வியாழன், 20 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 மார்ச் 2025 (11:52 IST)

டாஸ்மாக் விவகாரம்: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்..!

highcourt
டாஸ்மாக் சோதனை தொடர்பான விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணையை  மார்ச் 25ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதாகவும், அதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
முன்னதாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக எந்த அதிகாரிக்கும் எதிராக உறுதியான ஆதாரம் இல்லை என்றும், அமலாக்கத்துறை 17ன் விதிப்படி ஆதாரம் இல்லாமல் விசாரணை மேற்கொள்வது எப்படி சாத்தியமாகும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், 60 மணி நேரத்திற்கும் அதிகமாக பெண் அதிகாரிகள் உள்ளிட்ட சிலரை சட்டத்துக்கு முரணாக காவலில் வைத்திருந்ததாகவும் டாஸ்மாக் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
 
இதனை அடுத்து, "குற்றம் செய்தவர் யார் என்பது தெரியாமல், அனைத்து அதிகாரிகளையும் எப்படி தடுத்து நிறுத்த முடியும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்தும் விதம் முறையல்ல எனவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
 
அத்துடன், டாஸ்மாக் சோதனை தொடர்பான வழக்கின் விவரங்களை பதில் மனுவில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு மார்ச் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதுவரை அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
Edited by Mahendran