புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (08:59 IST)

ஜெயலலிதா நினைவிடம் – உச்சநீதிமன்றம் முக்கியத்தீர்ப்பு !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் நினைவிடம் அமைப்பதற்குத் தடை விதிக்கவேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருக்கும்போதே கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினாக் கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது சமாதியில் அவருக்கு நினைவிடம் கட்ட முடிவு செய்த தமிழக அரசு அதற்காக 50 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த எம்.எல் ரவி என்பவர் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது. அந்த வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். ஆதலால் அவருக்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணமாக அமையும். எனவே இதற்குத் தடை விதிக்கவேண்டுமெனக் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர் ‘ ஜெயலலிதா வழக்கு நிலுவையில் இருக்கும்போதே உயிரிழந்துவிட்டார். அதன் பின்னர் அவர் மீதான் குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. மேலும் நினைவிடம் அமைப்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. முறையான அனுமதி வாங்கியே இந்த நினைவிடம் கட்ட்ப்பட இருக்கிறது’ எனப் பதிலளித்தார்.

இதனை ஏற்று உயர்நீதிமன்றம் ரவியின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ரவி. நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் ‘ தமிழக அரசின் கொள்கை முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது ‘ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.