1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (15:41 IST)

கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் 14 நாள் தங்குவதற்கு அனுமதி

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள்கள் தங்குவதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்.

போராட்டக்காரர்களின் ஆவேசத்தைத் தொடர்ந்து சிங்கப்பூருக்குச் சென்று அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்ஷ, தங்களிடம் தஞ்சம் கேட்கவில்லை என்றும் அவருக்கு தஞ்சம் அளிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் பயணம் தொடர்பான பத்திரிகைகளின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் குடியேற்ற ஆணையம் நேற்று விளக்கம் அளித்தது. அந்த ஆணையம், "தனிப்பட்ட பயணமாக கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவருக்கு 14 நாட்கள் தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது.

பொதுவாக இலங்கையைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்கு வரும்போது, 30 நாள் வரை தங்குவதற்கான குறுகிய கால அனுமதிச் சீட்டு வழங்கப்படும். அதற்கு மேல் தங்குவதை நீட்டிக்க விரும்பினால், அவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டி இருக்கும்.

தகுதி அடிப்படையில் அவை தனித்தனியாகப் பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது. இதற்கிடையே, சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மக்கள், இலங்கையில் இயல்புநிலை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆட்சி மாற்றத்துடன் உறுதியான கொள்கை மாற்றமும் வர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். சிலர் ஒருவேளை சாப்பாட்டை தியாகம் செய்து, அதற்கான பணத்தை சேமித்து, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள்.

இலங்கையில் பெட்ரோல் தட்டுப்பாட்டுக்கு சைக்கிள் பயன்படும் என்பதால், வேறு சிலர் சைக்கிள்களை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வருகிறார்கள். நம்பகமான நபர்கள் மூலம் உதவி அனுப்புவதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.