ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (22:40 IST)

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை பெற மீண்டும் விண்ணப்பமா?

Srilanka
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கோட்டாபய ராஜபக்ஷ, 1971ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இணைந்ததுடன், அவர் 90ஆம் ஆண்டு காலப் பகுதியில் ராணுவத்திலிருந்து விலகியிருந்தனர்.
 
அதனைத் தொடர்ந்து, 1998ம் ஆண்டு காலப் பகுதியில் அமெரிக்காவிற்கு சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, அங்கு குடியுரிமையை பெற்றுக்கொண்டார். 
 
2005ம் ஆண்டு காலப் பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், தனது சகோதரனான கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டிற்கு மீள அழைத்து, பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்கியிருந்தார்.
 
அமெரிக்க குடியுரிமையுடன், பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகித்திருந்தார்.
 
இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினார்.
 
 
2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் அரசியலமைப்பின் 19வது திருத்தம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
 
இந்த திருத்தத்தின் பிரகாரம், வெளிநாட்டு குடியுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
 
இதனால், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து கொண்டார்.
 
இதையடுத்து, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
 
 
அதன்பின்னர், இலங்கை எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ஷவே காரணம் என கூறி, பாரிய போராட்டங்களின் ஊடாக கடந்த ஜூலை மாதம் இலங்கை மக்கள் அவரை பதவியிலிருந்து விரட்டியடித்திருந்தனர்.
 
இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்நோக்கியிருந்தனர்.
 
இதையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, அவரது மிரிஹான பகுதியிலுள்ள வீட்டிற்கு அருகில் மக்கள் ஒன்று கூடி போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர்.
 
அதன் பின்னர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி, கொழும்பு - காலி முகத்திடல் பகுதியில் தன்னெழுச்சி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 
கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 
அதன்பின்னர், மே மாதம் 9ஆம் தேதி, காலி முகத்திடலில் நடத்தப்பட்ட தொடர் தன்னெழுச்சி போராட்டத்தின் மீது, ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
 
இதையடுத்து, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வலுப்பெற்றன.
 
இந்த வன்முறைகளில் பலர் உயிரிழந்திருந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.
 
அத்துடன், பல கோடி ரூபா சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது.
 
இந்த சம்பவத்தை அடுத்து, அப்போது பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.
 
மே மாதம் 9ஆம் தேதி, முழு அமைச்சரவையும் பதவி விலகியது.
 
மேலும், ஜூன் மாதம் 9ஆம் தேதி, பஷில் ராஜபக்ஷ, தனது நாடாளுமன்ற பதவியை துறந்தார்.
 
அதனைத் தொடர்ந்து, ஜுலை மாதம் 9ஆம் தேதி கொழும்பிற்குள் லட்சக்கணக்கான மக்கள் வருகைத் தந்து, கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேறுமாறு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
 
 
இதையடுத்து, நாட்டிலிருந்து ஜுலை மாதம் 9ஆம் தேதி மாலைத்தீவை நோக்கி தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்திருந்தார்.
 
சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, ஜுன் மாதம் 13ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பி வைத்ததன் ஊடான, அவர் பதவி விலகினார்.
 
அதன்பின்னர், நாடாளுமன்ற பெரும்பான்மையின் ஊடாக, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
 
சிங்கப்பூரில் சிறிதுகாலம் வசித்த அவர், அங்கிருந்து தாய்லாந்து நோக்கி பயணித்திருந்தார்.
 
நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, சர்வதேச நாடுகள் புகலிடம் வழங்க மறுப்பு தெரிவித்திருந்ததாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.
 
சுமார் இரண்டு மாதங்களின் பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பினார்.
 
அமெரிக்க குடியுரிமை - கோட்டாபய ராஜபக்ஸ 
பட மூலாதாரம்,PMD
இந்த நிலையில், இலங்கைக்கு வருகை தந்த கோட்டாபய, கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வீட்டில் வசித்து வருகின்றார்.
 
இவ்வாறான நிலையில், அவர் அமெரிக்க குடியுரிமைக்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கோட்டாபய ராஜபக்ஷவினால் கைவிடப்பட்ட குடியுரிமையை, மீண்டும் வழங்குமாறு, அமெரிக்க அரசாங்கத்திடம் அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
எனினும், அமெரிக்க அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் இதுவரை பரிசீலிக்கவில்லை என உள்ளுர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தாருடன் தற்போது துபாய்க்கு சென்றுள்ளார்.