வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (19:19 IST)

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்: #MeToo என்பதைவிட இது ஏன் பெரிய விஷயம்?

இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ள நிலையில், ``கிரிமினல் சட்ட அசோசியேசனில் உள்ள பெண்கள்'' என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ``அதிகாரம் மற்றும் அந்தஸ்து முக்கியத்துவத்தைக் கருத்திக் கொண்டு, விசாரணையின் போது மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி பதவியில் நீடிக்கக் கூடாது'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
புகார் தெரிவித்த அந்தப் பெண்மணி தலைமை நீதிபதியின் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார்.
 
இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் புகார் நிகழ்வுகளில் விசாரணை நடத்துவதற்கான நடைமுறையும், விதிமுறைகளும் உச்ச நீதிமன்றத்தாலேயே வகுக்கப் பட்டுள்ளன. ஆனால் இப்போது அவை அமல் செய்யப்படவில்லை. பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான `பணியிடத்தில் பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை செய்தல் மற்றும் குறைதீர்வு) சட்டம் 2013-ன் படி, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, விசாரணையின் போது தலைமை நீதிபதி பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பதவியில் இருக்கும்போது நிர்வாக செயல்பாடுகளில் தலைமை நிர்வாகி செல்வாக்கை காட்டக் கூடும் என்பதால் இது அவசியமானதாகிறது என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
பெண் வழக்கறிஞர்களுடன் சேர்த்து, இந்த அறிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது #மீ_டூ புகார் எழுந்தபோது, பாலியல் துன்புறுத்தல் என்ற அடாவடித்தனமான செயல்பாடுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, பிரசாரம் தீவிரமான போது அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியதாயிற்று.
 
 
ஏசியன் ஏஜ் மற்றும் இதர பத்திரிகைகளில் அவர் ஆசிரியராக இருந்தபோது பாலியல் துன்புறுத்தல் செயல்களில் ஈடுபட்டார் என்று 20 பெண் பத்திரிகையாளர்கள் புகார் கூறினர்.
 
தலைமை நீதிபதிக்கு எதிரான புகார், நீதித் துறைக்கு வைக்கப் பட்டிருக்கும் நெருக்கடியான பரிசோதனை. இது சமூக வலைதளங்களில் எழுந்துள்ள, பெயர் குறிப்பிடாத புகார் அல்ல. எழுத்துபூர்வ பத்திரம் மூலமாக, நீதிமன்றத்தின் மூலம் நியாயம் கேட்டு எழுந்துள்ள புகார்.
 
இந்த வழக்கின் மீதான விசாரணை, இதுவரை இல்லாத வகையில் ஒரு மைல்கல்லாக இருக்கப் போகிறது.
 
``இதை விசாரிப்பதற்கு நேர்மையானவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பு. ஏனென்றால் அவ்வாறு செய்யத் தவறினால் அது உச்ச நீதிமன்றத்தின் மாண்பைக் குறைக்கும் செயலாக அமைந்துவிடும்'' என்று இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார்.
 
இந்த விஷயத்தில் இதுவரை நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையில் குறை கூறப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடந்த விசாரணை,
 
பாலியல் துன்புறுத்தல் புகாரை வேறு திசைக்கு திருப்பும் வகையிலான `கலந்துரையாடலாக' இருந்தது என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுப்பப் படுகின்றன. தலைமை நீதிபதி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்த பெண்மணி பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியபோது, விசாரணைக்கு உத்தரவிடுவதற்குப் பதிலாக, அவசர விசாரணைக்காக சனிக்கிழமை ஓர் அமர்வு உருவாக்கப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதியே தலைவராக இருக்கிறார்.
 
``நீதித் துறையின் சுதந்திரம் தொடர்பான பொது முக்கியத்துவமான விஷயத்தைக் கையாள்வது'' என்று அதன் விசாரணைக்குரிய விஷயமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
 
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மனோஜ் மிட்டா, நீண்ட காலமாக உச்ச நீதிமன்றம் மற்றும் சட்ட விவகாரங்கள் பற்றி செய்திகள் சேகரித்து வருகிறார்.
 
இந்தப் பிரச்சினை பற்றி பிபிசியிடம் பேசிய அவர், விரைவாக ஏற்பாடு செய்யப்பட்ட விசாரணையில், உரிய நடைமுறைகள் பின்பற்றப் பட்டதற்கான அம்சங்கள் இல்லை என்று கூறினார்.
 
அமர்வில் பங்கேற்றதன் மூலம், தன் மீதான பிரச்சினை குறித்து தாமே நீதிபதியாக இருக்கக் கூடாது என்ற கோட்பாட்டை மீறியிருக்கிறார். நீதித் துறையில் தனக்குள்ள அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ள அவர், புகார் கொடுத்த பெண்ணின் ``முந்தைய கிரிமினல் செயல்பாடுகள்'' என்று குறிப்பிட்டதன் மூலம், பாதிக்கப்பட்டவர் மீது அவதூறு கூறுதல் மற்றும் பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்துதல் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்.
 
புகார் கொடுத்தவரிடமோ அல்லது அவர் தரப்பில் யாரிடமோ விசாரிக்கப்படவில்லை.
 
விரிவான பாலியல் துன்புறுத்தல் புகாரை, நீதித் துறையின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று காட்டுவதற்கு மேற்கொள்ளப் பட்டிருக்கும் முயற்சி, இதை மூடி மறைப்பதற்கான செயலாகக் கருதப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
 
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சில வழக்குகள் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் நிலையில், குறிப்பாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இவற்றை விசாரிக்க உள்ள நிலையில் இது நடந்திருக்கிறது என்றால், அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்முயற்சியால் விடுமுறையில் சிறப்பு விசாரணைக்கு ஏற்பாடு செய்திருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
 
இந்தப் பிரச்சினையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்கு மேத்தா மற்றும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலை தலைமை நீதிபதி சார்ந்திருக்கிறார் என்பது, நீதித் துறையின் சுதந்திரம் என்ற விஷயத்துடன் அவ்வளவாகப் பொருந்திப் போவதாக இல்லை.
 
இந்தப் புகார்கள் பற்றி விசாரிப்பதற்கு சிறப்புக் கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு, புகார்தாரர் கடிதம் எழுதியிருக்கிறார்.
 
பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரிப்பதற்கு, உச்ச நீதிமன்றத்தில் தற்போதுள்ள உள்ளார்ந்த புகார்கள் கமிட்டியால் இதை விசாரிக்க முடியாத நிலை இருக்கிறது.
 
ஆனால், பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு, மற்ற நீதிபதிகளை சம்மதிக்க வைக்கும் தார்மிக பொறுப்பு நீதிபதி இந்து மல்ஹோத்ராவுக்கு இருக்கிறது என்று அந்தக் கமிட்டியின் தலைவராக இருக்கும் இந்திரா ஜெய்சிங் கூறுகிறார்.
 
``பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நியாயமான விசாரணை நடைபெற உதவி செய்வது மற்றும் நீதி நடைமுறைகள் நடப்பதை உறுதி செய்ய வேண்டியது, பணி வழங்குநரின் பொறுப்பு என்று சட்டம் சொல்கிறது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புகார் கொடுத்தவருக்கு நீதியின் முன்பு வாய்ப்பு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்று முடிவு செய்வது, இப்போது நீதிபதிகளின் கைகளில் தான் இருக்கிறது.