு முதல் ஆறு சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, இது மிக அதிகம்.
லேப்டாப், டேப்லெட்டுகள் அல்லது பிற தயாரிப்புகளில் இரண்டு முதல் மூன்று சதவிகிதம் வரை மார்ஜின் இருந்தால் நல்லது என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆறு சதவீதம் மார்ஜின் செய்தால், நிறுவனங்களுக்குப் பெரும் லாபம்,” எனத் தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி உள்நாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் பொருட்களைத் தயாரிக்கவும், வடிவமைக்கவும் மேம்படுத்தவும் அரசாங்கம் விரும்புகிறது.
இது இந்தியாவில் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும், இங்குள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் தயாரிப்பு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி போன்ற பணிகளைச் செய்ய முடியும்.
"லேப்டாப், டேப்லெட் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் விவிடிஎன், ஆப்டிமஸ் போன்ற பல சிறிய நிறுவனங்கள் உள்ளன. அரசின் இந்தக் கொள்கை இந்த நிறுவனங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்.
சிறு நிறுவனங்களின் மூலமாகவும், ஐ.டி. வன்பொருள் துறையில் உள்ள பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் நிலைத்து நிற்கும்,” என்று சத்ய குப்தா கூறுகிறார்.